‘தமிழ் மக்களின் வாழ்வியலை மிக எதார்த்தமாக திரையில் காட்சிப்படுத்தக்கூடிய மிக சில இயக்குநர்களுள் ஒருவர் சீனு ராமசாமி. நடிகர் விஜய் சேதுபதியை மக்கள் செல்வனாக மாற்றியவர். இவர்கள் இருவரின் கூட்டணியில் உருவாகியிருக்கிற அடுத்த படமான `மாமனிதன்’ விரைவில் திரைக்கு வரவிருக்கின்றது. அத்திரைப்படம் குறித்தும் தன் சினிமா வாழ்க்கை பற்றியும் நம்மிடையே பல சுவாரஸ்யமான தகவல்களைப் பகிர்ந்துகொள்கிறார்.
உங்கள் படத்தில் வரும் நிலப்பரப்புகளையே ஒரு கதை மாந்தர் என்று சொல்லலாம். ஒவ்வொரு படத்திலும் வெவ்வேறு இடங்களில் வாழும் மக்களின் வாழ்வியலைக் காட்சிப்படுத்தியிருப்பீர்கள். அதற்கான உங்களின் தேடல் எத்தகையது?
அடிப்படையாக பார்த்தால் நிலம்தான் கதை. அதில் வரும் களமாந்தர்கள்தான் அதன் கதை மாந்தர்கள். கற்பனையான ஒன்றை சித்திரிப்பதற்குதான் நாம் லொகேஷனுக்கு செல்ல வேண்டும். ஆனால் சாமானிய மக்களின் வாழ்க்கையைப் பற்றி தெரிந்துக்கொள்வதற்கு நாம் அவர்களுடைய இடத்திற்குதான் செல்ல வேண்டும். `நீர்ப்பறவை’ படம் கடல் சார்ந்தவர்களின் வாழ்க்கையை மையப்படுத்தியது. அதனால் என்னுடைய தேடல் கடல் பகுதிகளில் உள்ளது. அங்கு சென்று நிலத்தைப் பார்த்த பிறகுதான் நான் திரைக்கதையே எழுத ஆரம்பிக்கிறேன். புவியியலைப் பொருத்துதான் தமிழர்களின் வாழ்வியல் இருக்கிறது என்றுதான் அன்றே குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என நிலத்தை வகைப்படுத்தினார்கள்.
`தென்மேற்குப் பருவக்காற்று’ படத்தில் விஜய் சேதுபதியை ஒரு நடிகராக அறிமுகம் செய்து வைத்தீர்கள். இன்று அவர் இந்தியாவிலேயே ஒரு முண்ணனி நடிகராக உள்ளார். அவர் வளர்ச்சியை நீங்கள் எப்படி பார்க்கிறீர்கள்?
`தென்மேற்குப் பருவக்காற்று’ படம் வெளியானபோது, நானும் சேதுவும் உதயம் தியேட்டர் வாசல்ல நின்னு பாத்துட்டே இருந்தோம். அப்போ எல்லாம் கமல் சார பாத்தாலே ரொம்ப பயமா இருக்கும். `தென்மேற்குப் பருவக்காற்று’ ரிலீஸ் அப்போ `மன்மதன் அம்பு’ படமும் ரிலீஸ் ஆச்சு. யாராவது ஒருத்தர் எங்க படத்துக்குப் போனாலே, ‘சார் அங்க பாருங்க சார், நம்ம படத்துக்கு போறாங்க’-னு சேது கூப்பிட்டுச் சொல்வான். கமல் சார் படத்துக்குத் தியேட்டர் முழுக்கக் கூட்டம் இருக்கும். எங்க படத்துக்கு பாதி தியேட்டர்கூட இருக்காது. அப்படி நாங்க பார்த்து பயந்த கமல் சார் கூட இன்னைக்கு சேது நடிக்கிறான் என்பது சாதாரண விஷயம் இல்ல. விஜய் சேதுபதியை நினைச்சா எனக்கு ரொம்பப் பெருமையா இருக்கு. இந்தப் பெருமையை எப்படி வார்த்தைகளால் சொல்றதுனு எனக்குத் தெரியல.
