மதுரை: பிளஸ் 2 தேர்வு முடிவுகள் இன்று வெளியான நிலையில், மதுரை உள்ளிட்ட தென் மண்டலத்திலுள்ள கலை, அறிவியல் கல்லூரிகளில் சேர மாணவ, மாணவிகள் ஆன்லைன் மூலம் விண்ணபிக்க ஆர்வம் காட்டியுள்ளனர்.
மதுரை, தேனி, திண்டுக்கல், விருதுநகர், ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்கள் அடங்கிய கல்லூரி கல்விக்கான தென்மண்டலத்தில் 26 அரசு கலை, அறிவியல் கல்லூரிகளும், 40 அரசு உதவி பெறும் கலை அறிவியல் கல்லூரிகள், மதுரை காமராசர் பல்கலைக்கழக கல்லூரி ஒன்றும் மற்றும் 50க்கும் மேற்பட்ட தனியார் கல்லூரிகளும் செயல்படுகின்றன.
ஒவ்வொரு அரசு கல்லூரியிலும் கலைப்பாட பிரிவில் சுமார் 60 மாணவ, மாணவிகளும், ஆய்வகத்துடன் கூடிய சயின்ஸ் பாடப் பிரிவுகளில் சுமார் 40 பேரும் சேர்க்கப்படும் என்பது விதிமுறை. இவற்றில் மதிப்பெண் அடிப்படையில் இனச்சுழற்சி முறையில் மட்டுமே மாணவர்கள் சேர்க்கப்படுகின்றனர். இதர அரசு உதவிபெறும், தனியார் கல்லூரிகள் உட்பட அனைத்துக் கல்லூரிகளிலும் ஷிஃப்ட் 2 வகுப்புகளும் நடத்தப்படுகின்றன.
இவற்றில் ஒவ்வொரு பாடப்பிரிவிலும், வகுப்பறை, ஆசிரியர்களின் வசதிக்கேற்ப மாணவர்கள் கூடுதல், குறைவாக சேர்க்கப்படுவது நடை முறையில் இருக்கிறது. கரோனாவை தொடர்ந்து கடந்த 2 ஆண்டாக கல்லூரியில் சேர ஆன்லைன் விண்ணப்ப முறை அறிமுகப்படுத்தி அது நடைமுறையில் உள்ளது. இவ்வாண்டும் அனைத்துக் கல்லூரிகளுக்கும் ஆன்லைனில் விண்ணப்பிக்கவேண்டும் என கல்லூரி முதல்வர்கள் மற்றும் நிர்வாகத்தினர் அறிவித்துள்ளனர்.
இந்நிலையில், பிளஸ் 2 தேர்வு முடிவு வெளியாகும் முன்பே தென் மாவட்டத்திலுள்ள அரசு உதவி பெறும் மற்றும் தனியார் கல்லூரிகள் ஆன்லைனில் விண்ணப்பிக்கங்கள் வரவேற்க தொடங்கின. இன்று தேர்வு முடிவு வெளியான போதிலும், அரசு உதவி பெறும் மற்றும் தனியார் கல்லூரிகளில் சேர ஆன்லைனில் விண்ணபிக்க மாணவர்கள் ஆர்வம் காட்டினர். மதுரை உட்பட பல்வேறு இடங்களில் கம்ப்யூட்டர் மையங்களில் மாணவர்கள் கூட்டம் இருந்தது. இதற்கிடையில் அரசு கல்லூரிகளில் விண்ணப்பிக்கும் தேதியை உயர்கல்வித் துறை அறிவித்துள்ளது.
இதன்படி, ஜூன் 22 முதல் ஜூலை 15ம்தேதி மாலை 5 மணி வரை விண்ணப்பிக்கலாம் அவகாசம் வழங்கி அறிவிப்பு வெளியிட்டு இருப்பதாக கல்லூரி கல்வி இயக்குநரகம் தெரிவித்துள்ளது. www.tngasa.in, www. tngasa.org என்ற இணை முகவரியில் மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் இதற்கான இணைய முகவரி 22ம் தேதி முதல் திறக்கப்படும் என தெரிகிறது.
மீனாட்சி அரசினர் மகளிர் கல்லூரியில் சேர ஜூன் 22ம்தேதி காலை 10 முதல் ஜூலை மாலை 5 மணிவரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என, அக்கல்லூரி முதல்வர் வானதி தெரிவித்துள்ளார். இது குறித்து கல்லூரி முதல்வர்கள் கூறியது: ”கடந்த சில ஆண்டாகவே கலை, அறிவியல் கல்லூரிகளில் மாணவர்களின் சேர்க்கை அதிகரித்துள்ளது. குறிப்பாக பிகாம், பிஏ ஆங்கிலம், பிஎஸ்சி கணிதம், இயற்பியல், வேதியியல் போன்ற பாடப்பிரிவுகளில் சேர மாணவ, மாணவியர்கள் ஆர்வம் காட்டுகின்றனர். ஒரு சில அரசு உதவி பெறும் கல்லூரிகளில் சுயநிதி பிரிவில் பிகாம் பாடத்தில் வெவ்வேறு உட்பிரிவுகளில் புதிய வகுப்புகளும் செயல்படுகின்றன. ரெகுலர் பிகாம் கிடைக்காவிடில், சுயநிதி பிரிவில் சேருகின்றனர்.
சில கல்லூரிகளில் சுயநிதி பிரிவுகளும் நிரம்பி விடுகின்றன. தங்களுக்கான மாணவர் சேர்க்கை குறையலாம் என்ற அச்சத்தில் ஒருசில தனியார் கல்லூரிகளில் பிளஸ்-2 தேர்வு முடிவு வெளியாகும் முன்பே ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. சில கல்லூரிகளில் இன்று முதல் விண்ணப்பிக்க, அனுமதிக்கப்பட்டுள்ளது. அரசு உதவிபெறும் கல்லூரிகளில் அடுத்த மாதம் முதல், 2 வது வாரத்தில் மாணவர் சேர்க்கையை முடிக்கவும் திட்டமிட்டுள்ளனர்,” என்றனர்.
பழைய இடஒதுக்கீடு முறையை பின்பற்ற அறிவுறுத்தல்: கடந்த அதிமுக அரசு வன்னியர்களுக்கான உள் இடஒதுக்கீடு 10.5 சதவீதத்தை அறிவித்தது. இதற்கு எதிர்ப்பு கிளம்பிய நிலையில், உச்ச நீதிமன்றத்திலும் வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது. இவ்வாண்டுக்கான மாணவர் சேர்க்கை ஏற்கெனவே இருந்தபடி, அதாவது, ஓசி 31 சதவீதம், பிசி 26.5, பிசிஎம்-3.5, எம்பிசி, டிஎன்சி-20, எஸ்சி-15, எஸ்சி(ஏ)-3, எஸ்டி-1 என்ற இன சுழற்சி அடிப்படையில் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை அமல்படுத்த உயர்கல்வித் துறை அறிவித்து இருப்பதாக கல்லூரிக் கல்வி இயக்குநரகம் தெரிவிக்கிறது.