இன்ஸ்டா காதலனை தேடி பெங்களூரு வந்த பிலிப்பைன்ஸ் பெண்ணுக்கு நேர்ந்த சோகம்.. 50 அடி பள்ளத்தில் சடலமானார்.!

சேலம் அருகே ஓடும் ரெயிலில் இருந்து 50 அடி பள்ளத்திற்குள் விழுந்து உயிரிழந்த பிலிப்பைன்ஸ் பெண் கொலை செய்யப்பட்டாரா ? என்று போலீசார் விசாரித்து வருகின்றனர். பிலிப்பைன்ஸ் நாட்டில் இருந்து பெங்களூரு வந்து இன்ஸ்டாகிராம் காதலனை கரம் பிடித்த பெண்ணுக்கு நேர்ந்த விபரீதம் குறித்து விவரிக்கின்றது இந்த செய்தி தொகுப்பு..

பெங்களூருவில் இருந்து சேலம் வழியாக எர்ணாகுளம் செல்லும் விரைவு ரெயில் இருட்டை கிழித்துக் கொண்டு அதிவேகமாக சென்று கொண்டிருந்தது. அந்த ரெயில் ஓமலூரில் நின்ற போது அதில் இருந்து இறங்கிய கேரள மாநிலம் எர்ணாகுளத்தை சேர்ந்த ஹாரிஷ் என்பவர் ரெயில்வே போலீசாரிடம் தனது காதல் மனைவி ரைசல், முந்தைய ரெயில் நிலையம் அருகே ரெயிலில் இருந்து தவறி விழுந்து விட்டதாக கூறி அழுதார்.

இதையடுத்து போலீசார், ஹாரீஷை அழைத்துக் கொண்டு அருகில் உள்ள காருவள்ளி ரெயில் நிலையத்துக்கு சென்றனர். அந்தபகுதியில் உள்ள 50 அடி பள்ளத்திற்குள் ஹாரீஷின்காதல் மனைவி ரைசல் சடலமாக கிடப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

அந்தப்பெண்ணின் சடலத்தை மீட்ட போலீசார் ஹாரிஷின் புகார் குறித்து விசாரித்தனர். 48 வயதான ஹாரிஷ் இன்ஸ்டாகிராமில் அறிமுகமான பிலிப்பைன்ஸ் நாட்டை சேர்ந்த ரைசல் என்ற 36 வயது பெண்ணை காதலித்துள்ளார். ஹாரிஷ் மீதான ஈர்ப்பில் கடந்த 10 நாட்களுக்கு முன்பு பிலிப்பைன்ஸில் இருந்து புறப்பட்டு இந்தியா வந்த அவர் பெங்களூருவில் வைத்து ஹாரீஷை சந்தித்து பதிவு திருமணம் செய்து கொண்டு அங்குள்ள ஓட்டல்களில் தங்கி குடித்தனம் நடத்திவந்த தாக கூறப்படுகின்றது.

சம்பவத்தன்று பெங்களூருவில் இருந்து புறப்பட்டு எர்ணாகுளம் செல்வதற்காக ரெயிலில் புறப்பட்டுள்ளனர். பூட்டியிருந்த கதவை திறந்து ரெயில் வாசலில் அமர்ந்து கொண்டு பயணித்த போது ரைசல் , ஓடும் ரெயிலில் இருந்து தவறி விழுந்து பலியானதாக ஹாரீஷ் போலீஸில் தெரிவித்தார். விசாரணையின் போது ஹாரீஷ் முன்னுக்கு பின் முரணான தகவல்களை தெரிவித்து வருவதால் போலீசாருக்கு சந்தேகம் எழுந்துள்ளது.

வெளிநாட்டை சேர்ந்த பெண்ணை ஊருக்கு வந்த உடனே எல்லாம் பதிவு திருமணம் செய்து கொள்ள முடியாது என்று கூறும் போலீசார் கேரளாவை சேர்ந்த ஷாரீஷ், காதல் மனைவி ரைசலை பெங்களூரில் வைத்து குடித்தனம் நடத்தியது ஏன் ? என்றும் பிலிப்பைன்ஸ் நாட்டில் எல்லாம் படிக்கட்டில் அமர்ந்து எவரும் பயணம் செய்வது இல்லை என்பதால் அதுவும் சந்தேகம் கொள்ள செய்வதாக தெரிவித்தனர்.

மேலும் ஏற்கனவே திருமணமான ஹாரீஷ் , ரைசலை திருமணம் செய்து அழைத்து செல்லும் வழியில் இந்த சம்பவம் நடந்திருப்பதால் சந்தேகம் வலுத்துள்ளதாகவும், உண்மையிலேயே பிலிப்பைன்ஸ் நாட்டுப்பெண் தவறி விழுந்து இறந்தாரா ? அல்லது தள்ளிவிட்டு கொலை செய்யப்பட்டாரா ? என்ற கோணத்தில் தீவிரமாக விசாரித்து வருவதாக போலீசார் தெரிவித்தனர்.

இன்ஸ்டாகிராம் காதலனை தேடி பிலிப்பைன்ஸில் இருந்து இந்தியா வந்த பெண்ணுக்கு நேர்ந்த சோக சம்பவம் குறித்து தூதரகம் மூலம் அவரது உறவினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.