விஜய் சேதுபதிக்கு `மக்கள் செல்வன்’ போல, ஜி வி பிரகாஷ்க்கு `வெற்றித் தமிழன்’ என்று அடைமொழி வைத்துள்ளீர்களே…
கூடல் நகர் படத்துக்கு இசையமைக்க நான் ஜி வி பிரகாஷை பார்க்கப் போனேன். அப்போ அவரு பார்க்க ரொம்ப சின்னப் பையனா இருந்தாரு. உடனே கூப்பிட்டு, ‘தம்பி உங்களால முடியுமா. போட்ருவிங்களா?’ னு கேட்டேன். அதுக்கப்பறம் சபேஷ் முரளி சாரை வச்சு படத்துக்கு இசையமைச்சிட்டோம். ஒருநாள் நா.முத்துக்குமார் என்னைப் பார்க்க வந்தார். `சீனு, புதுசா ஒரு பையன் பாட்டு போட வந்திருக்கான். பின்னிட்டான்’னு சொல்லி அவரோட மொபைல்ல வெயில் படத்தோட `உருகுதே…’ பாட்டு போட்டு காண்பிச்சாரு. அது ஜி.வி னு அப்புறம்தான் தெரிஞ்சுது. அதுக்கப்புறம் தான் யாரையும் உருவத்தைப் பாத்து எடை போடக்கூடாதுன்னு முடிவு பண்ணேன். இன்னைக்கு அதே ஜி. வி என் படத்துல நடிக்கிறது ரொம்ப சந்தோஷமா இருக்கு. படப்பிடிப்பின்போது நல்லா ஜாலியா இருப்பாரு. அதே சமயம் முழு அர்ப்பணிப்போட இருப்பாரு. என்னோட பேரன்பை வாங்கிட்டாரு. பட்டம் கொடுக்குறதுக்கு நாம யாரு? அவரோட குணம் பிடிச்சு அவருக்கு அளிச்ச பேரு தான் வெற்றித் தமிழன்.
பாலு மகேந்திரா பற்றி…
மெட்ராஸ்ல எனக்கு தெரிஞ்ச ஒரே அட்ரஸ் நம்பர் 14, இந்திரா காந்தி தெரு, சாலிகிராமம். இப்பவும் என் வீட்டு அட்ரஸ் தெரியாது. என் மனைவி போன் நம்பர் தெரியாது. என் கார் நம்பர் தெரியாது. என் அக்கவுண்ட் நம்பர் தெரியாது. ஆனா என் மனசுல கல்வெட்டு மாதிரி பதிஞ்சிருக்கிற அட்ரஸ் இதுதான். அவரு தந்த யாசகம்தான் நான். அன்னைக்கு என்ன அவரு வீட்டுக்கு போன்னு சொல்லியிருந்தா, இன்னைக்கு சீனு ராமசாமி இல்ல. இப்பவும் அவரு அந்த வீட்ல இல்லைன்னாலும் எப்பவும் நான் அங்க போவேன்.
மற்ற மொழிப் படங்கள் அல்லது வெப் சீரிஸ் எதாவது பார்ப்பதுண்டா?
என்னுடைய வேலையே படம் பாக்குறதுதான். ஆனா ரொம்ப மசாலா படமா இருந்தா நான் பார்க்க மாட்டேன். லாஜிக் இல்லாத படங்கள் பார்த்தா எனக்கு தூக்கம் வந்துரும். என்னுடைய இயல்புக்கு தகுந்த மாதிரியான படங்கள்தான் பார்ப்பேன். எனக்கு ஒரு படம் பிடிச்சிட்டா, அதை நூறு பேருக்காவது சொல்வேன். யாரையும் பாராட்டத் தயங்குனதே கிடையாது.