ஜம்மு-காஷ்மீரில் கடந்த சில வாரங்களாக காஷ்மீர் பண்டிட்டுகள் குறிவைத்துத் தாக்கப்படுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்தவண்ணமாக இருந்து வருகின்றன. இத்தகைய தாக்குதல்கள் காரணமாக பாதுகாப்பு படையினரும் அதிக அளவில் பயங்கரவாதிகளை என்கவுன்டர் செய்து வருகின்றனர்.
இந்த நிலையில், ஜம்மு-காஷ்மீர் காவல்துறை கடந்த 24 மணி நேரத்தில் 7 பயங்கரவாதிகளை சுட்டுக் கொல்லப்பட்டிருப்பதாக தகவல் தெரிவித்திருக்கிறது. இது தொடர்பாக ஊடகங்களிடம் பேசிய மூத்த காவல் துறை அதிகாரிகள், “பாகிஸ்தானைச் சேர்ந்த இரண்டு லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாதிகள் நேற்று சுட்டுக் கொல்லப்பட்டனர்.
இந்த நிலையில், இன்று அதிகாலை மற்றொரு பாகிஸ்தான் பயங்கரவாதி சுட்டுக் கொல்லப்பட்டார். ஜம்மு-காஷ்மீர் பள்ளத்தாக்கில் நடைபெற்ற மூன்று வெவ்வேறு என்கவுன்டர்களில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 3 பாகிஸ்தானியர்கள் உட்பட 7 பயங்கரவாதிகளை பாதுகாப்பு படையினர் சுட்டுக் கொன்றனர். தற்போது ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டிருக்கின்றன. இந்த ஆண்டு காஷ்மீர் பள்ளத்தாக்கில், இதுவரை 32 பாகிஸ்தான் பயங்கரவாதிகள் உட்பட மொத்தம் 114 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டிருக்கின்றனர்” என்றனர்.