பெங்களூரு: “அரசோ அல்லது தனியாரோ இரண்டுமே நாட்டின் சொத்துக்கள், எனவே அனைவருக்கும் சமமான பங்களிப்பு அளிக்கப்பட வேண்டும்” என்று தான் நம்புவதாக பிரதமர் மோடி தெரிவித்தார்.
இரண்டு நாள் பயணமாக கர்நாடகா சென்றுள்ள பிரதமர் மோடி திங்கள்கிழமை பெங்களூருவில் ரூ.27,000 கோடி மதிப்பிலான பல்முனை ரயில் மற்றும் சாலை உள்கட்டமைப்பு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார். முன்னதாக, பெங்களூருவில் உள்ள இந்திய அறிவியல் பல்கலைக்கழகத்தில் பக்ஷி பார்த்தசாரதி மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டி மூளை ஆராய்ச்சி மையத்தையும் தொடங்கி வைத்த பிரதமர், டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர், ஸ்கூல் ஆஃப் எக்னாமிக்ஸ் பல்கலைக்கழகத்தின் புதிய வளாகத்தையும், பாரத ரத்னா டாக்டர் பி. ஆர். அம்பேகர் சிலையையும் திறந்து வைத்தார்.
தொழில்நுட்ப கேந்திரங்களாக மாற்றப்பட்ட 105 தொழில் பயிற்சி நிறுவனங்களை நாட்டிற்கு அர்ப்பணித்து வைத்தார். இந்நிகழ்ச்சியில் கர்நாடக ஆளுநர் தாவர்சந்த் கெலாட், முதலமைச்சர் பசவராஜ் பொம்மை, மத்திய அமைச்சர் பிரல்ஹாத் ஜோஷி ஆகியோர் கலந்துகொண்டனர்.
இந்தநிகழ்ச்சியில் பேசிய பிரதமர் கூறியதாவது, “கர்நாடகாவில் ஐந்து தேசிய நெடுஞ்சாலைத் திட்டங்கள், 7 ரயில்வே திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டப்பட்டது மற்றும் கொங்கன் ரயில்வே பாதை 100 சதவீதம் மின்மயமாக்கப்பட்டது மகத்துவமானது. இந்த அனைத்து திட்டங்களும் கர்நாடகாவில் இளைஞர்கள், நடுத்தர மக்கள், விவசாயிகள், தொழிலாளர்கள் மற்றும் தொழில்முனைவோர்களுக்கு புதிய வசதியை அளிக்கும்.
நாட்டின் லட்சக்கணக்கான இளைஞர்களின் கனவு நகரமாக பெங்களூரு திகழ்கிறது. ஒரே பாரதம், உன்னத பாரதம் என்பதை இந்நகரம் பிரதிபலிக்கிறது. பெங்களூருக்கான வளர்ச்சி மூலம் லட்சக்கணக்கான இளைஞர்களின் கனவுகள் நிறைவேற்றப்பட்டுள்ளது. அதனால்தான் கடந்த 8 வருடங்களாக பெங்களூரு வளர்ச்சிக்கு மத்திய அரசு தொடர்ந்து செயலாற்றி வந்தது.
ரயில், சாலை, மெட்ரோ, சுரங்கப்பாதை, மேம்பாலம் உள்ளிட்ட பல்வேறு உள்கட்டமைப்புகள் மூலம் போக்குவரத்து நெரிசலிலிருந்து பெங்களூரு மீள முடியும் என்பதை கருத்தில் கொண்டு மத்திய, மாநில அரசுகள் அனைத்து வழிகளிலும் அதனை வலுப்படுத்த பணியாற்றி வருகிறன.பெங்களூருவின் புறநகர் பகுதிகளை சிறந்த போக்குவரத்து அமைப்புடன் இணைப்பதற்கு மத்திய அரசு உறுதிபூண்டுள்ளது.
கடந்த 40 ஆண்டுகளாக நிறைவேற்றப்படாமல் இருந்த பெங்களூரு மக்களின் கனவை, அடுத்த 40 மாதங்களில் நிறைவேற்றுவதற்கு நான் கடினமாகப் பணியாற்றுவேன். பெங்களூரு புறநகர் ரயில் திட்டத்தின் மூலம் பெங்களூரு நகரம் புறநகருடன் இணைக்கப்படும். அதேபோல், பெங்களூரு சுற்றுவழிச்சாலை திட்டத்தின் மூலம் நகரத்தின் போக்குவரத்து நெரிசல் குறையும்.
