ஓட்டலில் வேலை செய்து கொண்டு ஓய்வு நேரங்களில் நூலகங்களைத் தேடிச் சென்றேன். குஸ்தி போடுபவர்களிடமும் சிநேகம் செய்து கொண்டு, குஸ்தி கற்றுக் கொண்டேன்.
போஸ்டர்களில் விட்டலாச்சார்யாவின் பெயரைக் கண்டாலே, யார் நடித்திருக்கிறார்கள் என்பதைப் பற்றிக் கவலைப்படாமல், ‘பொழுது போகும்!’ வேடிக்கையாக இருக்கும் என்ற நம்பிக்கை யோடு படம் பார்க்கச்செல்லும் ரசிகர்கள் வயது வித்தியாசமின்றி இருக்கிறார்கள். சினிமாவில் லாஜிக் பார்ப்பவர்களுக்குக் கூட அவரது படங்கள் குஷியை ஏற்படுத்தும்.
விட்டலாச்சார்யாவின் படங்களில்தான் அதிகம் நடித்திருக்கிறார் என்.டி. ராமராவ். அதனால் அவர் முதல்வரான பின், ‘செல்வம் பகிர்ந்தளிக்கப்பட வேண்டும். பணக்காரர்களிடமிருந்து வாங்கி ஏழைகளுக்கு வசதி செய்து கொடுக்க முயல்வேன்’ என்று பேசியபோது, பத்திரிகை கார்ட்டுன்களிலெல்லாம் ‘ராமராவ் விட்டலாச்சார்யா படங்களில் நடித்ததை இன்னும் மறக்கவில்லை போலும்’ என்று தமாஷாகக் குறிப்பிட்டிருந்தார்கள். இன்னொரு வேடிக்கை, ஆந்திராவில் விட்டலாச்சார்யாவின் படங்கள் வெளியானால் – கிராமப் பகுதிகளில் விலைமாதர்களின் வீடுகளைத் தேடி நிறையப் பேர் வருவார்களாம்! சரி, இப்படியெல்லாம் சாதனைகள் புரிந்த (!) விட்டலாச்சார்யாவை ஒரு சுதேசி மனிதர் எனலாம். வெள்ளை கதர் சட்டை, வேஷ்டியில் ‘பழுத்த பழம்’ என்பார்களே, அப்படியிருந்தார். ஆனால், அவரது பேச்சில், இருபது வயது இளைஞனின் குறும்புத்தனம் இருந்தது.
சுதேசி என்றால் உடையில் மட்டுமல்ல, செயலிலும் தான். ஹாலிவுட்டில் கம்ப்யூட்டர்களைக் கொண்டு எலெக்ட்ரானிக், ரிமோட் கண்ட்ரோல் வசதிகளைக் கொண்டு விஞ்ஞானப் படங்களை உருவாக்குகிறர்கள். இங்கு தந்திரக் காட்சிகள் என்றால் ரவிகாந்த் நிகாய்ச் அல்லது பாபுபாய் மிஸ்திரியை அழைக்கிறார்கள். ஆனால், விட்டலாச்சார்யாவின் படங்களில் யார் ஒளிப்பதிவாளரோ, அவரேதான் எல்லாக் காட்சிகளையும் படமாக்குகிறார். பிலிம் செலவும் அதிகம்.
அவரது படங்களில் மாயாஜாலக் காட்சிகளுக்கு எலெக்ட்ரானிக் உதவி எதுவும் கிடையாது. ”நான் தந்திரக் காட்சிகளை எப்படிப் படமாக்குகிறேன் என்ற வழியைச் சொன்னால்கூட, இங்கே அப்படிச் செய்து பார்க்கின்ற பொறுமை எவருக்குமில்லை” என்கிறார் விட்டலாச்சார்யா.
