புதுடெல்லி: கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டதால் டெல்லி தேர்தல் பிரசாரத்தில் பங்கேற்க முடியவில்லை என்று ஒன்றிய அமைச்சர் ஸ்மிருதி இரானி வருத்தம் தெரிவித்துள்ளார். பாஜக மூத்த தலைவரும், ஒன்றிய அமைச்சருமான ஸ்மிருதி இரானிக்கு கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து அவர் வெளியிட்ட பதிவில், ‘எனக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதால், டெல்லியின் ராஜேந்திர நகர் இடைத்தேர்தல் பிரசாரத்தில் பங்கேற்க முடியவில்லை. என்னை நான் தனிமைப்படுத்திக் கொண்டேன். ராஜேந்திர நகர் தொகுதி மக்கள் என்னை மன்னிக்க வேண்டும். தொகுதி மக்கள் பாஜக வேட்பாளரான ராஜேஷ் பாட்டியாவுக்கு வாக்களித்து அவரை வெற்றிபெறச் செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன்’ என்று தெரிவித்துள்ளார். வரும் 23ம் தேதி டெல்லியில் உள்ள ராஜேந்திர நகர் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் நடக்கிறது. வாக்கு எண்ணிக்கை வரும் 26ம் தேதி நடைபெறுகிறது. இந்த ெதாகுதியில் பாஜக மற்றும் ஆளும் ஆம் ஆத்மி கட்சிகளுக்கு இடையே பலத்த போட்டி நிலவிவருகிறது. முதலமைச்சரும், ஆம் ஆத்மி கட்சியின் தலைவருமான அரவிந்த் கெஜ்ரிவால் கடந்த 2 நாட்களாக அத்தொகுதியில், அவரது கட்சி வேட்பாளர் துர்கேஷ் பதக்கிற்கு ஆதரவாக வாக்கு சேகரித்து வருகிறார். அதேநேரம் பாஜக வேட்பாளருக்கு ஆதரவாக ஒன்றிய அமைச்சர்கள், எம்பிக்கள், மூத்த தலைவர்கள் உட்பட நட்சத்திர பிரசாரகர்களை தீவிர பிரசாரம் செய்து வருகின்றனர்.