வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி: அக்னிபத் திட்டத்தில் பயிற்சி பெற்ற அக்னி வீரர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்க மஹிந்திரா குழுமம் விரும்புவதாக அந்நிறுவன அதிபர் ஆனந்த் மஹிந்திரா தெரிவித்துள்ளார்.
ராணுவத்தில் இளைஞர்களை அதிகளவு சேர்க்கும் விதமாக அக்னிபத் திட்டத்தை கடந்த வாரம் மத்திய அரசு அறிமுகப்படுத்தியது. இத்திட்டத்தின் கீழ் ராணுவத்தில் 4 ஆண்டு காலத்திற்கு ஒப்பந்த அடிப்படையில் வீரர்கள் வேலைக்கு எடுக்கப்படுவார்கள். ஆனால், இதில் இளைஞர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாக உள்ளதாக பீஹார், உ.பி., டில்லி உள்ளிட்ட மாநிலங்களில் இளைஞர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். ஆனால், அக்னிபத் திட்டத்தில் பணியாற்றிய ‘அக்னி வீரர்களுக்கு’ பல்வேறு வேலைவாய்ப்பு திட்டங்களில் முன்னுரிமை அளிக்கப்படும் என முப்படைகளின் அதிகாரிகள் உட்பட பலரும் உறுதியளித்தனர்.
இந்த நிலையில், மஹிந்திரா நிறுவன அதிபரான ஆனந்த் மஹிந்திரா, அக்னிபத் திட்டத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளார். அவர் கூறுகையில், ‛அக்னிபத் திட்டம் தொடர்பாக நடக்கும் வன்முறைகள் வருத்தம் அளிக்கின்றன. கடந்த ஆண்டு இத்திட்டம் குறித்து ஆலோசிக்கப்பட்ட போது நான் கூறியதை திரும்பவும் கூறுகிறேன். அக்னிவீரர்களுக்கு வழங்கப்படும் திறன் பயிற்சியும், ஒழுக்கமுமே அவர்களை வேலைக்கு எடுப்பதற்கான தகுதியை கொடுக்கின்றன. இதுபோன்ற பயிற்சி பெற்ற, திறமையான இளம் நபர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்க மஹிந்திரா குழுமம் விரும்புகிறது’ எனத் தெரிவித்தார்.
ஆனந்த் மஹிந்திராவின் இந்த கருத்துக்கு பயனர் ஒருவர், ‛அக்னிவீரர்களுக்கு என்ன விதமான வேலைகள் கிடைக்கும்?’ என கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த ஆனந்த் மஹிந்திரா, ‛கார்ப்பரேட் துறையில் அக்னிவீரர்களுக்கு நிறைய வேலைவாய்ப்புகள் உள்ளன. தலைமை பண்பு, குழு முயற்சி, உடற்பயிற்சி போன்றவற்றால் தொழில்துறைக்கு தேவையான திறன்களுடன் அக்னிவீரர்கள் வருகின்றனர். நிர்வாகம் முதல் விநியோக அமைப்பு வரை பல துறைகளில் வேலை கிடைக்கும்’ என்றார்.
Advertisement