சென்னை: தமிழகத்தில் கரோனா பரவல்மீண்டும் வேகமாக அதிகரித்து வருவதால் மக்கள் அச்சத்தில் உள்ளனர். இதற்கிடையில், தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் பாதிப்பும்வேகமாக அதிகரித்து வருகிறது.
நாடு முழுவதும் கடந்த ஜனவரிமுதல் மே மாதம் வரையிலான5 மாதங்களில் 10,172 பேர் டெங்குவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் அதிகபட்சமாக தமிழகத்தில் 2,548 பேருக்கு டெங்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கர்நாடகா (1,714 பேர்), ராஜஸ்தான் (824 பேர்), ஆந்திரா (810 பேர்), மகாராஷ்டிரா (786 பேர்) ஆகியவை அடுத்தடுத்த இடங்களில் உள்ளதாக மத்திய சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
இதுகுறித்து சுகாதாரத் துறை அதிகாரிகள் கூறியதாவது: தமிழகத்தில் டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த பல்வேறு துறைகளைஒருங்கிணைத்து நடவடிக்கைஎடுக்கப்பட்டு வருகிறது. 21 ஆயிரம்களப் பணியாளர்கள் வீடு வீடாகச்சென்று கொசு ஒழிப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
கடந்த5 மாதங்களில் மட்டும் 65 ஆயிரத்துக்கும் மேற்பட்ட டெங்கு பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன. தமிழகத்தில் டெங்கு பாதிப்பு இருந்தாலும், உயிரிழப்பு இல்லை.
சுத்தமான தண்ணீரில் உற்பத்தியாகும் ஏடிஸ் எஜிப்டி கொசுக்கள் மூலம் டெங்கு காய்ச்சல் பரவுகிறது. கரோனாபோல டெங்கு தொற்றுநோய் அல்ல. டெங்கு காய்ச்சல் உள்ளவரை கடித்த ஏடிஸ் கொசு மற்றொருவரை கடிக்கும்போது, அவருக்கும் டெங்கு பரவுகிறது. கரோனா, டெங்கு ஆகிய இரண்டுக்கும் ஒரே மாதிரியான அறிகுறிகள் இருப்பதால் உடனடியாக கண்டறிந்து சிகிச்சை அளிப்பதும் சிரமமாக உள்ளது.
டெங்குவுக்கு ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து சிகிச்சை பெற்றால் உயிரிழப்பை தவிர்க்கலாம். காய்ச்சல் இருந்தால், அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு சென்று பரிசோதனை செய்துகொள்ள வேண்டும். அப்போதுதான் அது கரோனா தொற்றா, டெங்குவா என்பதை கண்டறிய முடியும்.
கரோனா தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள களப் பணியாளர்களை, டெங்கு தடுப்பு பணிகளிலும் கவனம் செலுத்துமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. டெங்குவுக்கு சிகிச்சை அளிக்க தேவையான மருந்துகள் அரசிடம் உள்ளது. தேவையற்ற பொருட்கள் மற்றும் கட்டுமான இடங்களில் தேங்கும் தண்ணீர் போன்றவற்றில் கொசுக்கள் உற்பதியாகும்.
அதனால், அந்த பொருட்களை உடனடியாக அகற்ற வேண்டும். வீடு, பள்ளி, பொது இடங்கள் மற்றும் சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்துக் கொள்ள வேண்டும்.