டெல்லி: அக்னிபாதை திட்டத்திற்கு எதிராக பல்வேறு இளைஞர் அமைப்புகள் நாடு தழுவிய அளவில் இன்று போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளனர். இதன் ஒருபகுதியாக, டெல்லி ஜந்தர்மந்தர் மைதானத்தில் காங்கிரஸ் தலைவர்கள் சத்தியாகிரக போராட்டத்தில் ஈடுபட உள்ளனர். டெல்லி ஜந்தர்மந்தர் மைதானத்தில் காலை 10.30 மணிக்கு தொடங்கும் இந்த போராட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவர்கள் பங்கேற்க உள்ளனர். நேஷனல் ஹெரால்டு வழக்கில் ராகுல் காந்தியை அமலாக்கத்துறையினர் விசாரிப்பதற்கு எதிராகவும் இந்த போராட்டம் நடத்தப்படுகிறது. இதனிடையே அக்னிபாதை திட்டம் குறித்து இளைஞர்களிடம் விளக்கப்பட வேண்டும் என்றும், நாடாளுமன்றதில் விவாதிக்கப்பட வேண்டும் என்றும் காங்கிரஸ் கட்சி வலியுறுத்தியுள்ளது. அக்னிபாதை திட்டத்தை வாபஸ் பெற வலியுறுத்தி, மாலை 5 மணிக்கு காங்கிரஸ் தலைவர்கள் குடியரசு தலைவரை சந்தித்து மனு அளிக்க உள்ளனர். நேஷனல் ஹெரால்டு வழக்கு விசாரணைக்கு எதிர்ப்பு தெரிவித்து நடத்தப்பட்ட போராட்டத்தின்போது காங்கிரஸ் எம்.பி.ஜோதிமணி தாக்கப்பட்டது குறித்தும் குடியரசு தலைவரிடம் புகார் அளிக்கப்படும் என்றும் அஜய் மக்கான் கூறியுள்ளார். காங்கிரஸாரின் போராட்டத்தால் டெல்லி நகர் முழுவதும் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அக்பர் சாலை, மோதிலால் நேரு உள்ளிட்ட சாலைகளில் மதியம் 12 மணிவரை யாரும் பயணம் மேற்கொள்ள வேண்டாம் என்று போலீசார் கேட்டுக்கொண்டுள்ளனர்.