இதற்காக அவர் எடுத்துக் கொள்ளும் கால்ஷிட் அதிகம்.68 வயதாகும் விட்டலாச்சார்யா அறுபதுக்கும் மேற்பட்ட படங்களைத் தயாரித்து இயக்கியுள்ளார். இவற்றில் பாதிக்கும்மேல் மாயாஜாலப் படங்கள். இடைக்காலத்தில் சொந்தப் படங்களை மட்டும் இயக்குவது என்ற கொள்கையோடு இருந்தார்.தெலுங்கு முன்னணி நடிகர்களில் ஒருவரான மோகன்பாபு,
தனது சொந்தப் படமொன்றை விட்டலாச்சார்யாதான் இயக்கவேண்டும் என்ற உறுதியோடு சுமார் இரண்டாண்டு காலம் அவர் வீடு தேடி அலைந்து ஒப்புக்கொள்ள வைத்திருக்கிறார். சுமார் 80 லட்ச ரூபாய் செலவில் ‘வீரப் பிரதாபன்’ என்ற மாயாஜாலப் படமொன்றை இயக்கி வருகிறார் விட்டலாச்சார்யா.
விட்டலாச்சார்யாவின் சினிமா அனுபவங்கள் வேடிக்கையாக, வித்தியாசமாக, ஆச்சரியமாக உள்ளன. அது பற்றி அவரே சொல்கிறார்:”நான் தெலுங்கிலேயே தொடர்ந்து படங்களைத் தயாரிப்பதால் என்னை ஆந்திராவைச் சேர்ந்தவனாகத்தான் எல்லோரும் எண்ணிக் கொண்டிருக்கிறார்கள். கர்நாடக மாநிலம் உடுப்பிதான் எனக்குச் சொந்த ஊர். பெரிய குடும்பத்தில் பிறந்தவன் நான். எனது தந்தைக்கு 14 வாரிசுகள். அதில் ஏழு பேர் ஆண்கள், ஏழு பேர் பெண்கள். ஏழாவதாகப் பிறந்த நான், ஏழாவது வரையிலும்தான் படித்தேன்.
நடிப்பு ஆசையினால் அதற்குமேல் படிப்பு ஏறவில்லை. ஆச்சார்யா குடும்பத்தில் பிறந்த எனது போக்கு என் தந்தைக்குப் பிடிக்கவில்லை. மிகவும் ஆசாரமாக விளங்கிய அவர் கோபத்தில் ஒரு நாள் ‘நீ நாடகப் பெட்டியைத் தூக்கிக்கிட்டு அலையப் போறே’ என்றார். அவரது வாக்கு பலித்து, சினிமா பெட்டியைத் தூக்கி அலையும்படி ஆகிவிட்டது” என்று சொல்லிச் சிரிக்கிறார்.
வீட்டில் இருந்தால் தந்தை ஏதாவது சொல்லிக் கொண்டிருப்பார் என்று மைசூரில் ஓட்டல் நடத்திக் கொண்டிருந்த எனது மூத்த சகோதரர் கோபால் ராவைத் தேடி வந்துவிட்டேன். ஓட்டலில் வேலை செய்துகொண்டு ஓய்வு நேரங்களில் நூலகங்களைத் தேடிச் சென்றேன். குஸ்தி போடுபவர்களிடமும் சிநேகம் செய்து கொண்டு, குஸ்தி கற்றுக் கொண்டேன். அப்போது இரண்டாம் உலகப் போர் துவங்கிய நேரம். எங்கள் பகுதியில் டூரிங் தியேட்டர் நடத்திக் கொண்டிருந்த ஓர் இளைஞனின் தந்தை, தன் மகன் சினிமாவில் கெட்டுப் போய்விடக்கூடும் என்று பயந்து தியேட்டரை விற்பதாக இருந்தார். 9,000 ரூபாய் விலை சொன்னார். நான் ‘4,500 ரூபாய்தான் இருக்கிறது. மீதியைத் தவணையில் கொடுத்துவிடுகிறேன்’ என்று சொன்னதற்கு சரியென்றார். நண்பர் ஒருவருடன் சேர்ந்து ‘மகாத்மா பிக்சர்ஸ்’ என்று பெயரிட்டு அந்த தியேட்டரை நடத்தினேன். நல்ல வருமானம் வர, அடுத்த ஆண்டிலேயே நேரு பெயரில் ஒரு தியேட்டரும், அதற்கடுத்த ஆறு மாதங்களில் ‘கஸ்தூரி’ பெயரில் ஒரு தியேட்டரும் துவங்கினோம். காங்கிரஸின் தீவிர ஆதரவாளனாக இருந்ததால் இப்படிப் பெயர்களைச் சூட்டினோம். டூரிங் தியேட்டர்களுக்கெல்லாம் அப்போது மூன்று மாதம்தான் லைசென்ஸ்.
