சாலையில் வீசப்படும் குழந்தைகள்:
நேற்று முந்தினம் (18.06.2022) தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள வேலிப்பட்டி பகுதியில், பிறந்து சிலமணி நேரம் ஆன ஆண் குழந்தை முட்புதர் அருகே அழுதுகொண்டிருந்ததை அந்த பகுதி மக்கள் பார்த்தனர். அந்த குழந்தையின் அருகில் யாரும் இல்லாததையடுத்து அந்தப்பகுதி வாசிகள் இதுகுறித்த தகவலை அருகில் உள்ள காவல்நிலையத்துக்குத் தெரிவித்தனர். சம்பவ இடத்துக்கு விரைந்துவந்த காவல்துறையினர் குழந்தையை மீட்டு தஞ்சை அரசு ராசா மிராசுதார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு அந்த குழந்தைக்குச் சிகிச்சை அளிக்கப்பட்டது.
இதேபோல, கடந்த சில தினங்களுக்கு முன்பாக மதுரைக்கு அருகில் உள்ள உசிலம்பட்டி பகுதியில் சாலையில் ஒரு ரத்தக்கறையுடன் இருந்த துணியை நாய்கள் கடித்துக் கொண்டிருந்தது. இதனைப் பார்த்த அந்த பகுதி மக்கள் இதுகுறித்து உசிலம்பட்டி பகுதி காவல்நிலையத்துக்குத் தகவல் தெரிவித்தனர். விரைந்து வந்த போலீஸார், அந்த துணியை எடுத்துப் பார்த்தபோது, பிறந்து சிலமணி நேரம் ஆன ஒரு பச்சிளம் குழந்தையை நாய்கள் கடித்து குதறியிருப்பது தெரியவந்தது. சிதைந்த நிலையிலிருந்த குழந்தையை மீட்ட போலீஸார் பிரேதப் பரிசோதனைக்காக உசிலம்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
தொட்டில் குழந்தை திட்டம்:
கடந்த ஒரு வாரத்தில் மட்டும் இரண்டு பச்சிளம் குழந்தைகளைத் தெருக்களில் வீசி செல்லும் சம்பவங்கள் நடந்துள்ளன. மேலும், சமீபகாலமாக, தமிழகத்தில் இதுபோன்ற நிகழ்வுகள் தொடர்கதையாகிக் கொண்டிருக்கிறது. தமிழ்நாட்டில் மதுரை, தேனி, திண்டுக்கல், தருமபுரி போன்ற மாவட்டங்களில் பெண் சிசுக்கொலை அதிகரித்துக்காணப்பட்டது ஒரு ஆய்வில் தெரியவந்தது. குடும்ப வறுமை காரணமாகவும், பெண் குழந்தையை வளர்க்க விருப்பம் இல்லாதவர்களும் தங்களுக்குக் குழந்தையைக் கொலை செய்வதும், சாலைகளில் வீசி செல்லும் அவலமும் அதிகரித்தது. பெண் சிசுக் கொலையை முற்றிலும் தடுக்கும் நோக்கத்தோடு, கடந்த 1992-ம் ஆண்டு அன்றைய முதல்வர் ஜெயலலிதா `தொட்டில் குழந்தை’ திட்டத்தை அறிமுகம் செய்துவைத்தார்.
முதலில் சேலத்தில் அறிமுகம் செய்யப்பட்ட இந்த திட்டம், படிப்படியாக மற்ற மாவட்டங்களுக்கும் விரிவுபடுத்தப்பட்டது. இந்த திட்டத்தின்படி, அரசு மருத்துவமனைகள், ஆரம்பச் சுகாதார நிலையங்கள் மற்றும் காப்பகங்களில் தொட்டில் வைக்கப்பட்டன. தங்கள் குழந்தையை வளர்க்க விரும்பாத பெற்றோர்கள் அந்த குழந்தையை இந்த தொட்டிலில் வைத்துச் செல்லலாம். அந்த குழந்தையை முறைப்படி, உள்நாட்டில் அல்லது வெளிநாட்டில் வாழும் இந்தியர்களுக்குத் தத்து கொடுக்கப்படும் நடைமுறை வழக்கத்தில் உள்ளது. தற்போது இந்த திட்டம் பெயரளவில் மட்டுமே செயல்பட்டுவருவதாக சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
என்ன ஆனது இந்த திட்டம்?
