ரியாத்: இந்தியா, எத்தியோபியா, துருக்கி, வியட்நாம் ஆகிய நாடுகளுக்குச் செல்லும் குடிமக்களுக்கான கரோனா கட்டுப்பாடுகளை சவுதி அரேபியா நீக்கியுள்ளது.
மேலும், முகக்கவசம் அணிதல் போன்ற கரோனா கட்டுப்பாடுகளையும் சவுதி நீக்கியுள்ளது. ஆனால், மெக்கா போன்ற புனித தளங்களில் முகக்கவசம் அணிய வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.
வெளிநாடு செல்ல விரும்பும் சவுதி அரேபியாவின் குடிமக்களுக்கான தடுப்பூசி காலமும் நீட்டிக்கப்பட்டுள்ளது. மேலும், பூஸ்டர் டோஸ் போடுவதற்கான காலத்தை 8 மாதங்களாகவும் சவுதி நீடித்துள்ளது.
உலகளவில் ஐரோப்பா, சீனா, அமெரிக்கா நாடுகளில் கரோனா இறங்கு முகத்தில்தான் உள்ளன. இந்தியாவில் தற்போது கரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. கரோனா தொற்று உள்ள நாடுகளில் மிதமான பாதிப்புகளே ஏற்பட்டுள்ளன; தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்படும் அளவு இல்லை எனவும், கரோனாவினால் தற்போது உலக அளவில் மிதமான பாதிப்பே (சளி, காய்ச்சல், இருமல்…) ஏற்படுவதாகவும் சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
எனினும், உலகம் முழுவதும் தொற்றின் பாதிப்பு முழுமையாக நீங்கும் வரை மக்கள் கரோனா தடுப்பு சுகாதார நடவடிக்கைகளான முகக்கவசம், கைகளைக் கழுவுதல் போன்றவற்றை கடைப்பிடிப்பது அவசியம் என்று உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.
சீனாவில் 2019-ஆம் ஆண்டு வூஹான் மாகாணத்தில் கண்டறியப்பட்ட கரோனா வைரஸ் பல்வேறு உருமாற்றம் அடைந்து கடந்த இரண்டரை வருடங்களாக உலக நாடுகளில் பரவி வருவது குறிப்பிடத்தக்கது.