உக்ரைனை ஆக்கிரமித்ததற்காக மாஸ்கோ மீதான பொருளாதாரத் தடைகளுக்கு மத்தியில், ரஷ்யாவில் இருந்து சீனாவின் எண்ணெய் இறக்குமதிகள் மே மாதத்தில் 55 சதவீதம் உயர்ந்து, சீனாவின் மிகப்பெரிய எண்ணெய் சப்ளையராக மாறியுள்ள ரஷ்யா, சவுதி அரேபியாவை விட அதிக அளவில் எண்ணெய் சப்ளை செய்கிறது. மே மாதத்தில், சீனா ரஷ்யாவிலிருந்து சுமார் 8.42 மில்லியன் டன் எண்ணெயை இறக்குமதி செய்தது.
மேற்கு நாடுகளைப் போலல்லாமல், பெய்ஜிங் மாஸ்கோ தொடுத்துள்ள போரைக் கண்டிக்க மறுத்துவிட்டது குறிப்பிடத்தக்கது. இந்த ஆண்டு பிப்ரவரியில், சீனாவும் ரஷ்யாவும் தங்கள் நட்புக்கு “வரம்பு ஏதும் இல்லை” என்று அறிவித்தன. மேலும், மாஸ்கோவின் “இறையாண்மை மற்றும் பாதுகாப்பிற்கு” பெய்ஜிங் ஆதரவு அளிக்கும் என்று சீன அதிபர் ஜி ஜின்பிங் கடந்த வாரம் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினுக்கு உறுதியளித்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பைத் தொடர்ந்து, மேற்கத்திய நாடுகள் மாஸ்கோ மீது பொருளாதாரத் தடைகளை விதித்தன. இது இறக்குமதி மற்றும் ஏற்றுமதியில் பெரிய அளவிலான தாக்கத்தை ஏற்படுத்தியது. அதோடு எண்ணெய் விநியோகச் சங்கிலியில் இடையூறுகளை ஏற்படுத்தியது. போர் தொடங்கி நான்கு மாதங்கள் ஆகி வரும் நிலையில், பல நாடுகள், ரஷ்யாவிடம் இருந்து எரிசக்தி இறக்குமதியைத் தவிர்த்து வருகின்றனர்.
இதற்கிடையில், சீன நிறுவனங்களான சினோபெக் மற்றும் ஜென்ஹுவா எண்ணெய் ஆகியவை சமீபத்திய மாதங்களில் ரஷ்ய கச்சா எண்ணெய் வாங்குவதை அதிகரித்துள்ளன. ஏனெனில் அவை அதிக தள்ளுபடியைப் பெறுகின்றன.
இந்த மாத தொடக்கத்தில், சீன அரசு ஊடகம் பெய்ஜிங் “இரு நாடுகளுக்கும் இடையே மூலோபாய ஒருங்கிணைப்பை தீவிரப்படுத்த” தயாராக இருப்பதாக கூறியது. “சட்டவிரோதமான” மேற்கத்திய தடைகளை எதிர்கொண்டு வரும் நிலையில், பொருளாதார ஒத்துழைப்பை அதிகரிக்க இரு தலைவர்களும் ஒப்புக்கொண்டதாக கிரெம்ளின் கூறியது.
மேலும் படிக்க | ரஷ்ய அதிபர் முக்கிய ராணுவ கூட்டத்தின் போது மயங்கி விழுந்தாரா; வெளியான பகீர் தகவல்
மேலும் படிக்க | காதலியின் பிறந்தநாள் விழாவில் கலந்து கொள்ளாத புடின்; அதிர வைக்கும் தகவல்கள்