KP Munusamy says ADMK General Committee meeting will held as per schedule: அ.தி.மு.க பொதுக்குழு கூட்டம் திட்டமிட்டப்படி நடைபெறும் என அ.தி.மு.க துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி கூறியுள்ளார்.
அ.தி.மு.க.,வில் ஒற்றைத் தலைமை விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ளது. ஓ.பி.எஸ் மற்றும் இ.பி.எஸ் இருவரும் தனித்தனியாக தங்கள் ஆதரவு நிர்வாகிகளுடன் ஆலோசனையில் ஈடுபட்டு வருகின்றனர். இதற்கிடையில் அ.தி.மு.க பொதுக்குழு தீர்மானங்கள் குறித்த ஆலோசனை கூட்டத்தில் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கலந்துக் கொண்டார். இருப்பினும் ஒற்றைத் தலைமை விவகாரம் பூதாகரமாக மாறியது. பல்வேறு நிர்வாகிகளும் ஓ.பி.எஸ் மற்றும் இ.பி.எஸ்-ஐச் சந்தித்து தங்கள் ஆதரவைத் தெரிவித்து வந்தனர். கட்சியின் மூத்த நிர்வாகிகள் சிலர் இருதரப்பினரையும் சமாதானப்படுத்த முயற்சித்து வருகின்றனர்.
இதையும் படியுங்கள்: இ.பி.எஸ்-க்கு ஓ.பி.எஸ் அவசர கடிதம்: பொதுக்குழுவை தள்ளிவைக்க கோரிக்கை
இந்தநிலையில், அ.தி.மு.க பொதுக்குழுவை தள்ளிவைக்க கோரி, ஒருங்கிணைப்பாளர் ஓ.பிஎஸ், இணை ஒருங்கிணைப்பாளர் இ.பி.எஸ்-க்கு கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் தற்போது நிலவி வரும் சூழ்நிலையை கருத்தில் கொண்டு கழகத்தின் நலன் கருதி 23.06.2022 அன்று நடைபெற உள்ள செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டத்தை தற்போது தள்ளி வைக்கலாம். அடுத்த கூட்டத்திற்கு இடம், நாள் மற்றும் நேரத்தை கழக ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் ஆகிய நாம் இருவரும் கலந்து ஆலோசித்து முடிவு செய்யலாம் என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்தக் கடிதம் வெளியான நிலையில், செய்தியாளர்களைச் சந்தித்த துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி, அ.தி.மு.க பொதுக்குழுக் கூட்டம் திட்டமிட்டப்படி ஜூன் 23 ஆம் தேதி நடைபெறும். ஸ்ரீவாரு மண்டபத்தில் எழுச்சியுடனும், மகிழ்ச்சியுடனும் பொதுக்குழு நடைபெறும். மாவட்டச் செயலாளர்கள் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் அனைவருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அ.தி.மு.க.,வின் பெரும்பாலான மூத்த தலைவர்கள் பொதுக்குழு கூட்டத்தை நடத்த ஆதரவாக உள்ளனர். ஒரு சில குழப்பவாதிகள் மட்டுமே தங்கள் தேவைகளை பூர்த்தி செய்வதற்காக குழப்பம் விளைவிக்க முயற்சிக்கின்றனர்.
எடப்பாடி பழனிச்சாமிக்கு ஓ.பன்னீர்செல்வம் அனுப்பிய கடிதம் எதுவும் எங்களுக்கு கிடைக்கவில்லை. ஓ.பி.எஸ் அனுப்பிய கடிதம் இ.பி.எஸ்-க்கு கிடைக்கப் பெற்றிருந்தால், அவர் எங்களிடம் தெரிவித்திருப்பார்.
பொதுக்குழு தீர்மானங்கள் தொடர்பான ஆலோசனையில் ஓ.பி.எஸ் கலந்துக் கொண்டார். அப்போது அ.தி.மு.க உட்கட்சி தேர்தலை சுட்டிக்காட்டி, சிறப்பு அழைப்பாளர்களை அழைக்க வேண்டாம் என ஓ.பி.எஸ் கூறினார்.
பொதுக்குழுவில் ஒற்றை தலைமை குறித்த தீர்மானம் கொண்டுவரப்படுமா என்பது குறித்து இப்போது எதுவும் கூற முடியாது. அ.தி.மு.க பொதுக்குழுவுக்கு ஒருங்கிணைப்பாளர் ஓ.பி.எஸ் உறுதியாக வருவார். பொதுக்குழுவில் பங்கேற்று ஓ.பி.எஸ் தனது கருத்துக்களை எடுத்துரைப்பார். பொதுக்குழுவில் எடுக்கும் முடிவுகளை ஓ.பி.எஸ் மற்றும் இ.பி.எஸ் இருவரும் ஏற்றுக் கொள்வார்கள், என்று கூறினார்.