மகாராஷ்ட்ரா: மகாராஷ்ட்ராவின் சாங்லி மாவட்டத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஒன்பது பேர் அவர்களது வீட்டில் இறந்து கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது தற்கொலையாக இருக்கலாம் என்று காவல்துறை சந்தேகித்து விசாரணை நடத்தி வருகின்றனர். மும்பையிலிருந்து சுமார் 350 கி.மீ தொலைவில் உள்ள சாங்கி மாவட்டத்தில், அருகருகே உள்ள இரண்டு வீட்டில் 9 உடல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இறந்தவர்களான மாணிக் மற்றும் போபாட் வான்மோர் இருவரும் சகோதரர்கள். இவர்கள் இருவரின் குடும்பங்களும் அருகருகே வசித்து வந்துள்ளனர். மூத்த சகோதரரான மாணிக் கால்நடை மருத்துவராக பணியாற்றியுள்ளார். இவரின் வீட்டில் 6 உடல்களும், இரண்டாவது சகோதரரானா போபாட் வீட்டில் 3 உடல்களும் கிடைத்துள்ளன. இறந்தவர்களின் உடல்களில் வெளிப்புற காயங்கள் எதுவும் இல்லை, பூச்சிக்கொல்லி மருந்தை உட்கொண்டுள்ளதாகச் சந்தேகம் எழுகிறது. எனவே, இது தற்கொலையாக இருக்கலாம். எனினும் பிரேதப் பரிசோதனைக்கு பிறகே இறப்புக்கான சரியான காரணம் தெரியவரும் என்றார் தீக்ஷித். அத்துடன், இறந்த குடும்பத்தினர் அவர்களின் கிராமத்தைச் சேர்ந்த பலரிடமும், உறவினர்கள் பலரிடமும் நிறைய கடன் பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. அதனால், அவர்களுக்கு கடன் கொடுத்தவர்களிடமும் விசாரணை மேற்கொள்ள போலீசார் திட்டமிட்டுள்ளனர். ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 9 பேர் சடலங்களாக மீட்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.