சேலம் அம்மாப்பாளையம், பொன்னகர் பகுதியைச் சேர்ந்தவர் மோகன்தாஸ். இவர் ஸ்ரீரங்கப்பாளையத்தில் இயங்கிவரும் தனியார் வங்கி ஒன்றில் நகை மதிப்பீட்டாளராக இருந்து வருகிறார். இந்நிலையில் நேற்று தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து மோகன்தாஸின் மனைவி போலீஸாருக்கு தகவல் அளிக்காமலேயே, உறவினர்களுக்கு தனது கணவர் நெஞ்சுவலியில் இறந்துவிட்டதாக தகவல் அளித்துள்ளார். இதனிடையே மோகன்தாஸின் செல்போனிலிருந்து வீடியோ ஒன்று வெளியே பரவ ஆரம்பித்தது.
அதில் மோகன்தாஸ், “தற்கொலை செய்வதற்கு முன் இந்த வீடியோவை பதிவு செய்கிறேன். நான் இத்தனை ஆண்டுகாலமாக சம்பாதித்த பணத்தினை எனது மனைவி இமாகுலேட் மேரியிடம் கொடுத்து வந்தேன். அவரிடமிருந்து, எங்கள் பகுதியில் வசித்து வரும் சூரமங்கலம் காவல் நிலையத்தில் எஸ்.எஸ்.ஐ- ஆக பணியாற்றி சமீபத்தில் ஓய்வு பெற்ற சேகர் என்பவரின் மனைவி சாந்தி, மகள் சுபா ஆகியோர் அடிக்கடி கஷ்டத்திற்காக பணம் கேட்டு வாங்கியுள்ளனர். வாங்கிய பணத்தை அடிக்கடி கேட்டுப்பார்த்தும் அவர்கள் கொடுக்க முற்படவில்லை. இதனால், சூரமங்கலம் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தேன்.
ஆனால், சேகர் அதே காவல் நிலையத்தில் வேலை பார்ப்பதால், என்னுடைய மனுவுக்கு முக்கியத்துவம் கொடுத்து விசாரிக்கவில்லை, இதனால் முதலமைச்சர் அலுவலகம், டி.ஜி.பி.,அலுவலகத்திற்கு மனு அளித்தேன். ஆனால் அதிலும் எந்தவித நடவடிக்கையும் இல்லை. எனக்கு இரண்டு குழந்தைகள். அவர்களுடைய கல்வி செலவுக்கு கூட பணம் இல்லாமல் தவித்து வருகிறேன்.
பலமுறை பணத்தை திரும்பி தரக்கூறி கேட்டுப்பார்த்தும் எந்தவித பலனும் இல்லை. இவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று கூறியிருந்தார். இந்த வீடியோ போலீஸாரின் கைக்கு கிடைக்க மோகன்தாஸின் வீட்டுக்கு சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து போலீஸாரிடம் விசாரிக்கையில், “மோகன்தாஸ் மரணம் தற்கொலை வழக்காக பதிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கிடையில் கணவர் தற்கொலை குறித்து வெளியில் சொல்லாமல் இருந்ததற்கு காரணம் குறித்து அவருடைய மனைவி மற்றும் குடும்பத்தாரை விசாரித்து வருகின்றோம். மேலும் மோகன்தாஸ் செல்போனிலிருந்து வெளியான வீடியோவை வைத்து விசாரித்து வருகிறோம்” என்று கூறினர்.