அமைச்சர்களை நேரடியாக மிரட்டும் அண்ணாமலை! – திமுக நிதானம் காப்பது ஏன்?

“அரசு தங்கள் கையிலிருக்கும் மூன்றாண்டுகள் மட்டும் தி.மு.க தப்பிக்கலாம். மின்துறை அமைச்சர் தப்பிக்க முடியாது. அரசு மாறும்போது முதல் கைது செந்தில் பாலாஜிதான்” என்று பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலை எச்சரிக்கை விடுத்துப் பேசியிருக்கிறார். முன்னதாக அண்மையில், “சுகாதாரத்துறை அமைச்சர் தொழில்நுட்ப வல்லுநர் கிடையாது; அரசியல்வாதி. மக்களைத் திசை திருப்பும் அமைச்சர் முதலில் மன்னிப்பு கேட்க வேண்டும். பா.ஜ.க வெளியிட்ட ஆவணத்துக்குப் பதில் அளிக்க வேண்டும்” என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் மீதும் காட்டமான குற்றச்சாட்டை முன்வைத்திருந்தார்.

செந்தில் பாலாஜி

அதோடு, “தமிழ்நாடு அமைச்சர்களுக்கு தற்போது துபாய் வியாதி வந்திருக்கிறது. முதலமைச்சரைத் தொடர்ந்து ஒவ்வோர் அமைச்சரும் வெளிநாட்டுக்குச் செல்கிறார்கள்” என தி.மு.க அமைச்சர்கள்மீது தொடர்ந்து விமர்சனங்களை முன்வைத்து வரும் அண்ணாமலை… `மாதம் ஒரு முறை அமைச்சர்களின் ஊழல் பட்டியல் வெளியிடப்படும்!’ என்று எச்சரிக்கையும் விடுத்திருக்கிறார்.

அமைச்சர் மா. சுப்பிரமணியன்

`அ.தி.மு.க-பா.ஜ.க இடையே தமிழ்நாட்டில் யார் எதிர்க்கட்சி என்கிற போட்டியில் முந்துவதற்கான நடவடிக்கைகளால் அரசியல் களத்தில் அண்ணாமலை கவனம் பெற்று வருகிறார்.’ என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள். இப்படியான சூழலில், அண்ணாமலையின் செயல்பாடுகளுக்கு தி.மு.க நிதானம் காக்கிறதா என்கிற கேள்வி எழுந்திருக்கிறது.

கான்ஸ்டன்டைன் ரவீந்திரன்

இது தொடர்பாக, தி.மு.க. தலைமைக் கழகச் செய்தித் தொடர்பு இணைச்செயலாளர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரனிடம் பேசினோம். “தன் இருப்பைக் காட்டுவதில்கூட ஒரு அடிப்படை அறிவில்லாத தன்மைதான் அண்ணாமலையிடம் தெரிகிறது. ஒன்றிய அரசு ஆதரவில்லாத கட்சியின் தலைவர்கள் பேசுகிறார்கள் என்றால், அதை ஏற்றுக்கொள்ளலாம். அவர்களுக்கு எந்த ஒரு தகவலும் கிடைக்காது, ஏதோ ஒரு சர்ச்சைக்காகப் பேசுகிறார்கள் என்று எடுத்துக் கொள்ளலாம். ஆனால், அண்ணாமலை ஒன்றிய அரசின் மாநிலத் தலைவர். அப்படியிருக்கும் போது சிசிடிவி கேமரா வைத்து பார்ப்பது போல தி.மு.க அரசைப் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

அண்ணாமலை

ஒன்றிய அரசில் RAW,IB ஆகிய உளவு அமைப்புகளைத் தாண்டி, பிரைவேட் இன்டெலிஜென்ஸும் இருக்கிறது. இதுபோக பிரான்ஸிலிருந்து ஸ்பைவேர் வாங்கி வைத்திருக்கிறார்கள். இவ்வளவும் வைத்துக்கொண்டு எங்கள்மீது ஒரு குற்றச்சாட்டு வைக்கும்போது அடிப்படை ஆதாரத்தோடு சொன்னால் ஏற்றுக்கொள்ளலாம். ஆனால், எந்த ஒரு முகாந்திரமும் இல்லாமல் சொன்னால் எப்படி? தமிழ்நாட்டைப் பொறுத்தவரைச் சாதாரணமாக ஆடு, மாடு மேய்த்துக் கொண்டிருப்பவர்களிடம்கூட அரசாங்கத்தைப் பற்றிக் கேட்டால் விவரமாகச் சொல்வார்கள். அந்த அறிவுகூட இல்லாமல் பேசுவது ஏற்புடையதல்ல.

அண்ணாமலை – பாஜக

குறைந்தபட்சம் இப்படியெல்லாம் செய்தால் பத்திரிகைகளிலாவது முகத்தைக் காட்டுவார்களா என்பதற்காகக்கூடச் செய்கிறாரா என்பது தெரியவில்லை. எதிரிகள் இருப்பது என்பது வரவேற்கத்தக்கது. அரசாங்கத்தில் நம்மை அறியாமல் தவறுகள் நடந்தால்கூட அதைச் சரிசெய்வதற்கு எதிர்க்கட்சிகள் வேண்டும். ஆனால், முகாந்திரமில்லாத குற்றச்சாட்டை வைத்துக்கொண்டு தன்னை முன்னிலைப்படுத்துவதற்காகவும், தன்னுடைய இருப்பை தக்கவைத்துக் கொள்வதற்காக மட்டும் பேசிவருபவர்கள் குறித்து அதிக கவனம் செலுத்த வேண்டிய அவசியமில்லை” என்றார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.