அப்புறம் முகாமை மாற்றிக் கொள்ள வேண்டும். அதனால் ஒரு தந்திரம் செய்து முகாமை மாற்றிக் கொண்டது போல், ‘மகாத்மா தியேட்டருக்கு ‘நேரு பெயரையும், ‘நேரு’ தியேட்டருக்கு மகாத்மா பெயரையும் மாற்றி, மூன்று வருடத்துக்கு ஒப்பேற்றிவிட்டோம். யுத்தம் மும்முரமானதால் மூன்று தியேட்டர்களையும் இரண்டு லட்ச ரூபாய்க்கு விற்று விட்டோம். அடுத்து. சினிமா தயாரிப்பில் இறங்கினோம். எங்களது முதல் தயாரிப்பு ‘கிருஷ்ண லீலா’ என்ற கன்னடப் படம் – 1946-ல். அதில், மறைந்த முன்னாள் கர்நாடக முதல்வர் தேவராஜ் அர்ஸின் சகோதரர் கெம்பராஜ் அர்ஸ் கதாநாயகனாக நடித்தார். 1952-ல் எங்களது தயாரிப்புக்கு நானே டைரக்டரானேன். நான் இயக்கிய ‘ஶ்ரீனிவாச கல்யாணம்’ என்ற படத்தில், ராஜ்குமார் முதன்முதலாக ரிஷி வேடமொன்றில் நடித்தார். ஆனால் அவரோ, தனது முதல் படமாக ஏவி.எம். தயாரிப்பான ‘பேடர் கண்ணப்பா’வைச் சொல்லிக் கொண்டிருக்கிறார். இப்படி ஏழு படங்கள் வரை இணைந்து பணியாற்றினோம். அப்புறம் எங்களுக்குள் கருத்துவேறுபாடு ஏற்பட்டு, பிரிந்தோம். 1953-ல் நான் தனியாக ‘விட்டல் புரொடக்ஷன்ஸ்’ துவங்கி, இரண்டு கன்னடப் படங்களைத் தயாரித்தேன். தமிழில் படமெடுக்க விரும்பி சென்னை வந்தேன்.
ஆனால், சென்னையில் தமிழ்ப் படச் சூழ்நிலை சரியில்லை. அப்போது தமிழில் விநியோகஸ்தர்கள் இல்லை. நாமே முழுப் பணத்தையும் முதலீடு செய்து, சொந்தமாக ரிலீஸ் செய்தால்தான் உண்டு.
ஆனால், ஆந்திராவில் தெலுங்குப் படங்களுக்கு விநியோகஸ்தர்களே 75 சதம் பணம் கொடுக்க முன்வந்ததால், தெலுங்குப் படங்களைத் தயாரிக்க முனைந்தேன். 1956-ல் தெலுங்கில் ‘கன்யாதானம்’ என்ற பெயரில் ஒரு படம் தயாரித்து வெளியிட்டேன். அது சமூகப் படம். ஒரு பெண் கறுப்பாக இருந்ததால், அவளுக்குத் திருமணத்தில் ஏற்பட்ட பிரச்னைகளை அதில் சுட்டிக் காட்டியிருந்தேன். இதே கருத்தை மையமாகக் கொண்டுதான் பின்னர் ‘நானும் ஒரு பெண்’ வெளிவந்தது.
‘கன்யாதானம்’ படத்தைத் தமிழில் ‘கன்னிகாதானம்’ என்று டப் செய்து வெளியிட்டேன். அந்தப் படம் வெளியான நேரத்தில், சென்னையில் ஃப்ளூ ஜுரம் முதன்முதலாகப் பரவியிருந்தது. அது பற்றி அப்போது ‘ஆனந்த விகடனில் ‘கன்னிகாதானம் is a very novel subject. ஆனால் படம் வந்த நேரம் சரியில்லை. ஃப்ளு வந்ததால் கூட்டம் வரவில்லை” என்று விமரிசனத்தில் குறிப்பிட்டிருந்தார்கள்.
