கட்டண உயர்வு மற்றும் பணவீக்கம் காரணமாக கடந்த ஏப்ரல் மாதம் மட்டும் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் 70 லட்சம் வாடிக்கையாளர்களை இழந்து உள்ளதாக டிராய் தகவல் தெரிவித்துள்ளது.
இந்தியாவின் முன்னணி தொலைதொடர்பு நிறுவனங்களான ஜியோ, ஏர்டெல், வோடபோன் ஐடியா ஆகிய நிறுவனங்கள் ஏப்ரல் மாதத்தில் மட்டும் 70 லட்சம் வாடிக்கையாளர்களை இழந்து உள்ளன. இதற்கு முக்கிய காரணம் கட்டண உயர்வு என்று கூறப்பட்டாலும் பணவீக்கமும் இன்னொரு காரணமாக கூறப்பட்டு வருகிறது.
இனி இந்த கட்டணமும் அதிகரிக்கலாம்.. அதிரடி முடிவெடுக்க போகும் தொலைத்தொடர்பு நிறுவனங்கள்..!
70 லட்சம் வாடிக்கையாளர்கள்
சுமார் 70 லட்சம் வாடிக்கையாளர்கள் ரீசார்ஜ் செய்வதை ஏப்ரல் மாதத்தில் மட்டும் தவிர்த்து உள்ளதாக டிராய் தகவல் தெரிவித்துள்ளது. கடந்த 2020 ஆம் ஆண்டு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்ட போது நாடு முழுவதும் மிகப்பெரிய அளவில் வேலை இழப்புகள் ஏற்பட்டன.
செல்போன் ரீசார்ஜ்
பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே செல்லாத நிலை ஏற்பட்டதால் வருமானம் இல்லாமல் இருந்தனர். அதன் காரணமாக தங்களது செல்போனில் ரீசார்ஜ் செய்வது குறைந்ததாக தகவல் வந்தது. இதனை அடுத்து தற்போது இரண்டு ஆண்டுகளுக்குப் பின்னர் மீண்டும் மிகப்பெரிய இழப்பு தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு தற்போதுதான் ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இரண்டு சிம்கார்டுகள்
இரண்டு சிம்கார்டுகளை பயன்படுத்தி வந்த வாடிக்கையாளர்கள் கட்டண உயர்வு காரணமாக ஒரு சிம்கார்டில் ரீசார்ஜ் செய்வதை தவிர்த்து உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
ரிலையன்ஸ் ஜியோ
இந்த கட்டண உயர்வு காரணமாக குறைந்தபட்சமாக ஒரு லட்சம் வாடிக்கையாளர்களை ரிலையன்ஸ் நிறுவனத்தின் ஜியோ இழந்துள்ளதாகவும் அதனை அடுத்து பாரதி ஏர்டெல் 30.10 லட்சம் வாடிக்கையாளர்களையும், வோடபோன் ஐடியா 30.80 வாடிக்கையாளர்களை இழந்து உள்ளதாக டிராய் தெரிவித்துள்ளது.
புதிய சிம்கார்டு
ஆனால் அதே நேரத்தில் ஏப்ரல் மாதத்தில் புதிதாக சிம்கார்டு வாங்கியவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளன. ஜியோ நிறுவனத்தின் சிம்கார்டுகளை மட்டும் 17 லட்சம் வாடிக்கையாளர்கள் புதிதாக வாங்கி உள்ளதாகவும் இதனை அடுத்து அந்நிறுவனத்தின் வாடிக்கையாளர்களின் மொத்த எண்ணிக்கை 40.60 கோடி ஆக அதிகரித்துள்ளதாகவும் டிராய் தெரிவித்துள்ளது.
ஏர்டெல்
ஏர்டெல் நிறுவனம் 8 லட்சம் புதிய வாடிக்கையாளர்களை பெற்றுள்ளதாகவும் இதனையடுத்து இந்நிறுவனத்தின் மொத்த வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை 36.10 கோடியாக அதிகரித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வோடோபோன் ஐடியா
ஆனால் வோடோபோன் ஐடியா நிறுவனத்தின் வாடிக்கையாளர்கள் 16 லட்சம் பேர் குறைந்ததன் காரணமாக அதன் மொத்த வாடிக்கையாளர்கள் அளவு 25.90 கோடியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
வாட்ஸ் அப் – கூகுள்
வாட்ஸ்அப், கூகுள் உள்ளிட்ட பல்வேறு வசதிகள் மூலம் தற்போது மொபைல் போனில் இலவசமாக பேசும் வசதி வந்துவிட்டதால் தொலை தொடர்பு நிறுவனங்கள் கட்டணத்தை உயர்த்தினால் பொதுமக்கள் மாற்று வழியில் பேசிக் கொள்வார்கள் என்பதும் அதுவும் வாடிக்கையாளர்களை தொலைத்தொடர்பு நிறுவனங்கள் இழப்பதற்கு ஒரு காரணமாகவும் கருதப்படுகிறது. எனவே தொலைத்தொடர்பு நிறுவனங்கள் கட்டண உயர்வு குறித்து மறுபரிசீலனை செய்து கட்டணத்தை குறைத்தால் மீண்டும் பழைய எண்ணிக்கையிலான வாடிக்கையாளர்கள் கிடைக்கும் வாய்ப்பு உண்டு என்பது குறிப்பிடத்தக்கது.
70 lakh telecommunication customers switched off in the month of April: why?
70 lakh telecommunication customers switched off in the month of April: why?