கடந்த 8 ஆண்டுகளில் ரயில் போக்குவரத்தில் அரசு மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தியன் ரயில்வே விரைவாகவும், தூய்மையாகவும், நவீனமாகவும், பாதுகாப்பாகவும், குடிமக்களுக்கு உகந்ததாகவும் மாறியுள்ளது. நாட்டில் நினைத்துப் பார்க்க முடியாத பகுதிகளில்கூட நாம் ரயில் போக்குவரத்தை செயல்படுத்தி வருகிறோம். விமான நிலையங்களில் மட்டும் காணப்படும் வசதிகளை ரயில் நிலையங்களிலும் ஏற்படுத்துவதற்கு இந்திய ரயில்வே முயற்சித்து வருகிறது. பாரத ரத்னா எம்.விஸ்வேஸ்வரய்யா என்று பெயரிடப்பட்டுள்ள பெங்களூரு நவீன ரயில் நிலையம் இதற்கு நேரடி எடுத்துக்காட்டு.
அரசு வசதிகளை ஏற்படுத்தினால் இந்திய இளைஞர்களால் எப்படி செயலாற்ற முடியும் என்பதை பெங்களூரு நகரம் எடுத்துக்காட்டுகிறது. குடிமக்களின் வாழ்க்கை தரத்தில் உள்ள இடர்பாடுகள் குறைந்துள்ளதது. நாட்டில் உள்ள இளைஞர்களின் கனவு நகரமாக பெங்களூரு திகழ்கிறது. அதற்கு பின்னணியாக தொழில்முனைவோர், புதிய கண்டுபிடிப்புகள், பொதுத்துறை மற்றும் தனியார் துறைகளை முறையாக உபயோகித்ததே காரணம். 21-ம் நூற்றாண்டில், இந்தியா வேலைவாய்ப்பு உருவாக்குபவர்களையும், புதிய கண்டுபிடிப்பாளர்களையும் கொண்டிருக்கும். இந்தியாவின் செல்வமும், வலிமையும் அது உலகில் இளைஞர்கள் மிகுந்த நாடாக இருப்பதேயாகும்.
சிறு மற்றும் நடுத்தர தொழில் துறைகளில் மாற்றத்தை ஏற்படுத்தியதன் மூலம் சிறு-குறு மற்றும் நடுத்தர தொழில் துறைகளில் வளர்ச்சிக் காணப்பட்டுள்ளது. சுயசார்பு இந்தியா இயக்கத்தின் நம்பிக்கையின் அடையாளமாக, ரூ. 200 கோடி வரையிலான ஒப்பந்தங்களில் வெளிநாட்டு பங்களிப்பை இந்தியா விலக்கியுள்ளது. சிறு, குறு, மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களிடமிருந்து 25 சதவீதம் வரை மத்திய அரசு நிறுவனங்கள் மின்னணு கொள்முதல் இணையதளங்கள் வாயிலாக பொருட்களை கொள்முதல் செய்துள்ளது.
கடந்த 8 வருடங்களில் 100க்கும் மேற்பட்ட பில்லியன் டாலர் மதிப்பிலான நிறுவனங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. புதிய நிறுவனங்கள் ஒவ்வொரு மாதமும் ஏற்படுத்தப்பட்டு வருகிறது. முதல் 10 ஆயிரம் ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் தொடங்குவதற்கு 800 நாட்கள் ஆன நிலையில், 2014-ம் ஆண்டுக்குப் பிறகு, 200 நாட்களுக்குள்ளாகவே பல ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் தொடங்கப்பட்டுள்ளது. கடந்த 8 ஆண்டுகளில் யூனிகான் நிறுவனங்களின் மதிப்பு சுமார் ரூ.12 லட்சம் கோடி ஆகும்.
அரசோ அல்லது தனியாரோ, இரண்டுமே நாட்டின் சொத்துக்கள், எனவே அனைவருக்கும் சமமான பங்களிப்பு அளிக்கப்பட வேண்டும் என்று நான் நம்புகிறேன். அரசு அளித்து வரும் உலகத்தரம் வாய்ந்த வசதிகள் குறித்த ஆலோசனைகளை வழங்குமாறு இளைஞர்களுக்கு நான் அழைப்பு விடுக்கிறேன். கடினமாக உழைக்கும் இளைஞர்களுக்கு அரசு சிறந்த வாய்ப்பை அளிக்க தயாராக இருக்கிறது” இவ்வாறு பிரதமர் பேசினார்.