சென்னை: “கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் உறுதியாக பொதுக்குழுவில் கலந்துகொள்வார். கருத்துகளைச் சொல்வார். பொதுக்குழு என்ன முடிவு எடுக்கிறதோ, ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர், இங்கு இருக்கின்ற அனைவரும் ஏற்றுக்கொள்வோம்” என்று அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி கூறியுள்ளார்.
அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியது: “வரும் 23.6.2022 அன்று அதிமுகவின் பொதுக்குழுக் கூட்டப்பட வேண்டும் என்று கட்சியின் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் மற்றும் கட்சியின் தலைமைக்கழக நிர்வாகிகள் ஆகியோரின் ஆலோசனையின் பேரில் பொதுக்குழுக் கூட்டம் கூட்டப்பட்டுள்ளது.
அந்தக் கூட்டத்திற்கு வருகை தரவேண்டி, மாவட்டச் செயலாளர்கள், ஒன்றிய கழக செயலாளர்கள், நகர கழக செயலாளர்கள், பேரூர் மற்றும் பகுதிக் கழகச் செயலாளர்கள், மற்றும் தலைமைக் கழக நிர்வாகிகளுக்கு, முறையாக தலைமைக் கழகத்திலிருந்து கடிதங்கள் பதிவு தபாலில் அனுப்பப்பட்டு, அனைத்து பொதுக்குழு உறுப்பினர்களும், கடிதத்தை பெற்றுக் கொண்டதற்கான அத்தாட்சிக் கடிதம் தலைமைக் கழகத்திற்கு வந்துவிட்டது. எனவே, திட்டமிட்டப்படி, அதிமுக பொதுக்குழு ஸ்ரீவாரு மண்டபத்தில், கட்சியின் நிர்வாகிகள், தொண்டர்களின் எழுச்சியோடு, மகிழ்ச்சியோடு உறுதியாக நடைபெறும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்” என்றார்.
கூட்டத்தை தள்ளிவைக்க கோரி ஓபிஎஸ் கடிதம் குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், “துணை ஒருங்கிணைப்பாளர் கடிதம் அனுப்பியதாக கூறுகிறீர்கள். நானும் ஒரு துணை ஒருங்கிணைப்பாளர், அதோடு பொதுக்குழு உறுப்பினர். ஆனால், இதுவரை அந்தக் கடிதம் எனக்கு வரவில்லை. அந்தக் கடிதத்தின் சாராம்சம் என்னவென்று எனக்கு தெரியாது.
அந்தக் கடிதம் எழுதியிருப்பதாக துணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கம் கூறியிருக்கிறார். எங்களுக்கு தெரியாது. கடிதம் கிடைத்திருந்தால், நாங்கள் ஊடகங்களைச் சந்தித்திருக்கிற இந்த வேளையில், இணை ஒருங்கிணைப்பாளர் அதுதொடர்பாக எங்களுக்கு சொல்லியிருப்பார். எனவே, எங்களுக்கு தெரியாத ஒரு நிகழ்வு குறித்து விளக்கம் அளிக்க தேவையில்லை என்று நினைக்கிறேன்.
இந்த நிகழ்வினுடைய முன்னோட்டமாக இதுவரையில் இல்லாமல், மாவட்டச் செயலாளர்கள் கூட்டம், ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் உத்தரவின் அடிப்படையில் 14.6.2022 அன்று நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில் இறுதியாக பேசிய, கருத்துகளைக் கூறிய ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ், கடந்த இரண்டு ஆண்டு காலமாக கரோனா இருந்த காரணத்தால், பொதுக்குழுவை கூட்ட முடியவில்லை. இப்போது உட்கட்சி தேர்தல் முடிந்திருக்கிறது. இத்தேர்தலுக்கு முறையாக பொதுக்குழுவில் அங்கீகாரம் பெற்று, தேர்தல் ஆணையத்திற்கு அனுப்ப வேண்டும். எனவே, இதில் சிறப்பு அழைப்பாளர்களை யாரும் அனுமதிக்கக்கூடாது. பொதுக்குழு உறுப்பினர்களை மட்டும் அழைத்து, இந்த பொதுக்குழுவை முடித்துவிட்டு, அங்கு கொண்டுவரப்படக்கூடிய தீர்மானங்களை தேர்தல் ஆணையத்துக்கு அனுப்ப வேண்டும் என்று கூறினார்.
