தங்களது நிலையால் சமூகத்தில் மாற்றுத்திறனாளிகள் பின்தங்கிவிட கூடாது: ஒன்றிய அமைச்சர் நாராயணசுவாமி பேச்சு

சென்னை: மாற்றுத்திறனாளிகள் தங்களது நிலையால் சமூகத்தில் பின்தங்கிவிட கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறோம் என்று ஒன்றிய இணை அமைச்சர் நாராயணசுவாமி கூறியுள்ளார். சென்னை மாவட்டம் நிர்வாகம் மற்றும் அலிம்கோ ஆகியவை சார்பில் சென்னை ராஜா அண்ணாமலைபுரம் கபாலீஸ்வரர் கற்பகம்பாள் திருமண மண்டபத்தில் சமூக வலுவூட்டல் முகாம் நேற்று நடந்தது. இதில், ஒன்றிய சமூகநீதி மற்றும் அதிகாரமளித்தல் இணை அமைச்சர் நாராயணசுவாமி கலந்து கொண்டு ரூ.1,04,92,301 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாற்றுத்திறனாளி பயனாளிகளுக்கு வழங்கினார். தொடர்ந்து அவர் பேசுகையில்,”1325 மாற்றுத்திறனாளிகள் பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டு, நலத்திட்ட உதவிகள் வழங்கியதில் மகிழ்ச்சி அடைகிறேன். ஒன்றிய அரசில் நான் அங்கம் வகிக்கும் இத்துறையானது மாற்றுத்திறனாளிகள் எவர் ஒருவரும் தங்களது நிலையால் சமூகத்தில் பின்தங்கிவிட கூடாது, பொருளாதார சமூக நிலையில் மேம்பாடு அடைய அவர்களை தகுதிப்படுத்துவதில் உறுதியாக கொள்ளப்பட்டுள்ளது. தகுதி வாய்ந்த பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டு உதவிகள் வழங்கப்படுகின்றன.    இத்துறையின் மூலம் நாடு முழுவதும் 12,335 முகாம்களை ரூ.1408.38 கோடி செலவில் 22.49 லட்சம் பயனாளிகளை தேர்வு செய்து உதவிகள் வழங்கப்பட்டுள்ளது. குறிப்பாக தமிழகத்தில் 490 முகாம்கள் நடத்தப்பட்டுள்ளது என்றார். நிகழ்ச்சியில் எம்பி தமிழச்சி தங்கப்பாண்டியன், மயிலை த.வேலு எம்எல்ஏ, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை செயலாளர் ஆனந்தகுமார், அலிம்கோ நிறுவனம் அசோக்குமார், சென்னை மாவட்ட வருவாய் அலுவலர் ஜெயராஜ், சென்னை மாநகராட்சி கவுன்சிலர் ஷீபா வாசு மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.