இந்த திட்டம் இப்போது எப்படிச் செயல்படுகிறது என்பது குறித்து சமூகநலத்துறை உயர் அதிகாரி ஒருவரிடம் பேசினோம். “திட்டம் ஆரம்பித்தது முதல் கடந்த ஆண்டுவரை 5,600-க்கும் அதிகமான குழந்தைகள் தொட்டில் குழந்தை திட்டத்தின் மூலம் மீட்கப்பட்டுள்ளார். அதில் 1,200-க்கும் அதிகமான ஆண் குழந்தைகளும், 4,000-க்கும் அதிகமான பெண் குழந்தைகளும் ஆவர். ஒவ்வொரு அரசு மருத்துவமனைகளிலும் இந்த திட்டம் இன்றுவரை நடைமுறையில்தான் இருக்கிறது. இந்த திட்டத்துக்காக ஒவ்வொரு ஆண்டும் அரசு சார்பில் தொடர்ந்து நிதி ஒதுக்கப்படுகிறது. இந்த திட்டத்தின் மூலம் மீட்கப்படும் குழந்தைகளில் சிறப்புக் கவனம் தேவைப்படும் குழந்தைகள் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், கோவை போன்ற இடங்களில் உள்ள தொண்டு நிறுவனங்கள் நடத்தும் இல்லங்களில் பராமரிக்கப்பட்டு வருகிறார்கள்” என்றார்.
தொடர்ந்து பேசியவர், “அந்த குழந்தைகளுக்கான பராமரிப்பு தொகையை அந்த தொண்டு நிறுவனங்களுக்கு அரசு வழங்கிவருகிறது. தொட்டில் குழந்தை திட்டம் குறித்த விழிப்புணர்வும் தொடர்ந்து மக்களிடத்தில் ஏற்படுத்தப்பட்டு வருகிறது. வறுமை காரணமாகவோ அல்லது வேறு எந்த காரணமாக இருந்தாலும், குழந்தையை வளர்க்க விரும்பாத பெற்றோர்கள் அந்த குழந்தையைத் தொட்டிலில் வைத்துச் செல்லலாம். குழந்தை இல்லாது ஏங்கும் ஆயிரக்கணக்கான பெற்றோர்கள் நம் நாட்டில் இருக்கிறார்கள். அப்படி ஒரு பெற்றோருக்கு அந்த குழந்தை தத்துக்கொடுக்கப்படும். இருந்தபோதிலும், குழந்தைகளைத் தொட்டில்களில் விட்டுச் செல்லாது சாலைகளில் வீசி செல்லும் கொடூரமும் நடந்துகொண்டு தான் இருக்கிறது. இதனை முற்றிலும் தடுக்க அரசு சார்பில் தொடர் நடவடிக்கை எடுக்கப்பட்டுவருகிறது” என்று பேசினார்.
அரசு தரப்பில் அனைத்து மருத்துவமனைகளிலும் தொட்டில் குழந்தை திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது என்று சொன்னாலும், அந்த தொட்டில் எங்கே இருக்கிறது என்பதைத் தேடினால் கூட கிடைக்காத நிலையில் தான் இருக்கிறது. அரசு சார்பில் இந்த திட்டம் குறித்த கூடுதல் விழிப்புணர்வை ஏற்படுத்தவேண்டியது காலத்தின் தேவையாக உள்ளது என்பதே பல சமூக ஆர்வலர்களின் ஒருமித்த கருத்தாக உள்ளது. விரைந்து நடவடிக்கை எடுக்குமா அரசு?