புதுடெல்லி: அக்னிபாதை திட்டத்துக்கு எதிராக நாடு தழுவிய பாரத் முழு அடைப்பு போராட்டம் காரணமாக சில மாநிலங்களில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. சுமார் 500 ரயில்கள் இன்று நிறுத்தப்பட்டுள்ளன. வன்முறையை கட்டுப்படுத்த போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.
ராணுவத்தின் முப்படைகளில் 4 ஆண்டு சேவையாற்றும் ‘அக்னிபாதை’ திட்டத்தை மத்திய அரசுஅறிவித்துள்ளது. இந்த திட்டத்துக்குஎதிராக நாடு முழுவதும் போராட்டம் தீவிரம் அடைந்துள்ளது. திட்டத்தைக் கைவிடக் கோரி பிஹார் உட்பட பல்வேறு மாநிலங்களில் இளைஞர்கள் போராட்டம் நடத்திவருகின்றனர். ரயில்கள் எரிப்பு உள்ளிட்ட வன்முறைச் சம்பவங்களும் நடந்துள்ளன.
இந்நிலையில் இன்று, அக்னிபாதை திட்டத்திற்கு எதிராக பல்வேறு அமைப்புகள் சார்பில் இன்று பாரத் பந்த் எனப்படும் முழு அடைப்பு போராட்டம் நடத்த அழைப்பு விடுக்கப்பட்டது. அதன்படி நாட்டின் பல பகுதிகளிலும் போராட்டங்கள் நடந்து வருகின்றன. நாடு முழுவதும் 500 ரயில்களை மத்திய ரயில்வே நிர்வாகம் ரத்து செய்துள்ளது.
போராட்டம் காரணமாக டெல்லியின் சில பகுதிகளில், கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. தேவையான முன்னெச்சரிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. அதிகளவில் போலீஸார் குவிக்கப்பட்டு உள்ளனர்.
தெலங்கானா, ஹரியாணா, மேற்கு வங்கம், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில், காவல் துறையினர் தயார் நிலையில் வைக்கப்பட்டு உள்ளனர். ஜார்க்கண்ட் மாநிலத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
டெல்லியில் இளைஞர் காங்கிரஸார் ரயில் பாதையை மறித்து ரயிலை நிறுத்தி போராட்டம் நடத்தினர். நேஷனல் ஹெரால்டு விவகாரத்தில் ராகுல் காந்தியிடம் அமலாக்கத்துறை விசாரணை நடத்துவதை எதிர்த்து ஏற்கெனவே போராட்டம் நடத்தி வரும் காங்கிரஸ் தொண்டர்கள் இன்று அக்னிபாதை விவகாரத்தையும் கையில் எடுத்து ரயில் மறியல் நடத்தினர்.
டெல்லி மட்டுமின்றி தேசிய தலைநகர் பகுதியான குருகிராம், நொய்டா போன்ற இடங்களிலும் போராட்டம் காரணமாக பாதுகாப்பு சோதனைகள் நடைபெற்றன. இதனால் சாலைகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. கார்கள் மற்றும் பேருந்துகள் நீண்ட வரிசையில் காத்திருந்தன.
ஜார்க்கண்ட் மாநிலத்தில் அனைத்து கல்வி நிறுவனங்களும் மூடப்பட்டுள்ளன. உ.பி. உள்ளிட்ட மாநிலங்களில் 22 ரயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டன. இதனால் பயணிகள் ரயில் நிலையங்களில் பரிதவித்து வருகின்றனர். மேற்கு வங்கத்தில் போர்க்களமான ஹவுராவில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
ஹரியாணாவில் பரிதாபாத் மற்றும் ரோதக் மாவட்டங்களில் ஆர்ப்பாட்டங்கள் இன்றும் தொடர்ந்தன. ஹரியாணாவில் உள்ள அம்பாலா, ரேவாரி மற்றும் சோனிபட் மற்றும் பஞ்சாபில் உள்ள லூதியானா, ஜலந்தர் மற்றும் அமிர்தசரஸ் உள்ளிட்ட ரயில் நிலையங்களில் போலீஸார் அதிக அளவில் குவிக்கப்பட்டுள்ளனர்.
பஞ்சாபில் லூதியானா ரயில் நிலையத்தில் சனிக்கிழமை வன்முறை வெடித்ததை அடுத்து சாலைகளில் பெருமளவு போலீஸார் குவிக்கப்பட்டனர். ஜலந்தர் ரயில் நிலையத்தில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டது.