ஜம்மு காஷ்மீரில் கடந்த 24 மணி நேரத்தில், 7 பயங்கரவாதிகளை என்கவுன்டரில் பாதுகாப்புப் படையினர் சுட்டுக் கொன்றனர்.
ஜம்மு காஷ்மீரில், பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்துவதும், அதற்கு பாதுகாப்புப் படையினர் பதிலடி கொடுப்பதும் தொடர் கதையாகி உள்ளது. இந்நிலையில், கடந்த 24 மணி நேரத்தில், ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்புப் படையினர் நடத்திய தேடுதல் வேட்டையில் 3 பாகிஸ்தானியர்கள் உட்பட 7 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
பாகிஸ்தானில் இருந்து வந்த லஷ்கா்-இ-தொய்பா அமைப்பைச் சேர்ந்த இருவர் நேற்று சுட்டுக் கொல்லப்பட்ட நிலையில், இன்று அதிகாலை ஒருவர் துப்பாக்கி முனையில் பிடிபட்டதாகவும், அவரையும் பாதுகாப்புப் படையினர் சுட்டுக் கொன்றதாகவும் ஜம்மு – காஷ்மீர் காவல் துறை தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக ஜம்மு – காஷ்மீர் காவல் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளதாவது:
காஷ்மீரின் குப்வாரா பகுதியில் நேற்று முதல் தாக்குதல் நடைபெற்று வருகிறது. இதில் லஷ்கா் – இ – தொய்பா அமைப்பைச் சேர்ந்த இருவர் நேற்று சுட்டுக் கொல்லப்பட்டனர். சோபியான் பகுதியில் உள்ளூரில் பதுங்கியிருந்த பயங்கரவாதி ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டார். இதே போன்று புல்வாமா பகுதியில் லஷ்கா் -இ – தொய்பா பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்த ஒருவர் கொல்லப்பட்டார்.
குல்காம் பகுதியில் ஜெய்ஷ் – இ – முகமது அமைப்பைச் சேர்ந்த ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டார். மேலும், அமர்நாத் யாத்திரையில் தாக்குதல் நடத்துவதற்காக அனுப்பப்பட்டிருந்த லஷ்கா் – இ- தொய்பா அமைப்பைச் சேர்ந்த இருவரை பாதுகாப்புப் படையினர் கண்டறிந்து தாக்குதல் நடத்தினர். இதில் இருவரும் கொல்லப்பட்டனர்.
இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டு உள்ளது.