புதுடெல்லி : அக்னி பாதை திட்டத்திற்கு எதிரான போராட்டங்கள் வேதனை அளிப்பதாக மஹிந்திரா குழுமத்தின் தலைவர் ஆனந்த் மஹிந்திரா அறிவித்துள்ளார். முப்படைகளில் 4 ஆண்டு குறுகிய கால சேவை அடிப்படையில் 17.5 வயது முதல் 21 வயதுக்கு உட்பட்ட இளம் வீரர்களை சேர்க்கும் அக்னி பாதை திட்டத்தை ஒன்றிய அரசு கடந்த 14ம் தேதி அறிமுகப்படுத்தியது. இத்திட்டத்தில் சேரும் இளைஞர்களில் 75 சதவீதம் பேர் 4 ஆண்டுக்குப் பின் பணியிலிருந்து விடுவிக்கப்படுவார்கள், அவர்களுக்கு பென்ஷன் வழங்கப்படாது. இதனால், அக்னிபாதை திட்டத்திற்கு நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. பீகார், உத்தரப் பிரதேசம், ராஜஸ்தான் உள்ளிட்ட வடமாநிலங்களில் போராட்டத்தில் குதித்த இளைஞர்கள் ரயில்களை எரித்து வன்முறையில் ஈடுபட்டதால் பதற்றம் நிலவுகிறது. அக்னி பாதை திட்டத்தை ஒன்றிய அரசு திரும்பப் பெற வலியுறுத்தி காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. இந்த எதிர்ப்புகளுக்கு மத்தியில் அக்னி பாதை திட்டத்தை வரவேற்று மஹிந்திரா குழுமம் தலைவர் ஆனந்த் மஹிந்திரா கருத்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக ட்விட்டரில் கருத்து பதிவிட்டுள்ள அவர், ‘அக்னி பாதை திட்டத்திற்கு எதிரான வன்முறையால் வருத்தம் அடைந்தேன். அக்னிவீரர்கள் பெறும் ஒழுக்கம் மற்றும் திறன்கள், அவர்களை சிறந்த வேலைவாய்ப்பிற்கு ஏற்றவர்களாக மாற்றும். அத்தகைய பயிற்சி பெற்ற, திறமையான இளைஞர்களை பணியமர்த்தும் வாய்ப்பை மஹிந்திரா குழுமம் வரவேற்கிறது. கார்ப்பரேட் துறையில் அக்னிவீரர்களுக்கு வேலைவாய்ப்புகள் நிறைய உள்ளன. தலைமைத்துவம், குழுவாக செயல்படுதல் மற்றும் உடல் பயிற்சி ஆகியவற்றுடன், அக்னிவீரர்கள் தொழில்துறைக்கு தயாரான தொழில்முறை தீர்வுகளை வழங்குவார்கள்’, எனத் தெரிவித்துள்ளார்.