1958-ல் தமிழிலும் ஒரு படம் தயாரித்தேன். ஜெமினி கணேசன், நம்பியார், எம்.என். ராஜம், பூத்ரஞ்சனி ஆகியோர் நடித்த ‘பெண் குலத்தின் பொன்விளக்கு’ என்ற படம், 50 நாட்கள் சுமாராக ஓடியது. ‘கன்யாதானம்’ படத்துக்குப் பின் தெலுங்கில் மேலும் இரண்டு படங்களும், கன்னடத்தில் ஒரு படமும் செய்தேன். எல்லாம் நல்ல கதையம்சமுள்ள படங்கள்.
ஆனால், நகரங்களில் மட்டும் நன்றாக ஓடின. கிராமங்களில் ஆதரவு இல்லாததால் கைக்குப் பணம் வரவில்லை. இப்படியே இருந்தால் உடுப்பிக்குத் திரும்பிச் செல்ல நேரிடுமோ என்ற பயம் வந்துவிட்டது. அப்போதுதான் மந்திர, தந்திரக் கதைகளைப் படமாக எடுத்தால் என்ன என்று தோன்றியது. அதனால் அது பற்றிய கதைகளைச் சேகரிக்க ஆரம்பித்தேன். 60 வருஷங்களுக்கு முன்பு வெளிவந்த மாயமந்திரக் கதைகள். நீதிக் கதைகள், விலங்குகளைப் பற்றிய கதைகள் காஷ்மீரத்து ராஜகுமாரன்-ராஜகுமாரி கதைகள்-இப்படிப் பல தேசக் கதைகளைச் சேகரித்தேன்.
அரேபியன் நைட்ஸ், பஞ்சதந்திரக் கதைகள் – இவை அடங்கிய பெரிய நூலகமே என்னிடம் உண்டு. அதிலுள்ள விஷயங்களைத் தொகுத்துதான் எனது படங்களை உருவாக்குகிறேன். பத்திரிகைகளில் வரும் சித்திரக் கதைகளையும் விட்டு வைப்பதில்லை. நான் உருவாக்கிய மாயாஜாலப் படங்களுக்கு எல்லா மொழிகளிலும் வரவேற்பு உண்டு. தென் ஆப்பிரிக்கா. சிங்கப்பூர் உட்பட அயல்நாடுகளிலும் எனது படங்களை மக்கள் பெரிதும் ரசிக்கிறார்கள்.
நட்சத்திரங்களின் கால்ஷிட் விஷயத்தைப் பொறுத்தமட்டில் எனக்கொரு செளகரியம் உண்டு.எனது படங்களில் நடிப்பவர்கள் பொதுவாக கால்ஷீட் டிமிக்கி கொடுப்பதில்லை. அப்படி யார் தொல்லை கொடுத்தாலும் அவர்களைத் தவளை, பாம்பு, ஆடு, புலி, கரடி என உருமாற்றியிருக்கிறேன். இதற்குப் பயந்துகொண்டே ஒழுங்காக நடிக்க வந்துவிடுவார்கள். நான் உருவாக்கிய முதல் மாயாஜாலப் படம் ‘ஜெய விஜயா’. ‘ஜெயவீரன்’ என்று தமிழில் ‘டப்’ செய்யப்பட்டு வந்தது. இதில் கதாநாயகன் காந்தாராவ் கதாநாயகி கிருஷ்ணகுமாரி.
வில்லன் ராஜநளா, கதாநாயகியை, மந்திரவாதி வில்லன் ஆடாக உருமாற்றிக் கொண்டு செல்ல, கதாநாயகன் வந்து காப்பாற்றுவதுதான் கதை – இதுதான் எனது மற்ற மாயாஜாலப் படங்களுக்கும் பொதுவான ஃபார்முலா. இதில் நீதியும் சொல்லப்பட்டிருக்கும். எனது படங்களிலெல்லாம் ஒரு பிரமாண்ட ‘லுக்’ இருக்கும். ஆனால் மற்றவர்களைவிட மிகக் குறைந்த செலவில் படமாக்கியிருப்பேன்.
இந்த விஷயத்தில் எனக்கு Indirect குரு, ஜெமினி எஸ்.எஸ். வாசன் அவர்கள்தான். ஜெமினியின் ‘தாசி அபரஞ்சி’ என்ற படத்தில், ஒரு பாடல் வருகிறது. (பாடல் மறந்துவிட்டது). அதில் இருந்த வரிகளை மனத்தில் அசை போட்டு, தெலுங்கில் ‘குருவு மிஞ்சின சிஷ்யலு’ (குருவை மிஞ்சிய சீடர்கள்) என்று எடுத்தேன். அதையே தமிழில் ‘வீரத் திலகம்’ என்று டப் செய்து வெளியிட்டேன். படம் பார்த்த வாசன் அவர்கள் நான் கதையை உருவாக்கிய மூலத்தைச் சொன்னதும் வியப்படைந்து, பாராட்டி மகிழ்ந்தார். ‘வீரத் திலகம்’ 1963 தீபாவளியன்று வெளியானது.
