கொழும்பு : இலங்கையில் அதிபர் கோத்தபய ராஜபக்சே பதவி விலகக் கோரி தலைநகர் கொழும்பில் உள்ள அவரது அலுவலகத்திற்குச் செல்லும் அனைத்து வழிகளையும் போராட்டக்காரர்கள் மூடியதால் பதற்றம் ஏற்பட்டது.
நம் அண்டை நாடான இலங்கையில் கடும் அன்னியச் செலாவணி பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதனால் அத்தியாவசிய பொருட்களை இறக்குமதி செய்ய முடியாமல், பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு, மின்வெட்டு, விலைவாசி உயர்வு உள்ளிட்ட பல நெருக்கடிகளில் சிக்கியுள்ளது.இதற்கு காரணம் அதிபர் கோத்தபய ராஜபக்சே என குற்றம் சாட்டும் பொதுமக்கள், அவர் பதவி விலக வலியுறுத்தி, கொழும்பில் உள்ள அவரது அலுவலக வாயிலை முற்றுகையிட்டு, 73 நாட்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் நேற்று போராட்டக்காரர்கள் திடீரென, கோத்தபய ராஜபக்சே அலுவலகத்திற்கு செல்லும் மீதி இருந்த இரண்டு வழிகளையும் அடைத்தனர். இதனால் நிதியமைச்சகம், கருவூலம் இருக்கும் பகுதிக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. நேற்று இலங்கைக்கு நிதியுதவி வழங்குவது குறித்து ஆலோசிக்க சர்வதேச நிதியத்தின் பிரதிநிதிகள் வர இருந்த சூழலில், அதிபர் அலுவலகத்தின் அனைத்து வழிகளையும் போராட்டக்காரர்கள் மூடியதால் பதற்றம் ஏற்பட்டது.
உடனே விரைந்து வந்த போலீசார் தடைகளை அகற்றி, போராட்டத்தில் ஈடுபட்டோரை விரட்டினர். இந்த போராட்டத்திற்கு காரணமான ஒரு புத்த துறவி, நான்கு பெண்கள் உள்ளிட்ட 21 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்து உள்ளனர்.
Advertisement