திருச்சி மாவட்டம் சமயபுரம் அருகே தாளக்குடி ஊராட்சி, மருதமுத்து நகரை சேர்ந்த சேகர் – மகாலெட்சுமி தம்பதியினரின் மகன் 2 வயது சிறுவன் சாய் தருண். இவர் உடல் அலர்ஜியால் பாதிக்கப்பட்டு உடலில் ஒருவிதமான புண் ஏற்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.
இந்நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை இரவு சிறுவனின் தாய் மகாலெட்சுமி சிறுவன் சாய் தருணிற்கு நூடுல்ஸ் சமைத்து கொடுத்துவிட்டு மீதமுள்ள நூடுல்ஸை ஃப்ரிட்ஜில் வைத்துள்ளார். மறுநாள் சனிக்கிழமை காலை தாய் மகாலெட்சுமி சிறுவனுக்கு காலை உணவாக மீண்டும் ஃப்ரிட்ஜில் இருந்த நூடுல்ஸை எடுத்து கொடுத்துள்ளார்.
இதனை உண்ட சிறுவன் அன்று மாலை வரை வேறு எந்த உணவையும் உண்ணாமல் உடல் சோர்வாக காணப்பட்டுள்ளார். இதனைத்தொடர்ந்து அன்று மாலை சிறுவன் திடீரென வாத்தி எடுத்துவிட்டு சுருண்டு கீழே விழுந்தார். இதனை பார்த்த அவனது தாய் மகாலெட்சுமி சிறுவனை தூக்கிக்கொண்டு பேருந்தில் ஏறி டோல்கேட் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றார். அங்கு சிறுவனை பரிசோதனை செய்த மருத்துவர்கள் சிறுவன் இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
இதுகுறித்து தகவலறிந்த கொள்ளிடம் போலீசார் சிறுவன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தினர். கொள்ளிடம் போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் ஏற்கனவே உடல் அலர்ஜியால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த சிறுவன் துரித உணவான நூடுல்ஸை உண்டதால் ஃபுட் பாய்சன் ஏற்பட்டு இறந்திருக்கலாம் என்று சந்தேகிக்கின்றனர்.
செய்தி: க. சண்முகவடிவேல்