எம்.ஜி.ஆரின் ‘ராஜாதேசிங்கு’, சிவாஜி நடித்த ஒரு படம் உட்பட ஆறு படங்கள் வெளியாயின. அதில் ‘வீரத்திலகம்’ ஒன்றுதான் 100 நாட்கள் ஓடியது. அந்தப் படம் தயாரிக்க எனக்கேற்பட்ட மொத்தச் செலவே இரண்டரை லட்ச ரூபாய்தான். விதவிதமான செட்டுகள், விலங்குகள் இருந்தும் செலவு அவ்வளவு தான். இந்தியில்கூட இப்போது தயாரிப்பதற்காக அந்தப் படத்தைப் பார்த்தார்கள்.
ஒன்றரை கோடி ரூபாய் பட்ஜெட் ஆகுமென்று திரும்பிச் சென்று விட்டார்கள். உடைகள், எனது படங்களின் பட்ஜெட் குறைவாக இருப்பதற்குக் காரணம், நடிக-நடிகையருக்கு அதிகப் பணம் தரமாட்டேன். ஆனால், எனது படங்களில் குறைவான தொகை பெற்றுக்கொண்டு நடித்தவர்களுக்கு மார்க்கெட் உயர்ந்து, பிறரது படங்களில் நடிக்கும்போது அவர்களது ரேட் ஏறிவிடும். என்.டி. ராமராவ் எனது இயக்கத்தில் பதினைந்து படங்களில் நடித்திருக்கிறார். எல்லாம் மாயாஜாலப் படங்கள். அவர் பிறரது படங்களில் நடிக்கும்போது வாங்குவதில் நான்கில் ஒரு பங்கே என்னிடம் வாங்குவார்.”
‘கன்னிகாதானம்’ படத்தில் கதாநாயகியாக வந்தவர் செளகார்ஜானகி, படத்தின் ஒரு காட்சியில் கணவனின் காலைப் பிடித்து அமுக்குவதாக ஜானகி நடிக்க வேண்டும். ஆனால், ஜானகி அதை இயல்பாகச் செய்யவில்லை. தொட்டுத் தடவுவது போல் நடித்தார். எப்படிக் கால் அமுக்க வேண்டும் என்று நான் செய்து காட்டியபோது, ‘இது சரியில்லையே… நடனமாடுவது போல் இருக்கிறது’ என்று நான் சொன்னபடி நடிக்க மறுத்தார். அதனால் அந்தப் படத்துக்குப் பிறகு அவரை நான் கூப்பிடுவதில்லை. செளகார் ஜானகியின் தங்கை கிருஷ்ணகுமாரி, அப்போதுதான் தெலுங்கில் புதிதாக நடித்துக் கொண்டிருந்தார். அவர் நடித்த சில படங்கள் சரியாக ஓடாததால் ‘ராசியில்லாதவர் என்றார்கள்.
அவரை எனது ‘ஒத்தண்ட பெல்லி’ என்ற படத்தில் நடிக்க வைத்தேன். படம் 100 நாட்கள் ஓடி வெற்றி கண்டது. இந்தப் படத்துக்குப் பின் கிருஷ்ணகுமாரி தெலுங்கில் பிஸியாகி விட்டார். ‘ஒத்தண்டபெல்லி’ படத்துக்குக் கிடைத்த வெற்றியில் ஒரு விஷயத்தைக் குறிப்பிட்டாக வேண்டும். ரசிகர்கள் படத்தை ரசித்ததோடல்லாமல், திரையை நோக்கிச் சில்லறைக் காசுகளை வீச ஆரம்பித்தார்கள். ஒரு நாள் திரை வசூல் மட்டும் 100-லிருந்து 150-ரூபாய் வரை இருக்கும் இந்தப் பழக்கம் ஆந்திரா முழுவதும் பரவிவிட்டது.
