கொரோனா வைரஸ் தொற்று கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக உலகம் முழுவதையும் ஆட்டிப் படைத்து வருகிறது. தொற்றை கட்டுக்குள் கொண்டு வர உலக நாடுகள் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்தன. நாடுகளின் எல்லைகள் மூடப்பட்டு பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டது.
திடீரென அமலப்படுத்தப்பட்ட பொதுமுடக்கம் உள்ளிட்ட கட்டுப்பாடுகளால் பொதுமக்கள் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகினர். சாமானிய மக்களின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டது. பொருளாதார பாதிப்பு ஒருபுறமிருக்க, வீட்டுக்குள்ளேயே பொதுமக்கள் முடங்கியதால், குடும்ப வன்முறை அதிகரித்ததுடன், மனநலப் பிரச்சினைகளுக்கும் ஆளாகினர்.
இந்த நிலையில், கொரோனாவால் உலக அளவில் 100 கோடி பேருக்கு மனநலப்பிரச்சனை ஏற்பட்டுள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. கொரோனா ஏற்படுத்திய தாக்கம் குறித்து உலக சுகாதார அமைப்பு அண்மையில் ஆய்வு ஒன்றினை மேற்கொண்டது.
சைக்கிளில் இருந்து விழுந்த ஜோ பைடன்: வெள்ளை மாளிகை அறிக்கை!
சர்வதேச அளவில் நடத்தப்பட்ட அந்த ஆய்வின் முடிவுகளின்படி, மனச்சோர்வுக்கு ஆளானோர் எண்ணிக்கை 2019ஆம் ஆண்டுக்கு பிறகு 25 சதவீதமாக அதிகரித்து உள்ளது. இதில் அதிக பாதிப்பு பெண்களுக்கும் இளைஞர்களுக்கும்தான் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 2019ஆம் ஆண்டுக்கு பிறகு உலகம் முழுதும் 100 கோடி பேர் மன நலப்பிரச்சினைகளுடன் வாழ்ந்து வருவதாக அந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதில், மிக மோசமாக பாதிக்கப்பட்டது குறைந்த மற்றும் நடுத்தர வருமானம் கொண்ட நாடுகள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா தொற்றுக்கு இரண்டு ஆண்டுகளுக்கு பிறகும், கொரோனாவானது அத்தியாவசிய சுகாதார சேவைகளை சீர்குலைத்து, மன மற்றும் பிற சுகாதார நிலைமைகளுக்கான சிகிச்சை இடைவெளியை விரிவுபடுத்துகிறது என்று அந்த அறிக்கை கூறுகிறது. இந்த ஆய்வானது 2021ஆம் ஆண்டின் கடைசி காலாண்டில் 223 நாடுகளில் மேற்கொள்ளப்பட்டுள்ளன. 129 நாடுகள் கணக்கெடுப்புக்கு பதிலளித்துள்ளன. இந்த நாடுகளில் 65 சதவீதம் கொரோனா நோய்த்தொற்றுக்கு இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகும் கூட மனநலப் பிரச்சினைக்கான சிகிச்சைகளில் இடையூறு இருப்பதாக தெரிவித்துள்ளன.
இந்த ஆய்வில் இந்தியா கலந்து கொள்ளவில்லை என்பதால், இங்கு மட்டும் எவ்வளவு பாதிப்பு என்பதை கூற இயலாது. அதேசமயம், குறைந்த மற்றும் நடுத்தர வருமானம் கொண்ட வகையான நாடுகளில் இந்தியாவும் ஒன்று என்பது கவனிக்கத்தக்கது.
கொரோனா தொற்று முந்தைய 2019ஆம் ஆண்டில் உலக அளவில் 970 மில்லியன் மக்கள் மனநலக் கோளாறுடன் வாழ்ந்து வந்தனர். இது ஐரோப்பா முழுவதிலும் இருந்த மொத்த மக்கள்தொகையை விட அதிகமாக இருந்தது. இதில் 82 சதவீதம் பேர் குறைந்த மற்றும் நடுத்தர வருமானம் கொண்ட நாடுகளை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.