அரசாங்க கணக்குகள் பற்றிய (கோபா) குழு பாராளுமன்ற உறுப்பினர் லசந்த அழகியவண்ண தலைமையில் அண்மையில் (16) பாராளுமன்றத்தில் கூடிய போதே இது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டது.
இந்தக் குழுவின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் (பேராசிரியர்) கௌரவ திஸ்ஸ விதாரண அவர்களாவர்.
நிதி, பொருளாதார உறுதிப்பாடு மற்றும் தேசியக் கொள்கைகள் அமைச்சு, இலங்கை மதுவரித் திணைக்களம், வெளிநாட்டு வளங்கள் திணைக்களம், இறக்குமதி ஏற்றுமதிக் கட்டுப்பாட்டுத் திணைக்களம் மற்றும் இலங்கை தகவல் தொடர்பாடல் தொழிநுட்ப முகவர் நிலையம் (ICTA) ஆகிய நிறுவனங்களின் அதிகாரிகள் இந்தக் குழுக் கூட்டத்துக்கு அழைக்கப்பட்டிருந்தனர். இதன்போது ICTA நிறுவனத்தினால் இந்த நிறுவனங்களுக்கு அவசியமான மென்பொருட்களை தயாரித்தல் மற்றும் ஆலோசனை வழங்குதல் தொடர்பில் கலந்துரையாடப்பட்டது.
இறக்குமதி ஏற்றுமதிக் கட்டுப்பாட்டுத் திணைக்களத்தின் அனுமதிப்பத்திரம் வழங்குதலுடன் தொடர்புபட்ட நிறுவனங்களை ஒன்றிணைக்கும் கணினி வேலைத்திட்டம் மற்றும் வருமான முகாமைத்துவ வலையமைப்பை உருவாக்கும் பணிகளில் ICTA நிறுவனத்தின் ஈடுபாடு தொடர்பில் இந்தக் கலந்துரையாடலில் பிரதானமாக கவனம் செலுத்தப்பட்டது.
இறக்குமதி ஏற்றுமதிக் கட்டுப்பாட்டுத் திணைக்களத்தின் அனுமதிப்பத்திரம் வழங்குதலுடன் தொடர்புபட்ட நிறுவங்களை ஒன்றிணைக்கும் கணினி வேலைத்திட்டம் 2015 இல் ஆரம்பிக்கப்பட்டு இதுவரை வெற்றிகரமற்ற நிலையில் காணப்படுகின்றமை தொடர்பில் இங்கு கலந்துரையாடப்பட்டது. இந்த முன்பொருளைத் தயாரிப்பதில் இலங்கை தகவல் தொடர்பாடல் தொழிநுட்ப முகவர் நிலையத்தின் (ICTA) செயற்பாடு தொடர்பில் திருப்தியடைய முடியாது என பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ லசந்த அழகியவண்ண சுட்டிக்காட்டினார். அரச நிறுவனங்களுக்கு கணினி வேலைத்திட்டடங்களை உருவாக்குவது தொடர்பில் போதிய அறிவு இல்லை என்பதால் ICTA நிறுவனத்தின் உதவியைக் கோரும் போது அது தொடர்பில் உரிய தலையீட்டை அல்லது உதவியை வழங்குவதற்கு இந்நிறுவனம் நடவடிக்கை எடுப்பதில்லை என அவர் மேலும் சுட்டிக்காட்டினார். மேலும், அரசு நிறுவனங்களை தகவல் தொழிநுட்பத்துடன் இணைத்து புதிய தொழில்நுட்பத்துடன் இணைக்கும் பொறுப்பு இந்த நிறுவனத்திற்கு உள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.
அதேபோன்று, உள்நாட்டு இறைவரித் திணைக்களத்துடன் தொடர்புபட்ட வரி அறவிடும் அனைத்து அரச நிறுவனங்களையும் ஒன்றிணைக்கும் கணினி வலையமைப்பை (RAMIS) சரியான முறையில் தயாரிக்க முடியாமை குறித்தும் குழுவில் கலந்துரையாடப்பட்டது.
அதற்கு மேலதிகமாக, இலங்கை மதுவரித் திணைக்களம் மற்றும் வெளிநாட்டு வளங்கள் திணைக்களம் என்பவற்றுடன் இணைந்து ICTA நிறுவனம் தயாரிக்கும் வேலைத்திட்டம் தொடர்பிலும் இங்கு கலந்துரையாடப்பட்டது.
இதற்கமைய இலங்கை தகவல் தொடர்பாடல் தொழிநுட்ப முகவர் நிலையத்தினால் (ICTA) அரச நிறுவனங்களுக்கு தயாரிக்கப்பட்ட மென்பொருட்கள், ஆலோசனை வழங்கப்பட்ட நிறுவனங்கள் மற்றும் அவற்றின் தற்போதைய நிலைமை தொடர்பில் அறிக்கையொன்றை ஜூலை முதலாம் திகதிக்கு வழங்குமாறு கோபா குழு அந்நிறுவனத்துக்கு பரிந்துரை வழங்கியது.
இந்தக் குழுக் கூட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர்களான (வைத்திய கலாநிதி) கௌரவ சுதர்ஷனி பர்னாந்துபுல்லே, கௌரவ திஸ்ஸ அத்தநாயக்க, கௌரவ மொஹமட் முஸம்மில், கௌரவ துமிந்த திசாநாயக்க, கௌரவ நிரோஷன் பெரேரா, (வைத்திய கலாநிதி) கௌரவ உபுல் கலப்பத்தி மற்றும் கௌரவ வீரசுமன வீரசிங்க ஆகியோர் கலந்துகொண்டனர்.