ஶ்ரீதேவி. ராதா தவிர, தெலுங்கில் உள்ளவர்கள் அனைவரும் எனது படங்களில் நடித்திருக்கிறார்கள். சிலர். நான் குறைவாகப் பணம் தருவேன் என்பதற்காகவே எனது படங்களில் நடிக்க வருவதில்லை. மோகன்பாபுவை ஒரு படத்தில் நடிக்க அழைத்தேன். அவர் கேட்ட தொகையைக் கண்டு வேண்டாமென்று சொல்லிவிட்டேன். இன்று அதே தொகையை எனக்குத் தந்து தனது சொந்தப் படத்தை டைரக்ட் செய்யச் சொல்லியிருக்கிறார், ‘ஜெகன்மோகினி’ என்ற படம் தெலுங்கில் மட்டுமின்றி தமிழ், இந்தி மற்றும் பிற மொழிகளில் டப் செய்யப்பட்டு, பிரமாத வெற்றியைப் பெற்றிருக்கிறது.
சென்னையில் வெளியான நான்கு தியேட்டர்களிலும் நூறு நாட்கள் ஓடி வெற்றி கண்ட படம் அது! அந்தப் படம் வெளிவந்த பின்னர், ஜெயமாலினி படப்பிடிப்புக்காக அவுட்டோர் போனால், உடன் ஒரு லாரி போலீஸும் பாதுகாப்புக் குச் செல்ல வேண்டியதாயிற்று.
‘ஜெகன் மோகினி’யில் நடித்த ஆடு, பாம்பு இரண்டுக்கும். காளஹஸ்தியில் உள்ள புனித நதியில் குளித்தால் சாப விமோசனம் ஏற்படும்; நீங்கள் பழைய உருவை அடைவீர்கள்’ என்று பரிகாரம் சொல்வதாக எழுதியிருந்தேன்.
சென்னையிலிருந்து திருப்பதி செல்லும் வழியில் காளஹஸ்தி இருக்கிறது. அது ஒரு புண்ணிய ஸ்தலம். நதிக்கரையில் பழமை மிகுந்த சிவன் கோயில் இருக்கிறது. ஆனால் பக்தர்கள் வருகையின்றி கோயில் பாழடைந்த நிலையில் இருந்தது.
‘ஜெகன் மோகினி’ வெளிவந்த பின் ஆந்திரா முழுவதிலிருந்தும் பக்தர்கள் டூரிஸ்ட் பஸ்ஸில் வரத் துவங்கினார்கள். இன்றைக்கு அதற்கும் நட்சத்திர மதிப்பு வந்துவிட்டது. சமீபத்தில் அங்கு ஒரு ரசிகர்கள், படத்தை ரசித்ததோடல்லாமல், திரையை நோக்கி சில்லறைக் காசுகளை வீச ஆரம்பித்தார்கள்… படப்பிடிப்புக்காகச் சென்றபோது, அங்குள்ள புரோகிதர்கள் என்னைச் சூழ்ந்து கொண்டு நன்றி தெரிவித்து. இந்த விவரங்களையெல்லாம் சொன்னபோது மகிழ்ச்சியாக இருந்தது. ‘மாயத்தீவு ரகசியம்’ என்ற படத்தில் இரண்டு எலிகள் நடனமாடுவதாகக் காட்டியுள்ளேன். என் படத்தில் பேசாத நடனமாடாத மிருகமே இல்லை.
நடிக-நடிகைகளுக்கு ஏற்படுகின்ற செலவை விட இந்த மிருகங்களுக்கு ஏற்படும் செலவு பல மடங்கு. உதாரணத்துக்கு, ‘வீரப் பிரதாபன்’ படத்தில் ஒரு குதிரை இறக்கையுடன் பறப்பதாகக் காட்சி வருகிறது. அதற்கு மட்டும் ஒரு லட்ச ரூபாய் செலவாகியுள்ளது. நிஜக் குதிரைக்கு செயற்கை இறக்கைகளைப் பொருத்தமட்டும் பல நாட்கள் ஆனது. இரண்டு, மூன்று செட் இறக்கைகளைத் தயார் செய்து பார்த்தும் சரியாக வரவில்லை.
