மும்பை: ‘ஸ்கூபா டைவிங்’ மூலமாக கடலில் குப்பை சேகரித்த நடிகை பரிணீதி சோப்ரா, கடல்வாழ் உயிரினங்களை காப்பாற்ற வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளார். பாலிவுட் நடிகையும், ‘ஸ்கூபா டைவிங்’ (சுவாசிக்க தேவையான வசதிகளுடன் நீருக்கடியில் பயணித்தல்) பயிற்றுவிப்பாளரான பரிணீதி சோப்ரா, கடலில் தூக்கி எறியப்படும் பிளாஸ்டிக் கழிவுகள் மற்றும் குப்பைகளை சேகரிக்கும் வீடியோவைப் பகிர்ந்துள்ளார். அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், ‘மகிழ்ச்சியாக கடலில் டைவிங் செய்தேன்; குப்பை கழிவுகளை சேகரிப்பதற்காக டைவிங் செய்தேன். மாற்றத்தை உருவாக்குவதில் என்னுடன் சேரவும்’ என்று பதிவிட்டுள்ளார். பரிணீதி சோப்ரா கடலுக்குள் சென்று குப்பைகளை எடுத்து வரும் காட்சிகள் கேமராவில் பதிவு செய்யப்பட்டுள்ளது. அந்த வீடியோவின் தலைப்பில், ‘ஒவ்வொரு ஆண்டும் சுமார் 14 மில்லியன் டன் பிளாஸ்டிக் கழிவுகள் கடலில் சேருகிறது. இதனால் ஆயிரக்கணக்கான கடல்வாழ் உயிரினங்கள் அழிந்து போக வாய்ப்புள்ளது. குறிப்பாக கடல் ஆமைகள், டால்பின்கள், சீல்கள் பெருமளவில் பாதிக்கும். கடலைக் காப்பாற்றுவதில் எனது பங்கைச் செய்ததில் நான் மகிழ்ச்சியடைகிறேன்’ என்று தெரிவித்துள்ளார்.