ஒரு நாள் பயணமாக நீலகிரி மாவட்டத்துக்கு வந்திருந்த பால் வளத்துறை அமைச்சர் நாசர், நீலகிரி மாவட்டம், ஊட்டியில் இயங்கிவரும் ஆவின் பால் உற்பத்தி மையம், ஆவின் பாலகங்கள் மற்றும் பால் கொள்முதல் நிலையங்களை ஆய்வு செய்தார். ஆய்வுக்குப்பிறகு செய்தியாளர்களைச் சந்தித்துப் பேட்டி அளித்த அமைச்சர் நாசர், “நம் முதல்வர் உத்தரவின் பேரில், தமிழ்நாட்டில் உள்ள ஆவின் நிறுனங்களில் பால் உற்பத்தி செய்வது, உற்பத்தி பொருள்களை அதிகரிப்பது மற்றும் சந்தைப்படுத்துவது குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கடந்த 10 ஆண்டுக்கால அ.தி.மு.க ஆட்சியில் சீரழிந்து கிடக்கும் ஆவின் நிறுவனத்தை நிலை நிறுத்தி, அதனை மேலும் வளம் பெற செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கடந்த 10 ஆண்டுகளில் நாள் ஒன்றுக்கு 32 லட்சம் லிட்டர் பால் கொள்முதல் செய்யப்பட்டு வந்தது.
ஆனால், தமிழ்நாடு முதல்வராக ஸ்டாலின் பொறுப்பேற்ற பிறகு, எடுக்கப்பட்ட பல்வேறு துரித நடவடிக்கைகளால் தற்போது நாள் ஒன்றுக்கு 43 லட்சம் லிட்டர் பால் கொள்முதல் செய்யப்படுகிறது. போலீஸில் ஏட்டய்யாவுக்கு இருக்கும் காமன்சென்ஸ்கூட ஐ.பி.எஸ் படித்து எஸ்.பி-யாக இருந்த அண்ணாமலைக்குக் கிடையாது. அவர் எப்படி காவல்துறை அதிகாரியாகப் பணியாற்றினார் என்பது எனக்கு வருத்தமளிக்கிறது. உண்மைக்குப் புறம்பான செய்திகளைப் பேசி, மக்களிடம் தவறான தகவல்களை பரப்பி வருகிறார். அவர் சொல்வது போல எந்த முறைகேடும் நடக்கவில்லை” என்றார்.