சென்னை: ‘இன்னுயிர் காப்போம் – நம்மைக் காக்கும் 48’ திட்டத்தில் இதுவரை 80 ஆயிரம் பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.
சென்னை போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் இன்னுயிர் காப்போம் – நம்மை காக்கும் 48 திட்டத்தின்கீழ் சிகிச்சைப் பெற்றுவரும் 80 ஆயிரமாவது பயனாளியை இன்று சந்தித்த மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அவருக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் குறித்து கேட்டறிந்தார்.
இதன்பிறகு அமைச்சர் செய்தியாளர்களிடம் கூறுகையில், “கரோனா காலத்தல் முதலமைச்சர் பல்வேறு மருத்துவத் திட்டங்களைத் தொடங்கி வைத்தார். மக்களைத் தேடி மருத்துவம், நடமாடும் மருத்துவமனை, இன்னுயிர் காப்போம் – நம்மைக் காக்கும் -48 திட்டம் போன்ற சிறப்பான மருத்துவச் சேவை வழங்கக்கூடியத் திட்டங்கள் உருவாக்கப்பட்டு பல்லாயிரக்கணக்கான உயிர்கள் காக்கப்பட்டு வருகின்றன.
இன்னுயிர் காப்போம் – நம்மைக் காக்கும் 48 திட்டம் கடந்த ஆண்டு டிசம்பர் 18ம் தேதி தொடங்கி வைக்கப்பட்டது. திட்டம் தொடங்கப்பட்டு கடந்த ஆறு மாதங்களில் அதிகமான விபத்துக்கள் நடக்கும் நெடுஞ்சாலைகள் என 500 இடங்கள் கண்டுபிடிக்கப்பட்டு அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகள் என்று மொத்தம் 669 மருத்துவமனைகளில் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது.
இதற்கு முன்னர் விபத்து நடக்கும்போது, பாதிக்கப்பட்ட நபரை மருத்துவமனையில் சேர்க்க வேண்டுமென்றால் அதற்கு பல்வேறு நடைமுறை சிக்கல்கள், பல்வேறு விவரங்கள் தேவைப்பட்டன. மருத்துவமனையில் சேர்த்துவிட்ட நபர், தொடர்ந்து மருத்துவச் சேவை பாதிக்கப்பட்டவர் பெறுவதற்கு அவருடைய பணிகளைப் பார்க்காமல் செல்ல வேண்டிய நிலை இருந்தது. தற்போது அவையெல்லாம் இல்லாமல் பாதிக்கப்பட்டவரை மருத்துவனையில் சேர்ப்பவருக்கு ஊக்கத்தொகையாக ரூ.5 ஆயிரம் வரை வழங்கப்படுகிறது.
இதுபோன்ற விபத்துக்களிலிருந்து மனித உயிர்களைக் காப்பதற்கு இந்தியாவிலேயே தமிழகத்தில் மருத்துவ சேவை மிகச் சிறப்பாக இத்திட்டத்தின்கீழ் வழங்கப்படுகிறது. அதோடு விபத்தினால் பாதிக்கப்பட்டவர் எந்த நாட்டைச் சேர்ந்தவராக இருந்தாலும், எந்த மாநிலத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும், எந்த மாவட்டத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும் அனைவருக்கும் சிகிச்சை அளிக்கப்படுகிறது.
விபத்து ஏற்பட்ட 48 மணிநேரத்தில் முதல் கோல்டன் ஹவர்ஸ் என்று சொல்லுகின்ற நேரத்தில் உயிர்கள் காக்கப்படுவது செயல்பாட்டில் இருந்து வருகிறது. இத்திட்டத்தின்படி சாலை விபத்து இழப்புகளை குறைத்து, மருத்துவக் காப்பீட்டுத் தொகை ரூ.1 லட்சம் வழங்கப்பட்டு பல்லாயிரக்கணக்கான உயிர்கள் காப்பாற்றப்பட்டு வருகிறது.
கடந்த மாதம் இந்திய சுகாதார துறை மாநாட்டில் கூட இத்திட்டம் வெகுவானப் பாராட்டைப் பெற்றது. இந்திய சுகாதாரத் துறை உயர் அதிகாரிகள் இத்திட்டத்தைப் பற்றி தங்களுக்கும் விளக்கிட வேண்டுமென்றும், இத்திட்டத்தை இந்தியா முழுவதும் கொண்டுசெல்வதற்கு தமிழக அரசின் சுகாதாரத்துறை உதவிட வேண்டுமென்றும் கேட்டுக்கொள்கிற அளவுக்கு இத்திட்டம் வெற்றிப்பெற்றிருக்கிறது.
ராமச்சந்திரா மருத்துவமனையைப் பொறுத்தவரையில் நம்மைக் காக்கும் – 48 இன்னுயிர் காப்போம் திட்டம் கடந்த 6 மாதங்களாக செயல்பாட்டில் உள்ளது. இம்மருத்துவமனையில் விபத்தினால் பாதிக்கப்பட்டு இத்திட்டத்தின்கீழ் சேர்க்கப்பட்ட 80 ஆயிரமாவது பயனாளியைச் சந்தித்து அவருக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் குறித்தும், கடந்த ஆறு மாதங்களாகப் பயனடைந்தவர்களின் விவரங்களையும் அறிந்து இத்திட்டத்தின் மூலம் நூற்றுக்கணக்கான உயிர்களைக் காப்பாற்றிய மருத்துவர்களுக்கும் பாராட்டு தெரிவிக்கப்பட்டுள்ளது.
இத்திட்டத்தின்கீழ் கடந்த 6 மாதங்களாக 80,251 பேர் பயனடைந்திருக்கிறார்கள். விழுப்புரம் அருகே 54 வயதுள்ள சக்திவேல் என்பவர் 80 ஆயிரமாவது விபத்தைச் சந்தித்திருக்கிற நபர். அவரை ராமச்சந்திரா மருத்துவமனையின் நரம்பியல் துறை மருத்துவர்கள் மூலம் அவருக்கு அளிக்கப்படும் சிகிச்சை முறைகள் பற்றி கேட்டறிந்திருக்கிறோம். இத்திட்டத்திற்காக ரூ.72 கோடியே 89 லட்சம் செலவில் 80,251 விபத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு பல்லாயிரக்கணக்கான மனித உயிர்கள் காப்பாற்றப்பட்டுள்ளது.
ராமச்சந்திரா மருத்துவமனையில் கடந்த பிப்.2 முதல் நம்மைக் காக்கும் -48 இன்னுயிர் காப்போம் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதுவரை 421 பேர் விபத்தினால் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் அனைவரும் சிவப்பு, மஞ்சள், ஆரஞ்சு என விபத்தினால் பாதிக்கப்பட்டவர்கள் மிகக் குறைந்த அளவு பாதிக்கப்பட்டவர், மிக அதிகமாகப் பாதிக்கப்பட்டவர் எனப் பிரித்து 74 பேர் ஆபத்தான நிலையில் அனுமதிக்கப்பட்டிருந்தும்கூட ஒரு உயிர்கூட பாதிப்பு இல்லாமல் பாதுகாக்கப்பட்டுள்ளனர். இம்மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிற 421 பேரும் பாதுகாப்பாக உள்ளனர்” என்று அமைச்சர் கூறினார்.