கராச்சி,
தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான 20 ஓவர் தொடரில் முதல் இரண்டு போட்டிகளில் இந்திய அணி தோல்வி அடைந்ததால் ரிஷப் பண்ட் கேப்டன்சி குறித்து பலர் விமர்சனம் செய்தனர். இந்த தொடர் 2-2 என்ற கணக்கில் சமநிலையில் முடிந்தது.
குறிப்பாக அவர் கேப்டன் பொறுப்பை ஏற்ற காரணத்தால் அவர் தனது தனிப்பட்ட பேட்டிங்கில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த திணறி வருவதாக விமர்சனம் எழுந்தது. இந்த நிலையில் பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரர் டேனிஷ் கனேரியா ரிஷப் பண்ட் குறித்து பேசியுள்ளார்.
பண்ட் குறித்து அவர் கூறுகையில், ” நான் அவருடைய விக்கெட் கீப்பிங் பற்றி விவாதிக்க விரும்புகிறேன். நான் ஒரு விஷயத்தை உணர்ந்து கொண்டேன். வேகப்பந்து வீச்சாளர் பந்துவீசும்போது, அவர் மிகவும் தாழ்வாக குனிந்து அமரமாட்டார். அவர் அதிக எடை கொண்டவராகத் தோன்றுகிறார். மேலும் அவரது மொத்த எடை அவர் விரைவாக உயரும் திறனைக் கட்டுப்படுத்துகிறது. இது அவரது உடற்தகுதி குறித்த கேள்வியை எழுப்புகிறது. ரிஷப் பந்த் முழு உடல் தகுதியுடன் இருக்கிறாரா? ” என தெரிவித்தார்.