சென்னை: தமிழ்நாட்டில் இன்று 10ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்ட நிலையில், தமிழ் பாடத்தில் மாநிலத்திலேயே ஒரே ஒரு மாணவி மட்டுமே 100க்கு 100 மதிப்பெண் எடுத்துள்ளார் என பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது. அந்த மாணவி திருச்செந்தூர் அருகே உள்ள துர்கா என்பது தெரிய வந்துள்ளது. அந்த மாணவிக்கு வாழ்த்துக்கள் குவிந்துவருகிறது.
தமிழகத்தில் 10,12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் இன்று காலை 10 மணிக்கு வெளியிட்டார் .அப்போது செய்தியர்களிடம் பேசிய அமைச்சர், தமிழகம், புதுச்சேரியில் 10-ஆம் வகுப்பில் மொத்தம் 90.7% மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளதாக கூறினார். அதைத்தொடர்ந்து, மாணாக்கர்கள் பாட வாரியாக தேர்ச்சி விகிதம் வெளியிடப்பட்டது.
அதில், ஒரே ஒரு மாணவர் மட்டுமே தமிழ் பாடத்தில் 100க்கு 100 மதிப்பெண்கள் பெற்றுள்ளது தெரிய வந்தது. ஆங்கிலத்தில் 45 மாணாக்கர் களும், கணிதப்பாடத்தில் 2,186 மாணாக்கர்களும், அறிவியல் பாடத்தில் 3,841 மாணாக்கர்களும், சமூகஅறிவியல் பாடத்தில் 1009 மாணாக்கர் களும் 100க்கு 100 மதிப்பெண்கள் எடுத்துள்ளார்கள் என்று பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.
இந்த நிலையில் தமிழ்பாடத்தில் 100க்கு 100 மதிப்பெண் எடுத்த மாணவி யார் என்பது தெரிய வந்துள்ளது. திருச்செந்தூர் காஞ்சி சங்கரா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவி துர்கா பத்தாம் வகுப்பு தேர்வில் 500-க்கு 448 மதிப்பெண்கள் பெற்றுள்ளார்.
ஆங்கில வழிக் கல்வியில் பயின்ற மாணவி தமிழ்ப்பாடத்தில் 100க்கு 100 மதிப்பெண் எடுத்து, சதம் அடித்துள்ளது தனிச்சிறப்பை பெற்றுள்ளது.
மாணவியின் தந்தை ஆறுமுகநேரி காவல் நிலையத்தில் தலைமைக்காவலராக பணியாற்றி வருகிறார். மாணவியை பள்ளி ஆசிரியர்கள், குடும்பத்தினர் பாராட்டினர். பின்னர் மாணவிக்கு பள்ளி முதன்மை முதல்வர் செல்வ வைஷ்ணவி பரிசு கோப்பை வழங்கினார்.
இதுபற்றி மாணவி துர்கா கூறுகையில், ‘தமிழில் முதல் மதிப்பெண் பெறுவதற்கு ஆசிரியர்கள், குடும்பத்தினர் உடன் படித்த நண்பர்கள் அனைவரும் ஊக்கப்படுத்தினர். மேலும் தமிழ்மொழி படிப்பதற்கு எளிமையாக இருந்தது’ என்றார்.