உலகக் கோப்பை டி20: மிடில் ஆர்டரில் புதிய நம்பிக்கை இந்த இருவர்!

பொதுவாக, பெங்களூரு நகரில் இந்த நாட்களில் ஆண்டுதோறும் மழைப் பொழிவு இருக்கும். அதுவும் குறிப்பாக மாலை நேரங்களில், சாரல் மழை அல்லது கன மழை பெய்யும். அவ்வகையில் நேற்றைய தினமும் மழை பெய்தது. இம்முறை சற்றே வெளுத்து வாங்கியது. இதனால், பெங்களூரு நகர வாசிகள் மகிழ்ச்சியடைந்தனர். ஆனால், இந்தியா – தென்ஆப்பிரிக்கா இடையேயான 5வது மற்றும் கடைசி டி-20 ஆட்டம் பார்க்க, சின்னசாமி ஸ்டேடியத்தில் குவிந்திருந்த மக்கள் முகத்தில் கோபத் தணல் கொழுந்து விட்டு எரிந்தது.

ஏன்னென்றால், இந்திய மண்ணில் சுற்றுப்பயணம் செய்து வரும் தென்ஆப்பிரிக்கா 5 போட்டிகள் டி-20 தொடரில் முதலிரண்டியில் வெற்றி கண்டது. அடுத்த ஆட்டத்தில் இந்தியா தனது வெற்றிக்கணக்கை தொடங்குமா? அல்லது தென்ஆப்பிரிக்கா தொடரை கைப்பற்றுமா? என்கிற எதிர்ப்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எகிறியது. அந்த தருணத்தில் விசாகப்பட்டினத்தில் நடத்த ஆட்டத்தில், தென்ஆப்பிரிக்காவை 48 ரன்னில் வித்தியாசத்தில் வீழ்த்திய இந்தியா எழுச்சி பெற்றது.

பிறகு, ராஜ்கோட்டில் நடந்த ஆட்டத்திலும் அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. பேட்டிங் மற்றும் பந்துவீச்சில் மிரட்டி எடுத்த இந்தியா தென்ஆப்பிரிக்காவை 87 ரன்னில் சுருட்டி, 82 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றியை சுவைத்தது. இந்த வெற்றி இந்திய வீரர்களுக்கு உற்சாகமும், உத்வேகமும் அளித்தது போல், நேற்றைய ஆட்டத்தை காணவிருந்த ரசிகர்களுக்கும் அதிக எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தி இருந்தது.

விசாகப்பட்டின ஆட்டத்தில் இந்திய தொடக்க ஜோடியான ருதுராஜ் கெய்க்வாட் (57) மற்றும் இஷான் கிஷான் (54) அரைசதம் அடித்து
பேட்டிங்கில் வலுவான ஸ்கோரை சேர்க்க, யுஸ்வேந்திர சாஹல் மற்றும் அக்சர் படேல் சுழலில் மிரட்டி இருந்தனர். இதேபோல், வேகப்பந்துவீச்சில் ஹர்ஷல் படேல் மற்றும் புவனேஷ்வர் குமார் தென்ஆப்பிரிக்காவை சாய்க்க உதவினர்.

ராஜ்கோட்டில் நடந்த ஆட்டத்தில் தொடக்க வீரர்களின் விக்கெட்டுகளை இந்தியா பறிகொடுத்து தவித்தது. ஆனால், மிடில் – ஆடரில் களமாடி இருந்த ஹர்திக் பாண்டியா மற்றும் தினேஷ் கார்த்திக் ஜோடி விக்கெட் சரிவை மீட்டெடுத்ததோடு, அணி 169 ரன்கள் என்கிற கவுரவமான ஸ்கோரை எட்ட உதவினர். பந்துவீச்சில் அவேஷ் கான் வேகத்தாக்குதல் தொடுக்க, சாஹலும், அக்சரும் சுழல் வித்தை காட்ட இந்தியா தென்ஆப்பிரிக்காவை 87 ரன்னில் மடக்கியது.

மிடில்-ஆர்டரில் உதிர்த்த புதிய நம்பிக்கை…

இந்த நான்கு போட்டிகளுக்குப் பிறகு, இந்தத் தொடரின் தொடக்கத்திற்கு முன்பு இருந்ததை விட, டி20 உலகக் கோப்பை அணியின் மேக்-அப் குறித்த பல கேள்விகளுக்குப் பதிலளிக்க இந்திய அணி நெருங்கி வந்துவிட்டது. ஏன்னென்றால், இந்தியன் பிரீமியர் லீக்கில் நிலையான ஆட்டத்தைத் தொடர்ந்திருந்த பாண்டியா மற்றும் கார்த்திக் இந்திய அணியில் மறுபிரவேசம் செய்துள்ளனர். அவர்களின் சிறப்பான ஆட்டத்தால் அணியில் நிலையான இடத்தைப் பிடிப்பதற்கான நங்கூரத்தை இறக்கிவிட்டுள்ளனர். மேலும், அவர்கள் தங்களது ஃபினிஷிங் ரோலை சரியாக செய்தததோடு, ராஜ்கோட்டில் அணி தொடரில் இருந்து மீண்டெழுந்து வர உதவி இருந்தனர்.

