புதுடெல்லி: காங்கிரஸ் கட்சியின் உயர்மட்ட தலைவர்கள் நேற்று குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தை சந்தித்தனர். சந்திப்பில், அக்னி பாதை திட்டத்தை திரும்பப் பெறக் கோரிய போராட்டத்தின் போது, கட்சி எம்.பி.க்களை போலீஸார் மோசமாக நடத்தப்பட்ட விவகாரம், ராகுல் காந்தியை அமலாக்கத்துறை விசாரணை செய்கின்ற விவகாரம் போன்றது குறித்து பேசினர்.
காங்கிரஸ் பிரதிநிதிகள் குழுவில் ராஜ்யசபா எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே, மக்களவை காங்கிரஸ் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி, ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட், சத்தீஸ்கர் முதல்வர் பூபேஷ் பாகேல், மூத்த தலைவர்கள் பி.சிதம்பரம், ஜெய்ராம் ரமேஷ், கே.சி.வேணுகோபால் ஆகியோர் இடம்பெற்றனர்.
சந்திப்புக்குப் பின் பேசிய மல்லிகார்ஜுன் கார்கே, “அக்னி பாதை திட்டம் குறித்து மத்திய அரசு எந்த ஆலோசனையும் செய்யப்படவில்லை. பாராளுமன்றத்திலும் இந்த திட்டம் சமர்பிக்கப்படவில்லை. இதை ஜனாதிபதியிடம் தெரிவித்தோம். இது எங்களின் ஜனநாயக உரிமைகளை மீறும் செயல் என்று நாங்கள் கூறினோம். இதனை கவனத்தில் கொள்ளுமாறு ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது” என்று தெரிவித்தார்.
ப.சிதம்பரம் பேசுகையில், “காங்கிரஸ் தலைவர்கள் மீதான போலீஸ் அட்டூழியங்கள் குறித்து ஜனாதிபதியிடம் தெரிவித்தோம். இது குறித்து விசாரணை நடத்தி, இந்த விவகாரத்தை நாடாளுமன்ற சிறப்புரிமைக் குழுவுக்கு அனுப்புமாறு குடியரசுத் தலைவரிடம் கேட்டுக் கொண்டுள்ளோம். இதுபற்றி பரிசீலித்து அரசின் கவனத்திற்கு கொண்டு செல்வதாக ஜனாதிபதி உறுதியளித்துள்ளார்” என்று தெரிவித்தார்.