அஸ்ஸாம் மாநிலத்தில் பருவ மழை தீவிரம் அடைந்திருக்கிறது. கடந்த 3 நாள்களாக பெய்து வரும் கனமழை காரணமாக ஆயிரக்கணக்கான கிராமங்கள் நீரில் மூழ்கி இருக்கின்றன. மாநிலத்தில் 33 மாவட்டங்கள் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளது. ஞாயிற்றுக்கிழமை மட்டும் மழை வெள்ளத்திற்கு மூன்று குழந்தைகள் உட்பட 8 பேர் உயிரிழந்தனர். பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. 33 மாவட்டத்திலும் மொத்தம் 42 லட்சம் பேர் மழையால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் அதிகமானோர் தங்களது உடமைகள் அனைத்தையும் இழந்து நடுத்தெருவிற்கு வந்துள்ளனர். இன்னும் பலர் தங்களை காப்பாற்றிக்கொள்ள நெடுஞ்சாலைகளில் தஞ்சம் அடைந்துள்ளனர்.
மீட்பு பணியில் பேரிடர் மேலாண்மை படையும், ராணுவமும் ஈடுபடுத்தப்பட்டுள்ளது. மழை வெள்ளத்தில் சிக்கி 71 பேர் உயிரிழந்திருப்பதாக மாநில அரசு தெரிவித்துள்ளது. மாநிலம் முழுவதும் 5,137 கிராமங்கள் மழை வெள்ளத்தில் சிக்கி இருக்கிறது. இதில் பார்பேடா மாவட்டம் தான் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளது.
இங்கு மட்டும் 12 லட்சத்திற்கும் அதிகமானோர் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர். தர்ரங் மாவட்டத்தில் 4 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். பிரம்மபுத்திரா ஆற்றங்கரையோரம் இருக்கும் அனைத்து கிராமங்களும் நீரில் மூழ்கி இருக்கிறது. பிரம்மபுத்திரா ஆற்றுப்பகுதியில் மட்டும் 2.50 லட்சம் பேர் பாதிக்கப்பட்டு இருக்கின்றனர். அவர்களுக்காக 30 நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளது.
மாநிலம் முழுவதும் 744 நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டு மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான உதவிகள் செய்யப்பட்டு வருவதாக மாநில அரசு தெரிவித்துள்ளது. மழை வெள்ளத்தில் சிக்கி, பின் மீட்கப்பட்டுள்ளவர்கள் பள்ளிகளில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கச்சார் மாவட்டத்தை சேர்ந்த ரஹிப் அகமத் இது குறித்து கூறுகையில், “எங்களது வீடு கடந்த மூன்று நாள்களாக மழை வெள்ளத்தால் சூழ்ந்திருக்கிறது. நாங்கள் அனைத்தையும் இழந்து நெடுஞ்சாலையில் தங்கி இருக்கிறோம். மழை நிற்கவில்லையெனில் எங்களது நிலைமை மேலும் மோசமாகும். அரசிடமிருந்து எந்த வித நிவாரணப்பொருள்களும் எங்களுக்கு கிடைக்கவில்லை” என்று தெரிவித்தார்.
மக்கள் சொற்ப உணவு தானியத்துடன் மழை வெள்ளத்தில் மீன் பிடித்து வாழ்ந்து வருகின்றனர். அதிகமான கிராமங்களுக்கு நிவாரண உதவிகள் சென்றடையவில்லை. உத்தம்நாத் என்ற மற்றொருவர் இது குறித்து கூறுகையில், “நாங்கள் கடந்த 5 நாள்களாக நெடுஞ்சாலையில்தான் தங்கி இருக்கிறோம். நிவாரண பொருள் என்று கூறி வெறும் அரிசியை மட்டும் கொடுத்திருக்கிறார்கள். எங்களது ஒட்டுமொத்த கிராமும் மூழ்கிவிட்டது. நீர்மட்டம் இன்னும் அதிகரித்துக்கொண்டுதான் இருக்கிறது. இன்னும் மழை பெய்தால் நிலைமை மேலும் மோசமடையும். இருக்கும் சொற்ப உணவு தானியத்துடன் மழை வெள்ளத்தில் பிடிக்கும் மீன்களை விற்று வாழ்க்கையை நடத்திக்கொண்டிருக்கிறோம்” என்று தெரிவித்தார். இதற்கிடையே அடுத்த 24 மணி நேரத்திற்கு அஸ்ஸாமில் கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.