அக்னிபத் திட்டத்திற்கு எதிராக பல்வேறு அமைப்புகள் இன்று பாரத் பந்திற்கு அழைப்பு விடுத்துள்ளன.
பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய பாஜக அரசு, அக்னிபத் என்ற ராணுவத்தில் சேரும் திட்டத்தை கொண்டு வந்துள்ளது. இந்தத் திட்டத்தில், ராணுவத்தில் சேரும் இளைஞர்களுக்கு 4 ஆண்டுகள் பயிற்சி அளிக்கப்படும். 4 ஆண்டுகள் பயிற்சி முடிந்த பிறகு, 25 சதவீத இளைஞர்கள் மட்டுமே நிரந்தரப் பணியில் அமர்த்தப்படுவர். 75 சதவீத இளைஞர்கள் பணியில் இருந்து விடுவிக்கப்படுவர்.
4 ஆண்டுகளுக்கு இளைஞர்களுக்கு ஊதியம் வழங்கப்படும். ஆனால் 25 சதவீத இளைஞர்கள் மட்டுமே நிரந்தரம் ஆக்கப்படுவதால் மற்ற இளைஞர்களின் எதிர்காலம் பாதிக்கப்படக் கூடும் என, கூறப்படுகிறது. இதனால் இந்தத் திட்டத்திற்கு இளைஞர்கள் எதிர்ப்புத் தெரிவித்து போராட்டம் நடத்தி வருகின்றனர். மேலும், காங்கிரஸ், திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளும் இந்த திட்டத்தை கைவிட வேண்டும் என, மத்திய அரசிடம் வலியுறுத்தி உள்ளன.
இந்நிலையில் இன்று, அக்னிபத் திட்டத்திற்கு எதிராக பல்வேறு அமைப்புகள் சார்பில் பாரத் பந்த் எனப்படும் முழு அடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்தப் போராட்டம் காரணமாக, நாடு முழுவதும் 500 ரயில்களை மத்திய ரயில்வே நிர்வாகம் ரத்து செய்துள்ளது. இதனால் ரயில்வேக்கு கடும் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.
தலைநகர் டெல்லியின் சில பகுதிகளில், கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. மேலும், மாநிலத்தின் எல்லைப் பகுதிகளில் அதிகளவில் போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர்.
டெல்லியில் உள்ள ஜந்தர் மந்தர் பகுதியில் காங்கிரஸ் தலைவர்கள் சத்யாகிரகப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதே போல் உத்தர பிரதேச மாநிலம், பஞ்சாப் ஆகிய மாநிலங்களில் பல்வேறு பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது.
தெலங்கானா, ஹரியானா, மேற்கு வங்கம், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில், காவல் துறையினர் தயார் நிலையில் வைக்கப்பட்டு உள்ளனர். ஜார்க்கண்ட் மாநிலத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது.