Jayakumar says no intention of sidelining O Pannerselvam in ADMK: அ.தி.மு.க.,வில் ஒற்றைத் தலைமை என்பது காலத்தின் கட்டாயம் என்றும், ஓ.பன்னீர்செல்வத்தை ஓரம் கட்டும் எண்ணம் கிடையாது என்றும், அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.
அ.தி.மு.க.,வில் கடந்த சில நாட்களாக ஒற்றைத் தலைமை விவகாரம் சூடு பிடித்துள்ளது. அ.தி.மு.க பொதுக்குழு ஜூன் 23 ஆம் தேதி கூட உள்ள நிலையில், அந்த கூட்டத்திலேயே ஒற்றைத் தலைமை குறித்த முடிவெடுக்க காய்கள் நகர்த்தப்பட்டு வருகின்றன. இதில் எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆதரவாக பெரும்பாலான மாவட்ட செயலாளர்களும், தலைமைக் கழக நிர்வாகிகளும் இருப்பதாக கூறப்பட்டு வருகிறது.
இதையும் படியுங்கள்: பொதுக்குழு முடிவை ஓ.பி.எஸ், இ.பி.எஸ் இருவரும் ஏற்பார்கள்: கே.பி முனுசாமி
இந்தநிலையில், ஓ.பி.எஸ் மற்றும் இ.பி.எஸ் தங்களுக்கான ஆதரவு நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தி வருகின்றனர். இருவரையும் கட்சியின் பல்வேறு கட்ட நிர்வாகிகள் சந்தித்து தங்கள் ஆதரவை தெரிவித்து வருகின்றனர். இதில் சில நிர்வாகிகள் வெளிப்படையாகவே, இ.பி.எஸ்-ஐ பொதுச்செயலாளர் ஆக்க வேண்டும், ஓ.பி.எஸ் இதனை ஏற்றுக் கொள்ள வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர்.
ஏற்கனவே, முதல்வர் வேட்பாளர், எதிர்கட்சி தலைவர் போன்றவற்றில் ஓ.பி.எஸ் நினைத்தது நடக்காத நிலையில், தற்போது தலைமை பொறுப்பும் அவரிடம் இருந்து பறிபோகும் சூழல் உருவாகியுள்ளதாக கூறப்படுகிறது. இதனையடுத்து, ஓ.பி.எஸ் ஓரம் கட்டப்படுகிறாரா என்ற கேள்வி அரசியல் வட்டாரத்தில் எழுந்துள்ளது.
இந்தநிலையில், இன்று செய்தியாளர்களைச் சந்தித்த அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், அ.தி.மு.க.,வில் ஒற்றைத் தலைமை என்பது காலத்தின் கட்டாயம். தற்போதுள்ள சூழ்நிலையில், அ.தி.மு.க.,விற்கு ஒற்றைத் தலைமை அவசியம் என்பது அடிமட்டத் தொண்டர்கள், மாவட்ட கழகச் செயலாளர்கள், தலைமை கழக நிர்வாகிகளின் எண்ணமாக இருக்கிறது. அது தான் தற்போது பிரதிபலிக்கப்பட்டிருக்கிறது. எந்த வித உள்நோக்கமும் கிடையாது. கட்சியைப் பொறுத்தவரை உச்சப்பட்ச அதிகாரம் பொதுக்குழுவுக்குத் தான். பொதுக்குழு தான் முடிவுகளை எடுக்கும், அதில், சுமுகமான தீர்வு எட்டப்படும் என்று கூறினார்.
நீங்கள் எந்தப்பக்கம் என செய்தியாளர்கள் கேட்டப்போது, அதெல்லாம் ரகசியம். எனக்கு கட்சி தான் முக்கியம். கட்சி பக்கம் தான் இருப்பேன். எனக்கு பதவி ஆசை எல்லாம் கிடையாது என்று ஜெயக்குமார் கூறினார்.
அடுத்ததாக, சசிகலாவை ஓரம் கட்டியதைப் போல், ஓ.பன்னீர்செல்வத்தையும் ஓரம் கட்டும் முயற்சியா என செய்தியாளர்கள் கேட்டபோது, அப்படி எல்லாம் கிடையாது. சசிகலாவைப் பொறுத்தவரை, அவங்க கட்சிக்கு சம்பந்தம் இல்லாதவங்க, கட்சிக்கு எந்த வித தொடர்பும் இல்லாதவங்க அதபத்தி நான் எதுவும் பேசல, ஆனால் ஓ.பி.எஸ் அண்ணனைப் பொறுத்தவரை, கட்சிக்கு ஒருங்கிணைப்பாளர் அவர் தான், அவரை ஓரம் கட்டும் எண்ணம் கிடையாது என்று ஜெயக்குமார் பதிலளித்தார்.