நான்காவது முறை செய்ததுதான் திருப்தியாக வந்தது. எனது படங்களில் நடித்த எல்லா மிருகங்களிடமும் அடி, கடிபட்டிருக்கிறேன். அது எனக்குப் பெரிய அவஸ்தை.எனக்கு சர்க்கரை வியாதி இருப்பதால் மிருகங்களின் அருகில் இருக்கும்போது எச்சரிக்கையாக இருக்கவேண்டியிருக்கிறது. சில சமயங்களில் மிருகங்கள் சரியாக ஒத்துழைக்காதபோது கோபத்தில் அடித்து விடுவேன். அப்போது அவை என்னைத் திருப்பித்தாக்கும்” என்று சொல்லி, தனது கைகளில், கால்களில் கடிபட்ட தழும்புகளைக் காட்டினர் விட்டலாச்சார்யா.
விட்டலாச்சார்யா சமீபத்தில் அமெரிக்கா சென்று By-pass Surgery செய்து கொண்டிருக்கிறார். இருந்தும், மிருகங்களின் அருகில் இருந்து துணிச்சலாக இயக்குகிறார்.
விட்டலாச்சார்யாவுக்கு நான்கு ஆண்கள். நான்கு பெண்கள் என எட்டு வாரிசுகள். இவரது வாரிசுகளில் ஒருவரான பி.வி. சீனிவாசன், ‘பெண்ணை நம்புங்கள்’, ‘தாய்ப்பாசம்’, ‘அவள் ஒரு அதிசயம்’, ‘ஜெய் வேதாளம்’ (3-I) ஆகிய தமிழ்ப் படங்களை இயக்கியுள்ளார்.
பத்மனுபாச்சார்யா என்ற மூன்றாவது மகன்,கன்னடப் படங்களைத் தயாரிக்கிறார். இரண்டு பையன்கள அமெரிக்காவில் செட்டிலாகி விட்டார்கள். இவரது மருமகன்களில் ஒருவரான டாக்டர் சுப்பிரமணியம், அமெரிக்காவில் கான்சர் ஸ்பெஷலிஸ்டாக இருக்கிறாராம். அங்கு ஒரு பெண்ணுக்கு, கர்ப்பப்பையில் புற்று நோய் இருந்தது. பல டாக்டர்களைப் பார்த்தும் அவர்கள் கை விரித்து விட்டார்களாம். சுப்பிரமணியம் அந்தப் பெண்ணின் புற்றுநோயைக் குணப்படுத்தியதோடு, கருவில் இருந்த குழந்தையையும் காப்பாற்றிவிட்டார் என்று பெருமையோடு சொன்னார் விட்டலாச்சார்யா.
நடிக-நடிகைகளுக்கு ஏற்படுகின்ற செலவை விட இந்த மிருகங்களுக்கு ஏற்படும் செலவு பல மடங்கு. உதாரணத்துக்கு, ‘வீரப் பிரதாபன்’ படத்தில் ஒரு குதிரை இறக்கையுடன் பறப்பதாகக் காட்சி வருகிறது. அதற்கு மட்டும் ஒரு லட்ச ரூபாய் செலவாகியுள்ளது. நிஜக் குதிரைக்கு செயற்கை இறக்கைகளைப் பொருத்தமட்டும் பல நாட்கள் ஆனது. இரண்டு, மூன்று செட் இறக்கைகளைத் தயார் செய்து பார்த்தும் சரியாக வரவில்லை.
நான்காவது முறை செய்ததுதான் திருப்தியாக வந்தது. எனது படங்களில் நடித்த எல்லா மிருகங்களிடமும் அடி, கடிபட்டிருக்கிறேன். அது எனக்குப் பெரிய அவஸ்தை.எனக்கு சர்க்கரை வியாதி இருப்பதால் மிருகங்களின் அருகில் இருக்கும்போது எச்சரிக்கையாக இருக்கவேண்டியிருக்கிறது. சில சமயங்களில் மிருகங்கள் சரியாக ஒத்துழைக்காதபோது கோபத்தில் அடித்து விடுவேன். அப்போது அவை என்னைத் திருப்பித்தாக்கும்” என்று சொல்லி, தனது கைகளில், கால்களில் கடிபட்ட தழும்புகளைக் காட்டினர் விட்டலாச்சார்யா.
