வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
ஆலப்புழா : கேரளாவில், திடீரென அரிவாளால் வெட்ட வந்த ரவுடியை சாதுர்யமாக மடக்கிப் பிடித்து கைது செய்த எஸ்.ஐ.,யின் வீர செயலை, பல்வேறு தரப்பினரும் பாராட்டி வருகின்றனர்.
கேரளாவில், ஆலப்புழா மாவட்டத்தின் காயங்குளம் அருகே, ‘பாரா ஜங்ஷன்’ என்ற இடம் உள்ளது. இப்பகுதியின் போலீஸ் ஸ்டேசனை சேர்ந்த எஸ்.ஐ., அருண்குமார், 12ம் தேதியன்று ஜீப்பில் ரோந்து பணி சென்றார்.
அப்போது இரு சக்கர வாகனத்துடன் சாலை ஓரத்தில் ஒருவர் நின்று கொண்டிருந்தார். அவர் மீது சந்தேகம் ஏற்பட்டதை அடுத்து அருண்குமார் ஜீப்பை நிறுத்திவிட்டு அவரிடம் விசாரிக்க இறங்கினார். அந்த நபர் சற்றும் எதிர்பாராத நேரத்தில், இரு சக்கர வாகனத்தில் மறைத்து வைத்திருந்த பட்டாக் கத்தியை எடுத்து அருண்குமாரை வெட்ட வந்தார்.
முதலில் நிலைகுலைந்த அவர் சமயோசிதமாக அந்த நபரை கீழே தள்ளி, அவர் மீது அமர்ந்து பட்டாக்கத்தியை பிடுங்கினார். பின் அந்த ரவுடியை கைது செய்து அழைத்து சென்றார். இந்த காட்சி அனைத்தும் அங்கிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவானது. இதை ஐ.பி.எஸ்., அதிகாரி ஸ்வாதி லக்ரா என்பவர் தன் சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டு, ‘இவர் தான் நிஜ ஹீரோ’ என, எஸ்.ஐ., அருண்குமாரை பாராட்டி உள்ளார்.
இந்த, ‘வீடியோ’ பல்வேறு சமூக வலைதளங்களிலும் வேகமாக பரவி, பலரது பாராட்டுகளை குவித்து வருகிறது. இந்த சம்பவத்தில் அருண்குமாரின் கையில் ஏற்பட்ட வெட்டு காயத்துக்கு எட்டு தையல் போடப்பட்டுள்ளது.
Advertisement