டெல்லி: நேஷனல் ஹெரால்டு வழக்கில் காங்கிரஸ் எம்.பி.ராகுல் காந்தி டெல்லியில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் இன்று 4வது நாளாக ஆஜரானார். நேஷனல் ஹெரால்டு விவகாரம் தொடர்பாக ஏற்கனவே 3 நாட்கள் விசாரணை நடத்திய நிலையில் அமலாக்கத்துறை அலுவலகத்தில் ராகுல் காந்தி மீண்டும் ஆஜரானார். நேஷனல் ஹெரால்டு பத்திரிகையை விலைக்கு வாங்கிய நிறுவனத்தின் பங்குகளை பெற்றதில் மோசடி நடந்ததாக 2012-ம் ஆண்டு பாரதிய ஜனதாவின் சுப்பிரமணிய சுவாமி வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கு நிலுவையில் இருக்கும் நிலையில், சட்டவிரோத பணப்பரிமாற்றம் நடந்திருப்பதாக அமலாக்கத்துறையும் 2014-ம் ஆண்டு முதல் விசாரணை நடத்தி வருகிறது. விசாரணைக்கு ஆஜராகுமாறு சோனியாகாந்திக்கும், ராகுல்காந்திக்கும் அமலாக்கத்துறை சம்மன் அனுப்பிய நிலையில் கொரோனா காரணமாக சோனியா ஆஜராகவில்லை. ராகுல் காந்தி விசாரணைக்கு உட்படுத்தப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் கட்சியினர் இந்தியா முழுவதும் பல்வேறு இடங்களில் போராட்டம் நடத்தினர். இந்நிலையில் தாய் சோனியா காந்தியின் உடல்நிலையை சுட்டிக்காட்டி ராகுல் காந்தி இரண்டு நாட்கள் விசாரணைக்கு ஆஜராவதிலிருந்து விலக்கு பெற்றிருந்த நிலையில், இன்று அமலாக்கத்துறை முன் 4வது நாளாக விசாரணைக்கு ஆஜரானார். முன்னதாக ராகுல் காந்தி விசாரணைக்கு ஆஜரானபோது, டெல்லியில் காங்கிரஸ் எம்.பி.க்கள், தொண்டர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது காங்கிரஸ் எம்.பி.க்களை போலீஸார் தாக்கியதாகவும் இது தொடர்பாக தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரி மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா, மாநிலங்களவைத் தலைவர் வெங்கய்ய நாயுடு ஆகியோரை காங்கிரஸ் எம்.பி.க்கள் சந்தித்து கடிதம் அளித்தது குறிப்பிடத்தக்கது.