விட்டலாச்சார்யா சமீபத்தில் அமெரிக்கா சென்று By-pass Surgery செய்து கொண்டிருக்கிறார். இருந்தும், மிருகங்களின் அருகில் இருந்து துணிச்சலாக இயக்குகிறார்.
விட்டலாச்சார்யாவுக்கு நான்கு ஆண்கள். நான்கு பெண்கள் என எட்டு வாரிசுகள். இவரது வாரிசுகளில் ஒருவரான பி.வி. சீனிவாசன், ‘பெண்ணை நம்புங்கள்’, ‘தாய்ப்பாசம்’, ‘அவள் ஒரு அதிசயம்’, ‘ஜெய் வேதாளம்’ (3-I) ஆகிய தமிழ்ப் படங்களை இயக்கியுள்ளார்.
பத்மனுபாச்சார்யா என்ற மூன்றாவது மகன்,கன்னடப் படங்களைத் தயாரிக்கிறார். இரண்டு பையன்கள அமெரிக்காவில் செட்டிலாகி விட்டார்கள். இவரது மருமகன்களில் ஒருவரான டாக்டர் சுப்பிரமணியம், அமெரிக்காவில் கான்சர் ஸ்பெஷலிஸ்டாக இருக்கிறாராம். அங்கு ஒரு பெண்ணுக்கு, கர்ப்பப்பையில் புற்று நோய் இருந்தது. பல டாக்டர்களைப் பார்த்தும் அவர்கள் கை விரித்து விட்டார்களாம். சுப்பிரமணியம் அந்தப் பெண்ணின் புற்றுநோயைக் குணப்படுத்தியதோடு, கருவில் இருந்த குழந்தையையும் காப்பாற்றிவிட்டார் என்று பெருமையோடு சொன்னார் விட்டலாச்சார்யா.
“எனது பையன்களும் பெண்களும் என்னை அமெரிக்கா வந்து செட்டிலாகும்படி கேட்கிறார்கள். ஆனால், அங்கு சென்றால் யாரும் வீட்டில் இருக்கமாட்டார்கள். தனிமையில் இருக்க போரடிக்கும். இங்கு பிஸியாக இருந்துவிட்டு, அங்கு சென்று சும்மா இருக்கப் பிடிக்கவில்லை. உடம்பில் தெம்பு இருக்கும் வரை சினிமாவில் பணியாற்றி விட்டு, அதன்பின் அமெரிக்கா செல்ல இருக்கிறேன்” என்றார்.
விட்டலாச்சார்யா சினிமாவுக்கு வந்தபோது பலரும் அவரை விட்டல்ராவ் என்று மாற்றிக் கொள்ளச் சொன்னார்களாம். விட்டலாச்சார்யா மறுத்து விட்டார். “இன்று ஆச்சார்யா என்று இருப்பது சினிமாவில் நான் மட்டும்தானே – அதுவே எனக்குப் பெருமைதான்'” என்கிறார் அவர்!.
விட்டலாச்சார்யா பற்றிய ஒரு வியப்பான விஷயம். அவர் சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டுச் சிறை சென்றிருக்கிறார் என்பது பலருக்குத் தெரியாது. ”1942-ல் ‘வெள்ளையனே வெளியேறு’ போராட்டத்தில் ஈடுபட்டு, பெங்களூர் சென்ட்ரல் ஜெயிலில் ஏழு மாதங்கள் சிறைவாசம் அனுபவித்தேன். நாங்கள் நடத்தியது தீவிரப் போராட்டம் என்றாலும், போராட்டத் தலைவர்களின் உத்தரவின் பேரில் மன்னிப்பு கேட்டு வெளியே வந்தோம். மீண்டும் ஒரு தாக்குதலுக்குத் தயாராக இருந்தபோது, காங்கிரஸ் தலைமைக்கும் பிரிட்டிஷ் அரசுக்கும் சமரசம் எங்களது திட்டத்தை நிறுத்த வேண்டியதாயிற்று. மன்னிப்புக் கேட்டு வெளியே வந்த காரணத்துக்காகத் தியாகிகளுக்கான பத்திரம் எனக்கு இல்லையென்றாகி விட்டது. சுதந்திரமடைந்த பின், காந்தியின் வேண்டுகோளுக்கிணங்கி, அரசியலிலிருந்து விலகிவிட்டேன்” என்றார் விட்டலாச்சார்யா.
– பேட்டி. எஸ். விஜயன்