சென்னை: தமிழகத்தில் கரோனா தொற்று வேகமாக அதிகரித்து வருவதால் முதல் 2 தவணைகள், பூஸ்டர் தடுப்பூசியை மக்கள் விரைவாக போட்டுக்கொள்ள வேண்டும் என்று சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் அவர் நேற்று கூறியதாவது:
தமிழகத்தில் கரோனா தொற்று அச்சுறுத்தலாக உள்ளது. தொற்று வேகமாக பரவும் தன்மை கொண்டதாக உள்ளது. தமிழகத்தில் கடந்த 19-ம் தேதி தொற்று எண்ணிக்கை 692. இதில், சென்னையில் மட்டும் 306 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். பரவலை தடுக்க தமிழக அரசும், சென்னை மாநகராட்சியும் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றன. பாதிப்பு 600-க்கு மேல் இருந்தாலும் உயிரிழப்பு இல்லை.
தொற்றில் இருந்து பாதுகாப்பாக இருக்க அனைவரும் முகக்கவசம் அணிய வேண்டும். சமூக இடைவெளியைக் கடைபிடிக்க வேண்டும். கரோனா தொற்று வேகமாகப் பரவி வருவதால் பொதுமக்கள் கட்டாயம் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும். நாட்டில் கரோனா தடுப்பூசி முதல் 2 தவணை போட்டுக் கொண்டவர்கள் எண்ணிக்கை 80-90 சதவீதத்தைக் கடந்தாலும், பூஸ்டர் தவணை போட்டுக் கொண்டவர்கள் எண்ணிக்கை குறைவாகவே உள்ளது. 2 தவணை தடுப்பூசி போட்டு 9 மாதங்கள் முடிந்தவர்கள் விரைவாக பூஸ்டர் தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும்.
18-59 வயதினர் பூஸ்டர் தடுப்பூசியை தனியாரிடம் ரூ.386 கட்டணம் செலுத்தி போட்டுக்கொள்ள வேண்டியுள்ளது. இதனால் பலரும் தயக்கம் காட்டுகின்றனர். நிறுவனங்களின் சமூகப் பொறுப்பு (சிஎஸ்ஆர்) நிதி பங்களிப்புடன் தனியாரிடம் இலவசமாக பூஸ்டர் தடுப்பூசி போடும் திட்டத்தை கொண்டுவர முதல்வர் ஸ்டாலின் நடவடிக்கை எடுத்து வருகிறார்.
தமிழகத்தில் 39.23 லட்சம் பேர் முதல் தவணை, 1.13 கோடி பேர் 2-ம் தவணை போடாமல் உள்ளனர். அவர்கள் அரசு மருத்துவமனைகளுக்கு சென்று முதல் மற்றும் 2-ம் தவணை தடுப்பூசியை இலவசமாகப் போட்டுக்கொள்ள வேண்டும். அரசு மருத்துவமனைகளில் 60 வயதைக் கடந்த இணைநோய் உள்ளவர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசி இலவசமாக போடப்படுகிறது.
ஜூலை 10-ல் மெகா முகாம்
ஜூலை 10-ம் தேதி தமிழகத்தில் 1 லட்சம் இடங்களில் மெகா தடுப்பூசி முகாம் நடக்க உள்ளது. இதில் முதல் 2 தவணைகள், பூஸ்டர் தவணை தடுப்பூசி போடப்பட வேண்டியவர்களின் பட்டியல் தயாரித்து, அவர்களுக்கு தடுப்பூசி போட நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அமைச்சர் கூறினார்.