தாவோ: பிலிப்பைன்ஸ் நாட்டின் துணை அதிபராக ரோட்ரிகோ டுட்ரேட் மகள் சாரா டுட்ரேட் பதவி ஏற்றுக் கொண்டார்.
பிலிப்பைன்ஸ் நாட்டின் அதிபர் ரோட்ரிகோ டுட்ரேட் சர்ச்சைகளின் நாயகர். இவர் பிலிப்பைன்சில் யாரேனும் போதைப் பொருட்களைப் பயன்படுத்தினாலும், விற்றாலும் அவர்களை சுட்டுக் கொல்ல ஆணை பிறப்பித்தவர். சட்டம் என்ன சொல்கிறது என்பதைப் பற்றி டுட்ரேட் அச்சம் கொண்டது இல்லை. இதன் காரணமாக உலகம் முழுவதிலுள்ள மனித உரிமை அமைப்புகள் இவருக்கு வலுவான் கண்டனங்கள் தெரிவித்து வந்தன.
மனித உரிமை ஆர்வலர்களின் பேச்சை இவர் துளியும் சட்டை செய்வதில்லை. இந்த சட்ட விரோதக் கொலை செய்வதற்கென்றே தனியாக ஒரு கும்பலை இவர் வைத்திருக்கிறார். 72 வயதாகும் ரோட்ரிகோ டுட்ரேட் ஆட்சிக்கு பிலிப்பைன்ஸில் கடுமையான எதிர்ப்பு எழுந்தது,
இந்நிலையில், அடுத்த தேர்தலில் தான் போட்டியிடப் போவதில்லை எனத் தெரிவித்தார். ஆனால், அதேவேளையில் தனது மகள் துணை அதிபராக போட்டியிடுவார் எனவும் கடந்த ஆண்டு தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து ரோட்ரிகோ டுட்ரேட் மகளான 43 வயதான சாரா, லாகாஸ் கிறிஸ்துவ முஸ்லிம் ஜனநாயக கட்சியின் சார்பாக போட்டியிட்டார். இதில் வெற்றி பெற்ற சாரா டாவோவில் பிலிப்பைன்ஸின் 15-வது துணை அதிபராக பதவி ஏற்றார்.
அரசியலில் 10 வருடங்களுக்கு மேலாக அனுபவமுள்ள சாரா தாவோ நகரின் மேயராக 2016-ஆம் ஆண்டு முதல் இருந்து வருகிறார்.
பதவி ஏற்பில் சாரா பேசும்போது, “3 கோடிக்கும் அதிகமான பிலிப்பைன்ஸ் மக்களின் குரல் எனக்கு கேட்டது. சிறப்பாக பணியாற்றுங்கள் என்று கூறினார்கள்” என்று தெரிவித்தார்.
பதவி ஏற்பு நிகழ்வில் ரோட்ரிகோ டுட்ரேட் கலந்து கொண்டார். பிலிப்பைன்ஸில் மனித உரிமை மீறல்களுக்கு ரோட்ரிகோ டுட்ரேட் கடுமையாக விமர்சிக்கப்பட்டு வந்த நிலையில் சாரா துணை அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்