காரைக்கால்: காரைக்கால் மாவட்டத்தின் முந்தைய ஆட்சியர் பணியிட மாற்றம் செய்யப்பட்டு 2 மாதங்களை நெருங்கும் நிலையில் இன்னும் புதிதாக நிரந்தர ஆட்சியர் நியமிக்கப்படாமல் இருப்பது காரைக்கால் மாவட்ட மக்களிடையே வேதனையை ஏற்படுத்தியுள்ளது.
புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் புதுச்சேரி, காரைக்கால் ஆகிய 2 மாவட்டங்கள் மட்டுமே உள்ளன. 4 பிராந்தியங்களில் புதுச்சேரிக்கு அடுத்தபடியாக பெரிய பிராந்தியமாகவும், முக்கியத்துவம் வாய்ந்த பிராந்தியமாகவும் காரைக்கால் உள்ளது.
காரைக்கால் மாவட்ட ஆட்சியராக பணியாற்றி வந்த அர்ஜூன் சர்மா அந்தமான் நிக்கோபார் தீவுகளுக்கு பணியிடமாற்றம் செய்யப்பட்டார். இதையடுத்து, புதுச்சேரி மாவட்ட ஆட்சியர் இ.வல்லவன், காரைக்கால் ஆட்சியராக கடந்த ஏப்.30-ம் தேதி கூடுதல் பொறுப்பேற்றுக்கொண்டார். பின்னர், இதுவரை புதிதாக நிரந்தர ஆட்சியர் நியமிக்கப்படவில்லை.
இம்மாவட்டத்தில் விவசாயம், மீன்பிடித் தொழில் ஆகியவை பிரதான தொழில்களாக உள்ளன. இத்தொழில்கள் சார்ந்தும், மக்கள் நலன் சார்ந்தும் பல்வேறு பிரச்சினைகள், கோரிக்கைகள் அன்றாடம் முன்வைக்கப்படுகின்றன. ஆனால், இவற்றுக்கெல்லாம் தீர்வு காணவேண்டிய மாவட்ட நிர்வாக பொறுப்பில் நிரந்தர ஆட்சியர் நியமிக்கப்படாமல் இருப்பது நிர்வாக ரீதியான பாதிப்புகளையும், பொதுமக்களிடையே வேதனையையும் ஏற்படுத்தியுள்ளது.
புதுச்சேரி ஆட்சியர் வேறு சில முக்கிய பொறுப்புகளையும் வகிப்பதால் பணிச்சுமை காரணமாக அவரால் அடிக்கடி காரைக்கால் வந்து செல்வது என்பதும் இயலாத ஒன்றாக உள்ளது. மக்கள் தங்கள் பிரச்சினைகளை ஆட்சியரை சந்தித்து கூறமுடியவில்லை.
எனவே, நிரந்தர ஆட்சியர் நியமிக்கப்பட வேண்டும் என பல்வேறு அரசியல் கட்சிகள், மக்கள் பிரதிநிதிகள் உள்ளிட்டோர் பலமுறை வலியுறுத்தியும் அரசு கண்டுகொள்ளவில்லை.
இதனிடையே காரைக்கால் மக்கள் நாள்தோறும் காணொலி மூலம் புதுச்சேரியில் உள்ள ஆட்சியரை தொடர்புகொண்டு குறைகளைத் தெரிவிக்க ஏற்பாடு செய்யப்பட்டது. ஆனால், அதுவும் தொடரவில்லை.
ஜூன் 8-ம் தேதி காரைக்காலுக்கு வந்த துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன், இன்னும் ஒருவார காலத்தில் ஆட்சியர் நியமிக்கப்படுவார் எனக் கூறினார். ஆனாலும், இதுவரை நியமிக்கப்படவில்லை.
இதுகுறித்து முன்னாள் அமைச்சர் ஆர்.கமலக்கண்ணன் ‘இந்து தமிழ்’ நாளிதழிடம் கூறியது: மாவட்டத்தில் பல்வேறு துறைகளில் பல பிரச்சினைகள் நீடிக்கின்றன.
முக்கியமாக தற்போது விவசாயப் பணிகள் தொடங்கியுள்ள சூழலில் விவசாயிகளின் பிரச்சினைகளை கண்காணித்து, ஆய்வு செய்து தீர்வு காணவேண்டியது, மத்திய அரசின் திட்டங்களை கண்காணிக்க வேண்டியது, அன்றாடம் மாவட்டத்தில் நிலவும் மக்கள் பிரச்சினைகளை அறிந்துகொள்ள வேண்டியது உள்ளிட்ட பல முக்கிய பொறுப்புகள் ஆட்சியரிடம் உள்ளன.
தமிழகப் பகுதிக்கு இடைபட்ட பகுதியாக இருப்பதால், மக்கள் நலப் பணிகள் தொடர்பாக அருகில் உள்ள மாவட்டங்களின் ஆட்சியர்களுடன் பேச வேண்டியதும் ஆட்சியர்தான்.
ஆனால், அப்படியான ஒரு பணியிடத்தில் நிரந்தர அதிகாரியை இவ்வளவு நாட்கள் நியமிக்காமல் இருப்பது, அரசின் நிர்வாக சீர்கேட்டை காண்பிக்கிறது. அதுவும் ஏற்கெனவே காரைக்காலில் ஆட்சியராக பணியாற்றியுள்ளவரையே மீண்டும் பொறுப்பு ஆட்சியராக நியமித்திருப்பது கண்டிக்கத்தக்கது.
முன்பெல்லாம் 6 ஐஏஎஸ் அதிகாரிகள் மட்டுமே இருந்த புதுச்சேரியில் தற்போது 20-க்கும் மேற்பட்ட ஐஏஎஸ் அதிகாரிகள் இருந்தும், காரைக்காலுக்கு ஆட்சியர் நியமிக்கப்படவில்லை.
தங்களுக்கு சலுகை செய்யக்கூடிய ஒரு ஆட்சியர் காரைக்காலில் இருக்க வேண்டும் என்ற நோக்கில் அரசு காலம் தாழ்த்தி வருவதாக தெரிகிறது. மக்களுக்கான பணிகள் பாதிக்கப்படுவதால் உடனடியாக நிரந்தர ஆட்சியர் நியமிக்கப்பட வேண்டும் என்றார்.