புதுடெல்லி: அக்னி பாதை திட்ட எதிர்ப்பு போராட்டங்களால் ரயில்வே துறைக்கு ரூ.700 கோடி இழப்பு ஏற்பட்டிருக்கிறது. பிஹாரில் இதுவரை 718 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
முப்படைகளில் அறிமுகம் செய்யப்பட்டிருக்கும் அக்னி பாதை திட்டத்துக்கு எதிராக வடமாநிலங்களில் தொடர் போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. பிஹா ரில் ரயில் பெட்டிகள், ரயில் நிபோராட்டம்லையங்கள் சேதப்படுத்தப் பட்டுள்ளன. அந்த மாநிலத்தில் 60 ரயில் பெட்டிகள், 11 என்ஜின்கள் எரிக்கப்பட்டுள்ளன. ஏராளமான ரயில்வே நிலையங்கள் சூறையாடப்பட்டிருக்கிறது.
ஒரு ரயில் பெட்டியை தயாரிக்க ரூ.80 லட்சமும், ஏசி ரயில் பெட்டிகளை தயாரிக்க ரூ.3.5 கோடியும் செலவாகிறது. ஒரு ரயில் என்ஜினை தயாரிக்க ரூ.20 கோடி செலவு ஏற்படும். மேலும் போராட்டம் காரணமாக சுமார் 60 கோடி பயணிகள் தங்களது டிக்கெட்டை ரத்து செய்துள்ளனர்.
கடந்த சில நாட்களாக, தினசரி 350 ரயில் சேவைகள் நிறுத் தப்பட்டன. ஒட்டுமொத்தமாக ரயில்வே துறைக்கு ரூ.700 கோடி இழப்பு ஏற்பட்டிருக்கிறது என்று ரயில்வே வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
பிஹாரில் ரயில்வே சொத்து களை சேதப்படுத்தியவர்கள் மீதுமாநில போலீஸார் வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர். அந்த வகையில் மாநிலம் முழுவதும் 25 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, இதுவரை 718 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பஞ்சாப், ஹரியாணா, பிஹார், உத்தர பிரதேசம், குஜராத், உத்தராகண்ட், இமாச்சல பிரதேசம், ராஜஸ்தான் உள்ளிட்ட பல்வேறுமாநிலங்களில் நேற்றும் போராட்டங்கள் நடத்தப்பட்டன. பலத்த போலீஸ் பாதுகாப்பு காரணமாக வன்முறைகள் தடுக்கப்பட்டன. முன்னெச்சரிக்கையாக நாடு முழுவதும் ரயில் நிலையங்களில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருக்கிறது.
குஜராத்தின் அகமதாபாத்தில் நேற்று சுமார் 100-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் திரண்டு, அக்னி பாதை திட்டத்துக்கு எதிராகபோராட்டம் நடத்தினர். அனுமதியின்றி போராட்டம் நடத்தியதாக அவர்களில் 14 பேர் கைது செய்யப்பட்டனர்.