தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறையின் சார்பில் 10 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வுகள் மே மாதம் நடத்தப்பட்டன. அதற்கான தேர்வு முடிவுகள் இன்று வெளியாகியுள்ளன.
இதனை வெளியிட்ட பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ், “தேர்வில் தேர்ச்சி பெறவில்லை என்பதைக் குறித்து மாணவர்கள் கவலைப்பட வேண்டியதில்லை. ‘முதல்முறை தேர்ச்சி பெற்று கல்லூரிக்குப் போனேன்’, ‘இரண்டாம் முறை தேர்ச்சி பெற்று கல்லூரிக்குப் போனேன்’ என்பது போன்ற மனப்பான்மையில்தான் மாணவர்கள் தேர்வு மதிப்பெண்களை அணுக வேண்டும். நாங்களும் அப்படிதான் பார்க்கிறோம். அவர்கள் இந்தக் கல்வியாண்டிலேயே கல்லூரிக்குச் செல்லத் தேவையான ஏற்பாடுகளை பள்ளிக்கல்வித்துறை மேற்கொண்டிருக்கிறது. ஜூலையில் உடனடி தேர்வுகள் நடத்தப்படும். மாணவர்களுக்குத் தன்னம்பிக்கை வழங்கும் விதத்தில் அரசு என்றுமே துணை நிற்கும். அதனால் மாணவர்கள் எதற்கும் பதற்றப்பட வேண்டியதில்லை” எனப் பேசினார்.
மேலும், “தேர்வு முடிவுகள் மாணவர்களின் பதிவு செய்யப்பட்ட எண்களுக்கு குறுஞ்செய்தியாக அனுப்பப்படும். இணையத்தளங்களிலும் பள்ளிகளிலும் மாணவர்கள் தங்கள் தேர்வு முடிவுகளைத் தெரிந்து கொள்ள முடியும். மாணவர்கள் தங்களுக்குத் தேவையான தகவல்களைப் பெற 14417, 1098 ஆகிய உதவி எண்களுக்கு அழைக்கலாம்” எனத் தெரிவித்தார்.
பிளஸ் 2 முடிவுகள் இணையத்தளத்தில் வெளியிடப்பட்டுள்ளன. 10-ம் வகுப்பு முடிவுகள் பிற்பகல் 12 மணிக்கு இணையத்தளத்தில் வெளியாகவுள்ளது. இரண்டு தேர்வு முடிவுகள் குறித்த சில சுவாரஸ்யத் தகவல்கள் இதோ…
* தேர்வு எழுதிய மாணவர்களில் 93.76 சதவிகித பேர் பிளஸ் 2-விலும் 90.07 சதவிகிதம் பேர் பத்தாம் வகுப்பிலும் தேர்ச்சி பெற்றுள்ளார்கள்.
* வழக்கம் போலவே மாணவர்களை விட மாணவிகள் தேர்ச்சி விகிதம் பத்தாம் வகுப்பில் 8.55%, பிளஸ் 2-வில் 5.36% அதிகமாக உள்ளது.
* 10-ம் வகுப்பில் தமிழ்நாட்டிலேயே தமிழ்ப்பாடத்தில் ஒரே ஒரு மாணவர் மட்டுமே 100 மதிப்பெண் பெற்றிருக்கிறார்.
* தேர்ச்சி விகிதம் கடந்த ஆண்டை ஒப்பிடும் போது பத்தாம் வகுப்பில் குறைந்தும் பிளஸ் 2-வில் அதிகரித்தும் காணப்படுகிறது.
* பிளஸ் 2-வில் அதிகபட்சமாக வணிகவியல் பாடத்தில் 4634 பேர் சென்டம் பெற்றுள்ளனர்.