அதிமுகவில் ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி இடையே ஒற்றைத் தலைமை விவகாரம் தொடர்பாக மோதல் முற்றிவரும் நிலையில், ஜூன் 23 ஆம் தேதி நடைபெற உள்ள அதிமுக பொதுக்குழுவுக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்துவருகிறது.
அதிமுகவில் ஒற்றைத் தலைமை விவாதம் எழுந்ததில் இருந்து கடந்த 6 நாட்களாக தமிழக அரசியல் களம் ஒரே பரப்பாக இருந்து வருகிறது. பொதுக்குழுவுக்கு முன்னதாக, ஓ.பன்னீர்செல்வம் தனது ஆதரவு நிர்வாகிகளுடன் சந்தித்து ஆலோசனை நடத்தி வருகிறார். அதே போல, எடப்பாடி பழனிசாமி தனது ஆதரவு நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறார். அதே போல, இருவருடைய ஆதரவாளர்களும் தனித்தனியாக வெளிப்படையாக பேசி வருவதால் ஒறைத் தலைமை விவாகாரம் மோதலாக முற்றி வருகிறது.
அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட புகழேந்தி நீண்ட இடைவெளிக்கு பிறகு, ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 19) ஓ.பி.எஸ்-ஐ அவரது இல்லத்தில் சந்தித்து ஆதரவு தெரிவித்தார். பிறகு, ஓ.பி.எஸ்-ஐ ஆதரித்து பேட்டி கொடுத்தார்.
அதே போல, முன்னாள் அதிமுக அமைச்சர் பொள்ளாச்சி ஜெயராமன், இ.பி.எஸ்-ஐ சந்தித்து ஆதரவு தெரிவித்தார். அதிமுகவை வழிநடத்த ஒற்றைத் தலைமை தேவை; இ.பி.எஸ் ஏகமனதாக ஒற்றைத் தலைமையாக தேர்வு செய்யப்படுவார் என்று கூறினார்.
அதே போல, அதிமுக முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜு, எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவு தெரிவித்து, அதிமுகவுக்கு ஒற்றைத் தலைமை ஏற்படுவதே தீர்வு என்று தெரிவித்துள்ளார்.
மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் பெரும்பாலானவர்கள் மாற்றம் வரவேண்டும் என்று கருத்து கூறினார்கள். ஏனென்றால், என்றைக்குமே அதிமுக ஒரு தலைமையின் கீழ் இருந்தது. ஜெயலலிதாவின் மறைவுக்கு பிறகு அன்றைக்கு ஏற்பட்ட சூழ்நிலையின் காரணமாக, பொதுக்குழுவில் தற்காலிகமாக இரண்டு தலைமை என்று முடிவு செய்யப்பட்டது. இரண்டு தலைமை என்று வரும்போது பல்வேறு பிரச்னைகள் வருகின்றது. ஒரு தலைமையாக இருக்க வேண்டும் என்று பல மாவட்ட செயலாளர்கள் ஜனநாயக முறைப்படி கருத்து கூறினார்கள். மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் சொல்லியிருக்கிறோம். ஒற்றைத் தலைமைதான் சரியான தீர்வு. இது என்னுடைய தனிப்பட்ட கருத்து அல்ல. தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள 30 பொதுக்குழு உறுப்பினர்களின் முடிவுதான் என்னுடைய முடிவும். அவர்களிடமே கேளுங்கள்” என்று கூறினார். அப்போது அவருடன் இருந்தவர்கள் எல்லாருடைய ஆதரவும் எடப்பாடிக்குதான் என்று கூறினார்.
இந்த நிலையில், ஜூன் 23 ஆம் தேதி அதிமுக பொதுக்குழு கூட்டம் நடைபெற உள்ளதால், சென்னை வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரி திருமண மண்டபத்தில் அதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. குறிப்பாக, மண்டபத்தின் வளாகத்திற்கு வெளியே இருபுறமும் தடுப்புக்கட்டைகள் கட்டும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. மேலும், மண்டபத்தின் உட்புறம் மேடை அமைக்கும் பணிகளும் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“