இந்தியாவில் ஜனாதிபதி தேர்தல் நடக்கவுள்ள நிலையில் பிரான்சில் ஏப்ரல் மாதம் அதிபர் தேர்தல் விறுவிறுப்பாக நடந்து முடிந்தது. அந்தத் தேர்தலில் முன்னாள் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் தொடர்ந்து இரண்டாவது முறையாக அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். கடந்த இரண்டு பத்தாண்டுகளில் ஒரு பிரெஞ்சு அதிபர் தொடர்ந்து இரண்டாவது முறை அதிபராக தேர்ந்தெடுக்கப்படுவது இதுவே முதல் முறை.
இந்நிலையில் பிரான்ஸ் நாடாளுமன்ற தேர்தல் இரண்டு கட்டமாக ஜூன் 12-ம் தேதியும் ஜூன் 19-ம் தேதியும் நடந்தது. இத்தேர்தலில் மேக்ரான் தலைமையிலான ஆளும் கூட்டணி பெரும்பான்மையுடன் வெற்றிபெற்றால் மட்டுமே அவரால் அரசை நல்லமுறையில் வழிநடத்தி செல்லமுடியும் என்ற நிலை ஏற்பட்டது.
பிரான்ஸ் நாடாளுமன்ற தேர்தலின் முதல் சுற்றான கடந்த 12-ம் தேதி வாக்குப்பதிவு மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்றது. தேர்தல் முடிந்தவுடனே வாக்குகளும் எண்ணப்பட்டன. இதில் மேக்ரான் தலைமையிலான ஆளும் கூட்டணி முன்னிலை பெற்றிருந்தது. இருந்தும் ஜீன்லூக் மெலன்சோன் தலைமையிலான இடதுசாரி கூட்டணி வியக்கத்தக்க வகையில் அதிக இடங்களைக் கைப்பற்றியது.
இதனால் 2-வது சுற்றுத் தேர்தலில் மேக்ரானின் கூட்டணி 289 இடங்கள் என்ற பெரும்பான்மைக்கான எண்ணிக்கையை எட்டவேண்டும் என்ற நிலை உருவானது.
இந்நிலையில் நேற்று இரண்டாவது சுற்றுத் தேர்தல் நடந்தது. இந்தத் தேர்தல் முடிவில் பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் 245 இடங்களை மட்டுமே பெற்று பெரும்பான்மையை இழந்துள்ளார். இதனால் அரசைத் தக்க வைத்துக்கொள்ள பிரான்ஸ் அதிபர் தனது கூட்டணியை பெருக்கிக்கொள்ள வேண்டும் என்கிற நிலை உருவாகியுள்ளது.
பிரான்ஸ் நிதி அமைச்சர் இந்தத் தேர்தல் முடிவுகளை ‘ஜனநாயக அதிர்ச்சி’ என்று குறிப்பிட்டுள்ளார். இருந்தும் அவர்களின் ஆட்சி தொடரும் என்று நம்பிக்கைத் தெரிவித்துள்ளார்.