புதுடெல்லி: நேஷனல் ஹெரால்டு வழக்கில் அமலாக்கத் துறை விசாரணைக்காக காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி இன்று (ஜூன் 20) மீண்டும் ஆஜராகிறர்.
நேஷனல் ஹெரால்டு பத்திரிகையின் பங்குகள் யங் இந்தியா நிறுவனத்துக்கு கைமாறியதில் முறைகேடு நடந்ததாக 2012-ம் ஆண்டு பாஜக மூத்த தலைவர் சுப்ரமணியசாமி வழக்குத் தொடர்ந்தார். இந்த விவகாரத்தில் சட்ட விரோத பணப்பரிமாற்றம் தொடர்பாக விசாரணை நடத்திவரும் அமலாக்கத்துறை, காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தி மற்றும் காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி ஆகியோருக்கு சம்மன் அனுப்பியது.
இதனையடுத்து, கடந்த வாரம் ஜூன் 13 முதல் ஜூன் 15 வரை ராகுல் காந்தியிடம் தொடர்ச்சியாக 30 மணி நேரம் விசாரணை நடைபெற்றது. ராகுல் காந்தி விசாரணைக்கு உட்படுத்தப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் கட்சியினர் போராட்டம் நடத்தினர். இந்நிலையில் தாய் சோனியா காந்தியின் உடல்நிலையை சுட்டிக்காட்டி ராகுல் காந்தி இரண்டு நாட்கள் விசாரணைக்கு ஆஜராவதிலிருந்து விலக்கு பெற்றிருந்தார். இந்நிலையில் இன்று 4வது நாளாக விசாரணைக்கு ஆஜராகிறார். ராகுலின் பதில்கள் திருப்தி அளிக்காததால் நேற்றும் அவரிடம் விசாரணை நடத்த அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணையைத் தொடர்வதாகத் தெரிகிறது.
முன்னதாக ராகுல் காந்தி விசாரணைக்கு ஆஜரானபோது, டெல்லியில் காங்கிரஸ் எம்.பி.க்கள், தொண்டர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது காங்கிரஸ் எம்.பி.க்களை போலீஸார் தாக்கியதாகவும் இது தொடர்பாக தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரி மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா, மாநிலங்களவைத் தலைவர் வெங்கய்ய நாயுடு ஆகியோரை காங்கிரஸ் எம்.பி.க்கள் நேற்று சந்தித்து கடிதம் அளித்தது குறிப்பிடத்தக்கது.
அக்னிபாதையை எதிர்த்துப் போராட்டம்: விசாரணை ஒருபுறம் இருக்க, மத்திய அரசு கொண்டுவந்துள்ள அக்னிபாதை திட்டத்துக்கு எதிராக நாடு முழுவதும் உள்ள காங்கிரஸ் தொண்டர்கள் அமைதி வழியில் போராட்டத்தில் ஈடுபடுவார்கள் என்று மூத்த தலைவரும் காங்கிரஸ் பொதுச் செயலாளரும், தலைமை செய்தித் தொடர்பாளருமான ஜெய்ராம் ரமேஷ் கூறியிருக்கிறார். இது தொடர்பாக காங்கிரஸ் உயர்மட்டக் குழு ஒன்று இன்று மாலை குடியரசுத் தலைவரை சந்தித்து தங்களின் கோரிக்கைகளை தெரிவிக்கும் என்றும் கூறினார்.