”பணம் செலுத்திய பிறகும் நோட்டீஸா?”..குடும்பத்துடன் நடிகர் ஹலோ கந்தசாமி போலீசில் புகார்!

கமுதி அருகே வங்கி மூலம் மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு கொடுக்கப்பட்ட கடன் தொகையை செலுத்திய பின்னரும் மீண்டும் கடன் தொகை செலுத்த நோட்டீஸ் வந்ததால் அதிர்ச்சி அடைந்த நடிகர் ஹலோ கந்தசாமி குடும்பத்தினர், மோசடியில் ஈடுபட்ட நபர்மீது நடவடிக்கை எடுக்க எஸ்பி அலுவலகத்தில் புகார் அளிக்கவந்தனர். 
ராமநாதபுரம் மாவட்டம் கமுதி பகுதியில் ‘களஞ்சியம்’ என்ற தனியார் அமைப்பு மூலம் 50க்கும் மேற்பட்ட மகளிர் சுய உதவி குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. அதன்மூலம் பெருநாழி கிராமத்திலும் ஏழு மகளிர் சுய உதவி குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு குழுக்களின் பெயரிலும் ஐந்து லட்ச ரூபாய் வரை தனியார் வங்கி மூலம் கடன் வாங்கித்தருவதாகக் கூறி, மகளிர் சுய உதவிக்குழு பெண்களிடம் அனைத்து ஆவணங்களையும் பெற்றுள்ளானர். மேலும் வங்கியில் 5 லட்ச ரூபாய் கடனை வாங்கி ஒவ்வொரு குழுக்களுக்கும் இரண்டு லட்சத்து பத்தாயிரம் ரூபாய் மட்டும் கொடுத்துள்ளனர். கொடுக்கப்பட்ட அந்த பணத்திற்கு களஞ்சியம் தனியார் நிறுவனத்தில் ஒவ்வொரு மாதமும் குறிப்பிட்ட தொகையையும் பணத்தை வாங்கியவர்கள் செலுத்தி வந்துள்ளனர். 
image
இந்த நிலையில் கடந்த 2013ஆம் ஆண்டு மகளிர் சுய உதவி குழுக்கள் பெற்ற கடனை களஞ்சியம் தனியார் நிறுவனத்திடம் முழுமையாக செலுத்தி விட்டதாகவும் தற்போது வங்கி மூலம் தங்களது மகளிர் சுய உதவி குழுக்கள் மூலம் பெற்றக்கடனை வட்டியும் முதலுமாக செலுத்த வேண்டும் என்று நீதிமன்றம் மூலம் வங்கி நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இதனைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த மகளிர் சுய உதவி குழுக்கள், தாங்கள் வாங்கிய கடன் தொகையை களஞ்சியம் நிறுவனத்திடம் முழுமையாக கட்டிய பின்னர், தற்போது மீண்டும் கட்டச்சொல்லி நோட்டீஸ் வந்திருப்பதை அடுத்து என்ன செய்வதென்று தெரியாமல் விழி பிதுங்கி உள்ளனர்.
இதில் நடிகர் ஹலோ கந்தசாமியின் மனைவி சந்தானமேரியும் ஒருவர். இந்த நோட்டீஸை பெற்றபின்னரே களஞ்சியம் நிறுவனம் மோசடியில் ஈடுபட்டுள்ளது அவர்களுக்கு தெரியவந்துள்ளது. இதனையடுத்து அவர்கள்மீது உரிய நடவடிக்கை எடுக்கவேண்டி ஹலோ கந்தசாமி, தனது மனைவி மற்றும் மற்ற மகளிர் சுயஉதவி குழுகளில் உள்ள பெண்கள் அனைரும் இணைந்து ராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தங்கதுரையிடம் புகார் கொடுக்க வந்தனர்.
image
இதன்மூலம் மகளிர் சுய உதவிக்குழு பெண்கள் மிகுந்த மன உளைச்சல் அடைந்துள்ளதாகவும், மோசடியில் ஈடுபட்ட நபர்கள்மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் நடிகர் ஹலோ கந்தசாமி மற்றும் மகளிர் சுயஉதவி குழு பெண்கள் வலியுறுத்தியுள்ளனர். மேலும் இதேபோன்று பல்வேறு மகளிர் சுய உதவி குழுக்களின் பெயரில் பல லட்சம் ரூபாயை தனியார் நிறுவனங்கள் மோசடி செய்துவருவதாகவும் குற்றம்சாட்டியுள்ளனர்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.