இந்தத் தொடரில் தலா இரண்டு முறை மட்டுமே ஆட்டமிழந்துள்ள பாண்டியா – கார்த்திக் ஜோடி முறையே 153.94 மற்றும் 158.62 ஆகிய ஸ்ட்ரைக் ரேட்டை கொண்டுள்ளனர். இந்த ஜோடியின் இப்படியான குறிப்பிடத்தக்க ஆட்டம் இந்திய அணியில் மிடில் -ஆடரில் நிலவிய வெற்றிடத்தை நிரப்பி இருக்கிறது. ஐபிஎல் தொடரில் அவர்கள் அளித்த அதே உழைப்பை இந்திய அணிக்கும் கொடுத்து வருவது, இந்தாண்டு இறுதியில் ஆஸ்திரேலியாவில் நடைபெறும் டி20 உலகக் கோப்பை தொடருக்கான இந்திய அணி வாய்ப்பை பெற்று தரும்.

தினேஷ் கார்திக்கை பொறுத்தவரை, அவரது இந்திய அணி ‘கம் பேக்’ கிரிக்கெட் ரசிகர்களுக்கும், முன்னாள் வீரர்களுக்கும் பெரும் ஆர்வத்தை கொண்டு வந்தது. 2019ம் ஆண்டு நடந்த ஒருநாள் உலகக் கோப்பை அரையிறுதியில் இந்தியா வெளியேறிய பிறகு, தற்போது தான் இந்திய அணியில் இடம்பிடிருக்கும் தினேஷ் கார்திக், இடைப்பட்ட காலத்தில் வர்ணனையில் ஈடுபட்டு இருந்தார். அப்போது அவர், இப்போது இந்திய அணியில் விளையாடும் சில மூத்த வீரர்களை பேட்டி கண்டிருந்தார். தற்போது அவர்களுடனான அணியிலே அவர் இணைந்திருப்பது அவருக்கு பெருமகிழ்ச்சியை கொண்டுவந்துள்ளது.

“(கார்த்திக்) அவர் தனது ஃபினிஷிங் ரோலில் தீவிரமாக இருந்தார். அவர் நிச்சயமாக விளையாட்டில் சிறந்த ஃபினிஷர்களில் ஒருவர். அவர் வழக்கத்திற்கு மாறான பகுதிகளில் ஸ்கோர் செய்கிறார். இதனால் அவருக்கு பந்துவீசுவது கடினமாகிறது, ”என்று தென்ஆப்பிரிக்காவின் இடது கை சுழற்பந்து வீச்சாளர் கேசவ் மகாராஜ் ராஜ்கோட்டில் நடந்த டி20 ஆட்டத்திற்கு பிறகு கூறியிருந்தார்.

கவலை தரும் பண்ட்டின் ஃபார்ம்…

தென்ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான தொடரில் இந்திய அணியை வழிநடத்திய ரிஷப் பண்ட், அணிக்கு சிறப்பான முறையில் தலைமை தாங்கினார். இருந்தாலும், அவரது ஃபார்ம் கவலைக்கிடமான முறையில் காணப்பட்டது. இதேபோல், ஷ்ரேயாஸ் ஐயரின் ஃபார்மும் மோசமான நிலையில் இருந்தது. நடைபெற்ற 4 ஆட்டங்களில் பண்ட் 105.55 ஸ்ட்ரைக் ரேட்டில் 57 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தார். அவர் தற்போது ஸ்டாண்ட்-இன் கேப்டனாகவும், டி20 ஆட்டத்திற்கான விக்கெட் கீப்பராகவும் இருக்கும் நிலையில், அவரின் இந்த தற்காலிக ஃபார்ம்-அவுட் மிகவும் கவலையளிக்கும் ஒன்றாக உள்ளது.

ஒருவேளை அவர் தனது ஃபார்மிற்கு திரும்பாத பட்சத்தில் இந்தியா அடுத்த தேர்வுக்கு சென்று விடும். அவருக்கு பதில் செல்ல தற்போது இந்திய அணியில் நிறைய பேக்-அப் விருப்பங்கள் உள்ளன. அதில் தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான தொடரில் விளையாடிய இந்திய அணியிலே இரு வீரர்கள் (தினேஷ் கார்த்திக், இஷான் கிஷன் ) உள்ளனர். இவர்களைத் தவிர, அதிரடி வீரர் கே.எல். ராகுல் வேறு இருக்கிறார். ஆதலால், பண்ட் எதிர் வரும் தொடர்களில் தனது ஃபார்மை மீட்டெடுப்பது அவசியமான ஒன்றாக உள்ளது.

தமிழ்இந்தியன்எக்ஸ்பிரஸின்அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்டெலிகிராம்ஆப்பில்பெறhttps://t.me/ietamil

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.