புதுடெல்லி: குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தை பிரதமர் மோடி நேற்று சந்தித்துப் பேசினார்.
டெல்லியில் குடியரசுத் தலைவர் மாளிகைக்கு பிரதமர் மோடி நேற்று சென்றார். அங்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தை மோடி சந்தித்துப் பேசினார். 40 நிமிடங்கள் இந்த சந்திப்பு நடைபெற்றது. பின்னர், குடியரசுத் தலைவர் மாளிகை வெளியிட்ட செய்தியில், குடியரசுத் தலைவரை பிரதமர் சந்தித்துப் பேசியதாக தெரிவித்துள்ளது. இது வழக்கமான சந்திப்புதான் என்று குடியரசுத் தலைவர் மாளிகை வட்டாரங்கள் தெரிவித்தன.
இந்த சந்திப்பின்போது இருவரும் தேசிய மற்றும் சர்வதேச அளவிலான விஷயங்கள் பற்றி பேசியதாகவும் குறிப்பாக சமீபத்தில் அறிவிக்கப்பட்ட ராணுவத்துக்கு இளைஞர்களை சேர்க்கும் அக்னிபாதை திட்டத்துக்கு எதிராக நடக்கும் போராட்டங்கள் குறித்தும் பேசியதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் பதவிக் காலம் ஜூலை 24-ம் தேதியுடன் முடிகிறது. குடியரசுத் தலைவர் தேர்தல் ஜூலை 18-ம் தேதி நடக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், குடியரசுத் தலைவரை பிரதமர் சந்தித்திருப்பது குறிப்பிடத்தக்கது.