ஒருங்கிணைப்பாளர் ஒப்புதல் இல்லாமல் இந்தக் கூட்டம் நடைபெறாது. கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பாக கூட , இந்த பொதுக்குழுவில் என்னென்ன தீர்மானங்கள் கொண்டு வரவேண்டுமென்று, ஏற்கெனவே அமைக்கப்பட்ட குழுவில் அவரும் வந்து அமர்ந்து தீர்மானங்களில் கொண்டுவர வேண்டிய மாற்றங்கள் தொடர்பாக கருத்துகளை சொல்லி, முடிவெடுக்கப்பட்டது. 14-ம் தேதி நடத்தப்பட்ட கூட்டத்தில், சிறப்பு அழைப்பாளர்களை அழைக்கக்கூடாது என்று முடிவெடுக்கப்பட்டது. ஒருங்கிணைப்பாளரே இந்த முடிவை அறிவித்தார். இந்த நிலையில் இன்று புதிதாக ஒரு கருத்து சொல்வதற்கு என்ன காரணம் என்று எங்களுக்கு தெரியவில்லை.
அதிமுகவை ஆரம்பித்த எம்ஜிஆர் காலத்திலிருந்து கட்சிக்காக பணியாற்றிய முன்னணி தலைவர்கள் அனைவரும் இங்கு உள்ளனர். இவ்வளவு சக்தி வாய்ந்த இந்த அமைப்பு இங்கிருக்கின்றபோது, பொதுக்குழுக் கூட்டத்திற்கு தடை கோரி சம்பந்தம் இல்லாத நபர்கள் கொடுக்கிற கடிதத்துக்கு நாங்கள் பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை.
ஒற்றைத் தலைமை விவகாரம் என்பது பொதுக்குழுவில் நடக்கக்கூடிய விவகாரம், அதை ஊடகங்களுக்கு சொல்ல வேண்டியது கட்சிக்கு அழகல்ல. அதுதொடர்பாக கேள்வி எழுப்புவதும் அழகல்ல. ஒருசில சந்தர்ப்பவாதிகள், இந்த கட்சிக்கு களங்கம் ஏற்படுத்த முயற்சிக்கிறார்கள், காலம் அவர்களுக்கு சரியான தண்டனை வழங்கும். கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் நீண்ட காலமாகவே இந்தக் கட்சியில் இருக்கின்றவர். இந்தக் கட்சியில் பல்வேறு பதவிகளை வகித்தவர். இப்போதும் ஒருங்கிணைப்பாளராக இருந்துகொண்டு, நாங்கள் தலைவராக ஏற்றக்கொண்டிருக்கின்ற தலைவர், உறுதியாக வருவார். பொதுக்குழுவில் கலந்துகொள்வார். கருத்துக்களைச் சொல்வார். பொதுக்குழு என்ன முடிவு எடுக்கிறதோ, ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர், இங்கு இருக்கின்ற அனைவரும் ஏற்றுக்கொள்வோம்” என்று அவர் கூறினார்.
இந்தச் சந்திப்பின்போது, அதிமுக மாநிலங்களவை உறுப்பினர் சி.வி.சண்முகம், முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, செங்கோட்டையன், திண்டுக்கல் சீனிவாசன், தங்கமணி, நத்தம் விஸ்வநாதன், ஆர்.பி. உதயகுமார், எம்.ஆர்.விஜயபாஸ்கர், சி.விஜயபாஸ்கர் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.