மாணவர்களின் வாசிப்புப் பழக்கத்தை வளர்க்கவும், அவர்களின் படைப்பாற்றலைக் கண்டறிந்து வெளிப்படுத்தவும், ‘இளம் வாசகர் வட்டம்’ என்ற செயல்பாட்டைக் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறை கொண்டுவந்தது.
நூலகத்திற்கென ஒரு பாடவேளையும் ஒதுக்கப்பட்டது. பள்ளி நூலகங்கள் பயன்பாட்டுக்கு வந்தன. வாரந்தோறும் பள்ளி அளவில், கல்வி மாவட்ட அளவில், மாவட்ட அளவில், தமிழக அளவில் போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன. ஓவியம், கட்டுரை, விமர்சனம், கவிதை, சிறுகதை, நாடகம் ஆகிய வழிகளில் புத்தகம் குறித்து மாணவர்கள் பார்வை வெளிப்படத் தொடங்கியது.
மாணவர்களின் செயல்பாட்டில் ஆழ்ந்த தாக்கம் செலுத்தத் தொடங்கியது இளம் வாசகர் வட்டம். அதன் விளைவாக, தமிழ்நாட்டில் முன்னோடிய் முயற்சியாக கும்பகோணத்தில் உள்ள அறிஞர் அண்ணா அரசு மேல்நிலைப் பள்ளியில் அமைந்த இளம் வாசகர் வட்டம், ‘25 கதைகள்’ என்ற மாணவர்கள் எழுதிய கதைகள் அடங்கிய மின்னூலை வெளியிட்டிருக்கிறது.
இந்த முன்னெடுப்பு குறித்து, அறிஞர் அண்ணா அரசு மேல்நிலைப் பள்ளியில் தமிழாசிரியராகப் பணியாற்றும், தமிழின் முக்கியக் கவிஞர்களில் ஒருவரான ரா.தாமோதரன் என்ற இயற்பெயர் கொண்ட ராணி திலக் பகிர்ந்துகொள்கிறார்.
“எங்கள் பள்ளி மாணவர்கள் பலர் வாசகர்களாக, கதைசொல்லிகளாக, எழுத்தாளர்களாக, ஓவியர்களாக மாற மாபெரும் வாய்ப்பைத் தந்ததுதான் இளம் வாசகர் வட்டம். சுமார் ஐந்து மாதங்கள் நடந்த வாசித்தல், எழுதுதல் போட்டியில் இருநூறுக்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கெடுத்தார்கள். மிகச்சரியான படைப்புகளைத் தொகுக்கும்போது அவை ஒரு தொகுதியாக அமைந்தது எதிர்பாராத ஒன்று. இங்கே எழுதியிருக்கும் குட்டி எழுத்தாளர்கள் படைப்பின் மணலில் ‘அ’ என்ற எழுத்தை எழுதிப்பார்த்திருக்கிறார். இக்கதைகளை ஒருசேர வாசிக்கும்போது படைப்புகள் எல்லாம் ஒரு முழுமையை நோக்கிய பயணம் என்றே தோன்றுகிறது. இக்கதைகளில் ஒரு வெகுளித்தன்மை வெளிப்படுவதை உணரமுடிகிறது. சிறிய குழந்தைகளின் படைப்புகளைத் தொகுத்து அவர்களிடம் காட்டும்போது, அவர்கள் முதிர்ந்த எழுத்தாளராகிவிடுகிறார்கள். இது எல்லா அரசுப் பள்ளிகளிலும் நடக்கவேண்டும். நடந்தால் அது மாபெரும் சாதனை.
‘25 கதைகள்’ தொகுப்பு கிண்டில் வடிவில் வரவேண்டும் என்று மாணவர்களும் நானும் விரும்பினோம். ‘அழிசி’ பதிப்பகத்தின் ஸ்ரீநிவாச கோபாலம் புத்தகத்தை வடிவமைத்துக் கொடுத்தார். இந்தத் தொகுப்பு உருவாவதற்கும், அது கிண்டில் வடிவம் பெறுவதற்கும் வழி ஏற்படுத்திக் கொடுத்த பள்ளிக் கல்வித்துறைக்கு நன்றி,” என்றார்.
இப்பள்ளியின் தலைமை ஆசிரியர் ஆதரவுடன், மாணவர்களுடன் ஆசிரியர்கள் இணைந்து, ‘Operation – Digi’ என்ற திட்டத்தை உருவாக்கி செயல்படுத்தி வருகிறார்கள். ‘பள்ளி நூலகத்தைப் பாதுகாப்போம்’ என்ற தாரக மந்திரத்துடன், பள்ளி நூலகத்தில் உள்ள பழமையான, அரிய, காப்புரிமையற்ற நூல்களை ஸ்மார்ட்போனில் ஸ்கேன் செய்து, புத்தகத்தை பிடிஎஃப் வடிவத்துக்கு மாற்றுகின்றனர். தங்கள் பள்ளிக்கெனத் தொடங்கப்பட்ட www.aaghsskumbakonam.blogspot.in வலைப்பூவில் அந்தப் புத்தகங்களைப் பதிவிட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.